Published : 28 Jul 2018 09:30 AM
Last Updated : 28 Jul 2018 09:30 AM

வெறுப்பு அடங்கும் காலம் வரும்!

மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ், ‘மாத்ருபூமி’ இதழில் எழுதிவந்த ‘மீசை’ நாவல் தொடரை மூன்றாம் அத்தியாயத்தோடு நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவ்விதழுக்கு எழுதிய கடிதத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ‘நாவலின் ஒரு பாகத்தை மட்டும் பிரித்தெடுத்து சிலர் மோசமான பிரச்சாரத்துக்கு உபயோகிக்கிறார்கள்’ என்பதுதான் அதில் முக்கியமான விஷயம். அதாவது, நாவலில் இரண்டு பாத்திரங்களின் உரையாடலாக வரும் ஒரு பகுதியை மட்டும் தனித்துக் காட்டிப் பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

உரையாடலை நாவலாசிரியர்கள் பல நோக்கங்களுக்குப் பயன்படுத்துவர். அதில் ஒன்று பொதுப்புத்தி சார்ந்து நிலவும் அபிப்ராயங்களை வெளிப்படுத்துவதாகும். சமூகப் பொதுமனதை விமர்சிக்கக் கையாளும் உத்தி இது. அலங்கரித்துக்கொண்டு கோயிலுக்குச் செல்லும் பெண்களைக் குறித்து இரண்டு ஆண்கள் பேசிக்கொள்வதாக ‘மீசை’ நாவலில் வரும் உரையாடலும் இத்தகைய விமர்சன உத்தியாகவே இருக்கும் எனக் கருதுகிறேன். பிரச்சாரத்துக்கு உபயோகிப்பவர்களுக்கு நாவலில் வரும் பகுதி ஓர் உரையாடல் என்பதும் அதன் நோக்கம் என்னவென்பதும் தெரிந்தே இருக்கும். ஆனாலும், ‘இது தமது செல்வாக்கைப் பரவலாக்கிக்கொள்ளும் பிரச்சாரத்துக்குப் பயன்படும்’ என்பதை அறிந்தே இப்படி செய்திருப்பார்கள்.

பொதுத்தளத்தில் நிலவும் மிகை உணர்ச்சிகளைச் சுரண்ட ஏதுவான பிரச்சினை ஒன்றை உருவாக்குவதன் மூலம் தம் இருப்பைக் காட்டிக்கொள்ளும் தந்திரம் இது. சாதாரணமாகக் கடந்துசெல்ல வேண்டிய ஒன்றை ஊதிப் பெருக்கிப் பெருக்கி பூதாகாரமாக்கி அதன் மூலம் தம்மை நிலைப்படுத்திக்கொள்ளும் மலினமான வித்தையும் இது. இச்சூழலில் ஹரீஷ் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் கடுமையானவை. சமூக ஊடகங்களில் அவரைக் கேவலப்படுத்தியும் சின்னக் குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தாரை இழிவுபடுத்தியும் தொடர் பதிவுகள் வந்திருக்கின்றன. அதிகாரத்தில் திளைப்பதைத் தவிர எத்தகைய அறநெறிகளுக்கும் தார்மீக உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காத இதயங்களிலிருந்து உருவாகும் அந்தக் கொடுங்கூற்றுகளை எதிர்கொள்ள கல் மனம் வேண்டும். எழுத்தாளருக்கு அது சாத்தியமில்லை. நாவலைப் பிரசுரிப்பதிலிருந்து பின்வாங்குவதாகவும் உடனே நூலாகப் பிரசுரிக்கும் எண்ணமில்லை என்றும் ஹரீஷ் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவைத் தவிர விவேகமானது ஏதுமில்லை. தம் நாவலின் சில வாக்கியங்களை வைத்துப் பெரும் பலன் அடைய முயலும் சக்திகளுக்கு அத்தகைய வாய்ப்பைக் கொடுக்காமல் தவிர்க்கும் சமயோசிதமான முடிவும்கூட.

மேலும், தொந்தரவுக்குள்ளாக்கியவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு முயலவில்லை என்றும் இங்குள்ள நீதி நியாயச் சட்டத்தில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை இழக்கத் தயாரில்லை என்றும் அவர் கூறுகிறார்.

 இது நம் நீதி அமைப்பின் மீதான கடும் விமர்சனம். நீதிமன்ற நடைமுறைகள் சாதாரணக் குடிமகனை அலைக்கழிக்கும் தன்மை கொண்டவை. ஒருமுறை நீதிமன்றப் படியேறியவர் இன்னொருமுறை அந்தப் பக்கம் செல்லவே அஞ்சும் நிலைதான் இருக்கிறது. எழுத்தாள மனோபாவத்துக்கு இந்த நடைமுறைகள் மிகவும் எதிரானவை; அந்நியமானவை. பொறிக்குள் சிக்கிய எலி ஆக யார்தான் விரும்புவார்கள்?

அவரது கடிதத்தில் ‘நாட்டை ஆளும் வர்க்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கான பலம் என்னிடமில்லை’ என்று தெரிவிக்கிறார். இதுதான் நிதர்சனம். அமைப்பு பலமோ கட்சிப் பின்னணியோ இல்லாத தனிமனிதராகவே பெரும்பாலான எழுத்தாளர்கள் உள்ளனர். ஆகவே, ஆளும் வர்க்கத்துக்கு எதிராகப் போராடும் பலமோ எழுத்தைத் தவிர்த்த வேறு வழிகளோ எழுத்தாளருக்குக் கிடையாது என்பதே உண்மை.

அவரது சிறுவயது முதல் மனதில் கிடந்து கடந்த ஐந்து ஆண்டு கால உழைப்பில் உருவான ‘மீசை’ நாவலை நூலாக்குவது பற்றி அவர் ‘சமூகத்தின் வெறுப்பு அடங்கி அது ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றும்போது வெளியிடுவேன்’ என்று கூறியுள்ளார். வாழ்க்கை பற்றிய பரிசீலனையே இலக்கியம் என்று உணராத சமூகம் இது. அவ்விதம் உணர்ந்தால் எழுத்தாளர் எழுதியது தமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மனதுக்குள் வைத்துப் பரிசீலிக்கும் எண்ணம் உருவாகும்.

மனித மனதில் எல்லா வகைக் குணங்களும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றன. அவற்றில் வெறுப்பையும் கசப்பையும் பிரித்தெடுத்து வளர்க்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். வெறுப்பும் கசப்பும் எதையும் பரிசீலிக்கவோ விவாதிக்கவோ அனுமதிப்பதில்லை. பரிசீலனையற்ற சமூகத்துக்கு எழுதத்தான் வேண்டுமா என்னும் எண்ணம் தோன்றுவது இயல்பானதுதான்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஹரீஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடவே, மாநில ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஆதரவு தெரிவித்திருப்பது நல்ல சமிக்ஞை. நாடெங்கிலுமிருந்து அவருக்குக் கிடைக்கும் ஆதரவு அவரது தனிமை உணர்வைப் போக்கி மன பலத்தைக் கொடுக்கக் கூடும்.

இப்போதைக்கு அவரது கையைப் பற்றி ‘வெறுப்பு அடங்கும் காலம் வரும்; பொறுத்திருப்போம்’ என்று மட்டும் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். காயத்தை ஆற்றக் காலத்தை எடுத்துக்கொள்ளட்டும். காத்திருப்போம்!

- பெருமாள்முருகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: murugutcd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x