

கடந்த மார்ச் மாதம் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். நான் வழக்கமாக ஒன்பது மணிக் கெல்லாம் பள்ளியில் இருப்பவள். அன்றைக்கு உறவினர் ஒருவர் திருமணப் பத்திரிக்கை வைக்க வந்துவிட்ட படியால் வீட்டில் இருந்து கிளம்பவே ஒன்பது ஐந்துபோல ஆகிவிட்டது. ஆறேழு நிமிடங்களில் சென்றுவிடலாம் என்கிறபோதும் மனதில் மெலிதாக ஒரு படபடப்பு ஏற்பட்டிருந்தது.
மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் திறனறித் தேர்வுபோல ஏதோ ஒரு தேர்வை நடத்த வெளியிலிருந்து ஆசிரியர்கள் வருவதாக இருந்தது. இன்றைக்கென்று பார்த்துத் தாமதமாகச் செல்கிறோமே என்கிற பதற்றம்தான் அது. அந்தத் தேர்வின் பொருட்டுச் செய்யவேண்டிய முன்னேற்பாடுகளை எல்லாம் முந்தைய நாளிலேயே செய்து விட்டேன். இருந்தபோதும் மறந்து போனவை ஏதாவது இருக்கின்றனவா என்கிற சிந்தனையுடன் எனது இரு சக்கர வாகனத்தில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தேன்.