

கண்ணகி, திரௌபதி, சீதை, கண்ணன், ராமன் முதலிய இதிகாசக் கதைமாந்தர்கள் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது கண்கூடு. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இந்திய இதிகாசங்களும் மக்களின் கூட்டு நனவிலி மனத்தில் இன்றும் தாக்கத்தைச் செலுத்தி வருகின்றன. சிலப்பதிகாரம், பெரியபுராணம் போன்ற காப்பியங்களுக்கும் தொன்மங்களைக் கட்டமைத்ததில் பெரும் பங்குண்டு. இதிகாசங்களும் காப்பியங்களும் பல்வேறு தொன்மக் கதைகளைக் கட்டமைத்திருந்தாலும் அவை உருவாக்கிய மதிப்பீடுகள் பெரும்பாலும் மரபு சார்ந்த பார்வையைக் கொண்டிருந்தன.
இவை உருவாக்கிய கதைகளிலும் பெரும் இடைவெளிகள் இருந்தன. இருபதாம் நூற்றாண்டில் உருவாகிய நவீன இலக்கியங்கள்தாம் இந்த இடைவெளிகளை நிரப்பும் முயற்சிகளை மேற்கொண்டன. இதிகாசங்களின் இருண்ட பக்கங்களின் மீது புதிய ஒளியைப் பாய்ச்சின. புராணங்கள் கட்டமைத்த பிம்பங்களின் மீது கேள்விகளை எழுப்பின. தற்காலச் சூழலுக்கேற்பப் புதிய மதிப்பீடுகளை உருவாக்கின. ஒதுக்கப்பட்ட அல்லது அதிகம் பேசப்படாத கதை மாந்தர்களான துச்சலை, பானுமதி, கடோத்கசன், ஊர்மிளை, ஜடாயு, சுபத்திரை, காந்தாரி, சூர்ப்பணகை போன்றோரின் உணர்வுகளைக் கதைகளாகச் சித்திரித்தன.