

எழுத்தாளார் குமார் அம்பாயிரம் விசேஷமான தமிழ்ச் சிறுகதையாளர். பொதுச் சொல்முறையிலிருந்து விலகி மாய யதார்த்தம் கொண்ட கதைகளை அவர் எழுதினார். அக்கதைகளின் மாந்தர்களும் பொதுவிலிருந்து விலகிய தனியர்கள்தாம். ‘ஈட்டி’ என்கிற சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. டிஜிருடு என்கிற பழங்குடி இசைக் கருவியை வாசிக்கக் கற்று, அந்த வாசிப்பைப் பல முறை குமார் அம்பாயிரம் நிகழ்த்தியுள்ளார். இயற்கைக் கட்டடவியலில் நாட்டமுள்ளவர். மண், மரங்களைக் கொண்டே இயற்கைக் கட்டடங்களை வடிவமைத்துள்ளார். இயற்கை விவசாயத்திலும் நம்பிக்கையுடன் செயல்பட்டார். கடந்த வாரம் உடல் நலக் குறைவால் திருவண்ணா மலையில் காலமாகிவிட்டார்.
புதிய தமிழ்ச் சொற்கள்: தமிழ் வளர்ச்சிக் கழகம் மாதாமாதம் ஆங்கிலத்துக்கு நிகரான புதிய தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்க உள்ளது. அதன் முதல் முயற்சியாகச் சில சொற்களை இக்கழகம் வெளியிட்டுள்ளது. ‘Artificial Intelligence’ என்கிற சொல்லுக்கு ‘செய்யறிவு’, ‘Bluetooth; என்கிற சொல்லுக்கு ‘ஊடலை’. ‘Breaking news’ என்கிற சொல்லுக்கு ‘அதிர்வுச் செய்தி’, ‘Chatbot’ என்கிற சொல்லுக்கு ‘உரையாடி’, ‘Data card’ என்கிற சொல்லுக்கு தரவட்டை, ‘Dating’ என்கிற சொல்லுக்கு ‘காதலுணர் காலம்’ உள்ளிட்ட சில பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.