

‘‘நள்ளிரவில் பெற்றோம், இன்னும் விடியவே இல்லை" என்பது ஒரு பிரபல புதுக்கவிதை வரி. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஆனால், நாட்டின் எல்லைப் பகுதிகளில் மக்கள் இன்னமும்கூட மௌனமாக அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள். பரந்துவிரிந்த இந்த நாட்டின் எல்லைகள், அப்பகுதிகளில் வாழும் மக்களின் இருதலைக்கொள்ளி வாழ்க்கை நிலை, மக்களை மனிதர்களாகக் கருதாத-நடத்த விரும்பாத அரசுகள் உள்ளிட்டவற்றைப் பற்றி விரிவான இந்த நூலை வழக்குரைஞரும் பத்திரிகையாளருமான சுசித்ரா விஜயன் எழுதியுள்ளார். அவருடைய கள அனுபவங்கள் எழுத்தை சீராகச் செதுக்கியுள்ளன.
எல்லையில் வாழ்வதாலேயே சபிக்கப்பட்ட மக்கள், காலணி ஆட்சியாளர்கள் அவசர அவசரமாகக் கிழித்த கோட்டால் எந்த நாட்டின் குடியுரிமையும் கிடைக்காமல் அல்லல்படும் மக்கள், நாட்டில் நிலவும் மதவாதப் போக்கால் நெருக்கடிக்குத் தள்ளப்படும் சிறுபான்மையினர் எனப் பல்வேறு அம்சங்களை இப்புத்தகம் ஆராய்கிறது. இதுபோன்ற நூல்கள் ஆங்கிலத்தில் வெளியான குறுகிய காலத்தில் நம் மொழியை வந்தடைவது வரவேற்புக்குரிய அம்சம். - அன்பு