

புஷ்பராணி, ‘அகாலம்’ நூலின் வழி கவனம் பெற்றவர். ஈழப் போராட்டத்தில் பங்குகொண்ட முதல் தலைமுறைப் போராளிகளில் முக்கியமானவர். இதனால் சிறை சென்ற அனுபவமும் கொண்டவர். புஷ்பராணியின் தொகுக்கப்படாத கட்டுரைகள், எழுத்துகள், கதைகள் போன்றவை தொகுக்கப்பட்டு புதிய நூலாக வெளிவந்துள்ளது. புஷ்பராணி, ஈழ விடுதலைப் போராட்டம் என்பதைத் தாண்டி சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை உள்ளவராக இருந்துள்ளார். அதற்கு இந்நூலின் எழுத்துகள் சாட்சியமாகின்றன.
முதல் கட்டுரை, அயல் நாட்டில் வாழும் ஒரு பெண்ணின் பாட்டைச் சொல்கிறது. ஒரு புனைவைப் போல எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு இந்தியப் பெண்ணின் மன நிலையைச் சித்தரித்துள்ளார் புஷ்பராணி. கடுங்குளிர் நிலவும் தேசத்தில் நள்ளிரவில் மனைவியைக் கட்டாயமாக வெளியில் தள்ளிக் கதவடைக்கும் மிருகத்தனமான கணவனுடன் அந்தப் பெண் வாழ்கிறாள் என்பதைச் சொல்லும்போது மனம் அவ்வளவு துன்பப்படுகிறது.