

“படிக்கிற பசங்களைக் கடகன்னி வேலக்கி அனுப்புறது, ஆடு மாடு மேய்க்க விடுறதுன்னு அப்பன் ஆத்தாவே புள்ளைங்க படிப்புல மண்ண வாரிக் கொட்டு றப்ப நம்ம என்ன செய்வோம்? பயலுவ இருக்குற எடம் தேடிப் போயி புத்திமதிய சொல்லிக் கூப்பிட்டுப் பாப்போம். மாசக் கணக்குல வரலன்னாலும் ஒரு பயலயும் நாம பேர நீக்குறது கெடையாது. என்னைக்காவது ஒருநாளு நல்ல புத்தி வந்து பள்ளிக்கு வருவானுங்க. அப்ப பள்ளிக்கூடத்துல நம்ம பேரு இல்லேன்னு தெரிஞ்சி திரும்பிப் போயிடக் கூடாதுன்னு பேரை மட்டும் காப்பாத்தி வச்சிக்கிட்டு வருவோம்ல?” அவர் வார்த்தைகளை ஆமோதிப் பதுபோலத் தலையசைத்தார் ரேவதி டீச்சர்.
“ஆனா கிருஷ்ணமூர்த்தி வாத்தி யாரு என்ன செய்துட்டாருன்னா ஆய்வுக்கு வர்ற அதிகாரிகிட்ட மாட்டி, கெட்ட பேரு வாங்கக் கூடாதுன்னு நெனச்சி, இந்த ஆறு பயலுகளோட பேரையும் அப்பயே நீக்கிட்டாரு. இந்த விஷயம் அவனுங்களுக்கும் தெரிஞ்சிபோச்சி. அதுக்குப் பெறகு அவனுங்க படிப்பப் பத்தி எதுக்கு யோசிக்கப் போறானுங்க? எடுபுடிவேல செய்யிறதவிட்டு ஒவ்வொரு லைனுக்கும் அவனுங்க ஆறு பேரும் தனித்தனியாவே ஓட ஆரம்பிச்சிட்டானுங்க. மழை, காத்தா இருந்தாலும் ராத்திரி பகலா இருந்தாலும் எல்லாத்தையும் இவனுங்களே பாத்துக் கிட்டாய்ங்களாம்.