தொடு கறி: அம்பேத்கரின் பாலி அகராதி இப்போது தமிழில்!

தொடு கறி: அம்பேத்கரின் பாலி அகராதி இப்போது தமிழில்!
Updated on
2 min read

பௌத்த சமய தத்துவம் தொடர்பான புத்தகங்களில் மிக முக்கியமானது அம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’. தனது இறுதி காலத்தில் பௌத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அம்பேத்கர் பாலி - ஆங்கில அகராதி ஒன்றையும் தொகுத்திருந்தார். அந்த அகராதியை இப்போது தமிழில் மொழிபெயர்த்துள்ளார் க்ருஷாங்கினி. 400-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அகராதிக்கு 200 பக்கங்களில் ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் பொருள் எழுதியிருக்கிறார் அம்பேத்கர். கடந்த மூன்றாண்டு காலமாக இந்தப் பணியை மேற்கொண்ட க்ருஷாங்கினி, பாலியிலிருந்து மொழிபெயர்த்திருப்பதோடு தமிழ் உச்சரிப்பையும் சேர்த்து செய்திருப்பது கூடுதல் சிறப்புக்குரியது.

எஸ்.ராவுக்கு இது விருதுக் காலம்!

ஸ்.ராமகிருஷ்ணனுக்கு கடந்த மார்ச் மாதம் ‘இயற்றமிழ் வித்தகர்’ விருது வழங்கி அவரது படைப்புகளைப் பற்றி ஆய்வுரையும் நிகழ்த்தினார் வைகோ. அடுத்து, கோவையில் நடைபெறவிருக்கும் புத்தகக் காட்சியில் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. புத்தகக் காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில் ஜுலை 21 அன்று மாலை விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. எஸ்.ராவுக்கு வாழ்த்துகள்!

மகுடேசுவரனுக்கு சிற்பி இலக்கிய விருது!

1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சிற்பி அறக்கட்டளை’ ஆண்டுதோறும் தமிழின் தலைசிறந்த கவிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது. இந்த ஆண்டுக்கான விருது மகுடேசுவரனுக்கு வழங்கப்படுகிறது. பள்ளி மாணவப் பருவத்திலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்த மகுடேசுவரன் தற்போது தமிழ் இலக்கணத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். விருது வழங்கும் விழாவின்போது விருது பெறுபவரைப் பற்றிய அறிமுகச் சிற்றேடும் வெளியிடப்படவிருக்கிறது. வாழ்த்துகள் மகுடேசுவரன்!

புத்தகத் தாம்பூலம்!

இப்போதெல்லாம் திருமண விழாக்களில் தாம்பூலப் பையாக புத்தகங்களைக் கொடுப்பதும், மணமக்களுக்கு சீர்வரிசையாகப் புத்தகங்களைக் கொடுப்பதும் நல்ல சமூக மாற்றத்திற்கான அறிகுறிகள். கடந்த ஞாயிறன்று தஞ்சையில் நடைபெற்ற கவிஞர் லெ.முருகேசன் - சித்ரா தம்பதியினரின் மகள் கிருத்திகா - லெட்சுமி நாராயணனின் திருமண விழாவில், தந்தை எழுதிய ‘பெருவெளியில் சிறு துளிகள்’ கவிதை நூலை மணவிழா மேடையில் மணமகள் வெளியிட, மணமகன் பெற்றுக்கொண்டார். கவிதையாய் வாழட்டும் மணமக்கள்!

எழுத்துரு ஓவியர்!

வடிவமைப்பில் புதுமையை நாடுபவர்கள் தமிழில் தொடர்ந்து புதுப்புது எழுத்துருக்களை உருவாக்கிக்கொண்டடே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நாணா. கையெழுத்தைக் கொண்டே புதிய எழுத்துருக்களை உருவாக்குவது நாணாவின் தனி அடையாளம். சுஜாதா, கண்ணதாசன் ஆகியோரின் கையெழுத்தில் புதிய எழுத்துருக்களை உருவாக்கிய நாணா, அடுத்து அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் கையெழுத்துகளில் எழுத்துருக்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். வயதானபிறகு கை தடுமாறும், கையெழுத்து மாறும், அதைத் தவிர்ப்பதற்கு கையெழுத்துகளைக் கொண்டு எழுத்துருக்களை உருவாக்கி கணினியில் தட்டச்சு செய்யலாம் என்கிற நாணா, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு 50 தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவற்றில் முல்லை, மருதம் என்ற இரண்டு எழுத்துருக்கள்தான் சமீபத்தில் வெளியான புதிய பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.

- தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in