

மனிதர்களின் சிந்தனை அவரவர் தாய்மொழியில்தான் நிறைவாக அமையும் என்பதற்கு வலுசேர்க்கும் வகையிலும் மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதுவது சாத்தியமே என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது ‘தலைக்காயம்’ நூல். இந்த நூலை எழுதியிருக்கும் மரு. ஆ. திருவள்ளுவன், அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்றவர். சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் அறுவை சிகிச்சை கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றிய இவர், தலைக்காயம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறவும் மூளை உள்ளிட்ட சிக்கலான உறுப்புகள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் நோக்கிலும் எளிய நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார். படங்களுடன் கூடிய விரிவான விளக்கங்கள் மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு உதவும். பள்ளி மாணவர்களோடு அறிவியலில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த நூலை வாசிக்கலாம்.
மூளை, நரம்பு, எலும்பு தொடர்பான அனைத்து உறுப்புகளுக்கும், மருத்துவச் சொற்களுக்கும் இணையான ஆங்கிலச் சொற்களை நூலின் ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கிறார். 544 சொற்கள் அடங்கிய அருஞ்சொற் பட்டியலுக்காகவே நூலாசிரியரைப் பாராட்டலாம். மருத்துவம் தொடர்பான நூல்களைப் பொதுமக்களால் புரிந்துகொள்ள இயலாது என்கிற கற்பிதத்தைக் களையும் வகையிலும் இந்நூல் அமைந்திருக்கிறது. நாம் புரிந்துகொள்ள, அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள என ஒவ்வொரு வகைமைக்கும் இதில் தகவல்கள் உண்டு.