

நம்பி கிருஷ்ணனின் 'நரி முள்ளெலி டூயட்' எனும் கட்டுரைத் தொகுப்பு அழகியலை ரசிப்பதன் வழியே நம் அன்றாடத்தைச் செப்பனிட்டுக் கொள்வதற்கான வழியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இருபது கட்டுரைகளை அடங்கிய இந்தத் தொகுப்பில் எட்டு கட்டுரைகள் திரை மேதைகளைக் குறித்தும் பன்னிரெண்டு கட்டுரைகள் இலக்கிய ஆளுமைகள் குறித்துமாகச் செப்பனிடப்பட்டிருக்கிறது. இந்த இருபது கட்டுரைகளின் வடிவமும் சீராக அமைந்திருக்கின்றன.
சுயானுபவத்தில் தொடங்கும் கட்டுரைகள் ஆளுமைகளின் அறிமுகம், அவர்கள் குறித்தான அடிப்படைத் தகவல்கள், கட்டுரையில் கையாளப்படும் படைப்புகள் குறித்த தகவல்சார் முன்னுரை, அதை வாசிக்கும்போது / பார்க்கும்போது ஏற்பட்ட முழுமையான அனுபவம், பின் அவற்றிலிருந்து பிரித்தறிந்து ரசித்த பகுதிகள் என ஒவ்வொரு கட்டுரையும் முழுமையுடன் நிறைவு பெறுகிறது.