

தங்களுக்கான எழுத்தின் வெளி, குறைவு என்றாலும் அந்தந்த காலகட்டத்தில் பெண்களின் எழுத்தும் கருத்தும் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. உலக மயமாக்கல்,இணையப் பரவல் காரணமாக உலகெங்கும் உள்ள பெண்கள் தங்கள் குரலை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதன் காரணமாக இம்மாற்றத்தை வளர்ச்சி என்றே சொல்ல முடியும். அதை ஒட்டுமொத்தமாக பார்க்கும் / வாசிக்கும் வாய்ப்பை, முனைவர் இரா.பிரேமா தொகுத்திருக்கும் ‘நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்’ நூல் சுவாரசியமாகக் கொடுக்கிறது.
பெண்களின் உலகம் குறுகியது என்றும் குடும்பம், அடுப்படி சார்ந்த கதைகளை மட்டுமே எழுதி வருகின்றனர் என்றும் கூறிய ஆரம்ப காலக்குற்றச்சாட்டை இக்கதைகள் முற்றிலும் தவிடு பொடியாக்குகின்றன. பெண்களின் உணர்வுகளை ஆண்கள் எழுதுவதற்கும் பெண்களே தங்கள் உணர்வுகளை நுட்பமாக எழுதுவதற்குமான வித்தியாசத்தை இக்கதைகள் தெளிவாக உணர்த்துகின்றன.