

காலை ஒன்பது மணி. நான் பள்ளி வளாகத்திற்குள் நுழையும்போது அந்த இருவரும் வெளியே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். இந்த நேரத்தில் பிள்ளைகளைப் பள்ளியில் விட வரும் பெற்றோர்தான் நின்றுகொண்டிருப்பார்கள். இவர்கள் இருவரும் பெற்றோர் அல்ல. யாராக இருக்கும் என்கிற யோசனை ஒரு கணம்தான் தோன்றி மறைந்தது. பின்னர் பள்ளியும் பிள்ளைகளும் முழுமையாகச் சிந்தனையை ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.
காலை வழிபாட்டுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தாமதமாக வரும் பிள்ளைகள் சிலர் வழக்கம்போலக் கதவுகளுக்கு வெளியே நின்றிருந்தார்கள். கவனித்தபோது அவர்களுக்குப் பின்னால் அந்த இருவரும் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மனதிற்குள் சிறியதொரு எச்சரிக்கை மணி அடித்தது. எந்தப் பிள்ளையையாவது தூக்கிப் போக வந்திருப்பார்களோ? இருவரையும் இதற்கு முன் பார்த்தது போல்தான் தெரிகிறது. இருந்தாலும் கொஞ்சம் கவனமாய் இருந்துகொள்ளத்தான் வேண்டும்.