தஸ்தயேவ்ஸ்கி கொடுத்த ஞானம்!- கவிஞர் புவியரசு பேட்டி

தஸ்தயேவ்ஸ்கி கொடுத்த ஞானம்!- கவிஞர் புவியரசு பேட்டி
Updated on
6 min read

கோவையின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒருவர், கவிஞர் புவியரசு. கவிதையை ஜனநாயகப்படுத்திய ‘வானம்பாடி’ இதழின் தாய்ப்பறவை. ‘தேடாதே தொலைந்துபோவாய்/ வழிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று அக்காலகட்டத்தின் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்குமாறு கவிதை எழுதியவர். வாழ்க்கை முழுக்கக் கவிதை, அரசியல், மெய்யியல், சினிமா, வாசிப்பு எனத் தேடலுடன் இயங்கிக்கொண்டிருப்பவர். ஓஷோ முதல் சுந்தர ராமசாமி வரை வியந்த படைப்பான தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தது இவருடைய வாழ்நாள் சாதனை. 87 வயதில் ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தால் இயக்குவேன் என்று சொல்லும் அளவுக்கு உற்சாகமாக இருக்கிறார்.

‘வானம்பாடி’ இயக்கமும் கவிதை இதழும் தோன்றிய கதையைச் சொல்லுங்கள்?

சர்வதேசரீதியாக, அனைத்து நாடுகளிலும் உள்ள மக்கள் கொந்தளிப்போடும் அரசியல் சுரணையோடும் எழுந்த புரட்சிகரமான காலகட்டம் அது. 1970-களின் தொடக்கம். அப்போதுதான் மீரா, பாலா, தமிழ்நாடன், சக்திக்கனல், சிற்பி, சிதம்பரநாதன் போன்ற நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பேசினோம். நாங்கள் சோஷலிஸ்ட்டுகளாகவும் கொஞ்சம் காங்கிரஸ் ஆதரவு மனோபாவம் கொண்டவர்களாகவும் இருந்தோம். திமுக எதிர்ப்பு மனநிலையும் இருந்தது. கடவுளைப் பாடும் புலவர்கள் மரபைத் தொடர்வதில் எங்களுக்கு ஈடுபாடு இல்லை. சில மாதங்கள் கழித்து தமிழ்ப் பேராசிரியர் முல்லை ஆதவன் வீட்டு மாடியில் கோவை ஞானியுடன் சேர்ந்து பேசி முடிவெடுத்தோம். ‘வானம்பாடி’ இயக்கத்தைத் தொடங்கினோம். அக்கினிபுத்திரன் உட்பட ஐந்தாறு பேர் இருந்தார்கள்.

முல்லை ஆதவன் கூட்டத்தை நடத்தினார். அப்போது உப்பிலிப்பாளையத்தில் நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் ‘பெர்க்ஸ்’ என்ற பள்ளியை நடத்திவந்தார். அவர்தான் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ‘ஸ்கை லார்க்’ பத்திரிகையின் பெயரைக் கூறினார். அந்த ‘ஸ்கை லார்க்’ தமிழில் எங்களுடைய ‘வானம்பாடி’ ஆயிற்று. என் மருமகன் நடராஜன் நடத்திய ‘மலர்விழி’ அச்சகத்தில்தான் ‘வானம்பாடி’ அச்சடிக்கப்பட்டது. அதில் வந்த கவிதைகள் எல்லாமே அன்றைய திமுக அரசையும் நிலைப்பாடுகளையும் எதிர்த்து எழுதப்பட்டவை.

‘வானம்பாடி’களில் பெரும்பாலானவர்கள் தமிழாசிரியர்களாக இருந்தார்கள் அல்லவா?

ஆமாம். சக்திக்கனலும் சிதம்பரநாதனும் மட்டும்தான் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் நிறுவனத்தில் வேலைபார்த்தார்கள். அரசுப் பணியில் இருந்ததால் பாதிப்பும் அச்சுறுத்தலும் எங்களுக்கு இருந்தன. எங்களை நன்கு அறிந்த திமுக சட்ட மன்ற உறுப்பினர்களே, ‘நக்சலைட்டுகள்’ என்று எங்களைக் குற்றம்சாட்டினார்கள். எங்கள் குழுவில் நான் மட்டுமே குறைவான சம்பளம் வாங்கும் தமிழாசிரியராக இருந்தேன். எனது மாதச் சம்பளம் அப்போது ரூ. 80. ஏதாவது பிரச்சினை என்றால் அதிகச் சம்பளம் வாங்கும் சிற்பி, மீரா போன்ற பேராசிரியர்களுக்கு என்னைக் காட்டிலும் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்பதால், எனது வீட்டு முகவரியைத் தாங்கி ‘வானம்பாடி’ வெளிவந்தது. 32 பக்கங்களில் வெளியிட்டோம்.

 60 பக்கங்கள் வரை போன இதழ்களும் உண்டு. 300 பிரதிகள் வெளியிட்டோம். 1981 வரை 13 இதழ்கள் வந்தன. ‘பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல்’ என்ற முழக்கத்துடன் இலவசமாகவே எல்லோருக்கும் அனுப்பிவைத்தோம். ஆசிரியர் என்று திட்டவட்டமாக யாரையும் வைத்துக்கொள்ளவில்லை.

கவிஞர் இன்குலாப் ‘வானம்பாடி’ இதழில் எழுதினாரா?

இன்குலாப் எங்களுக்கு முன்னாலேயே தெருவுக்குப் போனவர். அவர் பயங்கரமான இடதுசாரி. அவரது கவிதைகளை மவுண்ட் ரோட்டில் எழுதி வைத்துதான் சிம்சன் தொழிலாளர் போராட்டமே அக்காலத்தில் நடந்தது. அத்தனை பெரிய போராளி அவர். நாங்கள் அத்தனை பெரிய போராளிகள் அல்ல என்பதால், அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்து நாங்களே ஒதுங்கிக்கொண்டோம்.

இலக்கிய நுட்பம், அழகியல் சார்ந்து ‘எழுத்து’ பத்திரிகையும் உரத்த அரசியல், பிரச்சாரத்தன்மை சார்ந்து ‘வானம்பாடி’யும் தமிழ்க் கவிதை வரலாற்றில் இரண்டு துருவங்களாகப் பார்க்கப்படுகின்றன. ‘வானம்பாடி’ இயக்கம் சார்ந்து எழுதியவர்கள் இன்று இலக்கிய அனுபவத்தைத் தருபவர்களாக இருக்கிறார்களா?

எங்களிடம் கவித்துவம் எப்போதும் இருந்தது. ‘வானம்பாடி’ இதழை நடத்துவதற்கு முன்பே நாங்கள் கவியரங்கங்களில் கவிதை பாடும்போதும் மக்கள் கைதட்டத்தான் செய்தார்கள். எங்களது கவித்துவத்துக்குக் கிடைத்த கைதட்டல்தான் அது. நாங்கள் எல்லோரும் மரபுக் கவிதையிலும் குறிப்பிட்ட சாதனைகளைச் செய்தவர்கள்தான். ‘வானம்பாடி’ ஆரம்பித்த பிறகு கோயில்களுக்கு வெளியிலும் கல்லூரிகளுக்கு வெளியிலும் சென்று கவிதை பாடியிருக்கிறோம். தெருவில் இறங்கும்போது கவித்துவம் குறைந்திருக்கலாம். ஆனால், எல்லோரும் இன்னும் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

சம்ஸ்கிருதத்தைக் கவிதை மொழியில் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள், இல்லையா?

உலகத்தில் எல்லாமே கலந்தே தீரும். ‘சங்கம்’ என்ற சொல் தமிழா, வடமொழியா? தூய தமிழை வலியுறுத்தியவர்கள் நடத்தும் கூட்டத்துக்கே போய், ‘எனக்கு காபி குடிக்க வேண்டும். நீங்கள் கடைக்குப் போய் எப்படிக் கேட்பீர்கள்?’ என்று கேட்டிருக்கிறேன். மொழிக் கலப்பில்லாமல் உலகில் எந்த மொழியும் இல்லை.

நெருக்கடிநிலையை ‘வானம்பாடிகள்’ ஆதரித்தது இன்னும் உங்கள் மீது கரும்புள்ளியாக இருக்கிறதே?

ஆமாம் ஆதரித்தோம். ‘இந்திரா-இந்தியா’ என்ற புத்தகத்தை நானும் தமிழ்நாடனும் சேர்ந்து எழுதினோம். அந்தக் காலகட்டத்தில் பெரும்பான்மை சமூகம் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையில்தான் இருந்தது - அதற்கு நாங்களும் விதிவிலக்காக இல்லை. அப்போது ரயில் சரியான நேரத்தில் வந்தது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லை. இதையெல்லாம் பார்த்து நெருக்கடிநிலை நல்லதுதான் என்று நினைத்துவிட்டோம். ஆதரித்து மேடைகளில் கவியரங்கம் பாடினோம். ஒருகட்டத்தில்தான் சர்வாதிகாரமும் அடக்குமுறையும் எவ்வளவு கொடுங்கோன்மையைக் கொண்டுவந்திருக்கிறது என்பது தெரியத் தொடங்கியது. பிறகுதான் அந்த ஆதரவைக் கைவிட்டோம்.

‘வானம்பாடி’ இதழின் பங்களிப்பு என்று எதை நினைக்கிறீர்கள்?

எல்லா பின்னணியிலிருந்து வந்த இளைஞர்களும் கவிதைகள் எழுத வந்ததற்கு ‘வானம்பாடி’ இயக்கம்தான் காரணம். கவிதை ஒரு கோபுரத்தில் இருந்தது. நாங்கள்தான் அதைத் தெருவுக்குக் கொண்டுவந்தோம். புலவர்கள், ஆசிரியர்கள், பண்டிதர்கள் எல்லோரிடமிருந்தும் கவிதையைப் பறித்தது ‘வானம்பாடி’ இயக்கம்தான். புலவர் குழந்தை, ‘புதுக்கவிதை என்ன யாப்பு?’ என்று கேட்டார். நான் ‘பிகாசோ’ என்று பதில் சொல்லிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கினேன். ஆனால், நாங்களும் தமிழாசிரியர்கள்தான். எங்களை எதிர்த்தவர்களும் தமிழாசிரியர்கள்தான்.

‘வானம்பாடிகள்’ இயக்கத்தவர்களான பாலா, சிற்பி போன்றோரின் ஆதிக்கம் பல்கலைக்கழக வட்டாரங்களிலும் சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளிலும் தற்போதும் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிற்பி, பாலா போன்றவர்களால்தான் எல்லா தரப்பினருக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. சுந்தர ராமசாமிக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்காததுதான், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பின்னுள்ள பிரச்சினை. அவரும் கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். ஆனால், அவருக்குக் கொடுக்கப்படாததற்குக் காரணம் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

உடுமலை பக்கத்திலுள்ள லிங்கவநாயக்கன்புதூர் குக்கிராமம்தான் எங்கள் ஊர். என்னுடைய அப்பா ‘புரூக் பாண்ட் தேயிலை நிறுவன’த்தில் ஓவியராக வேலைபார்த்தவர். பெயர் சுப்பையா. அதன் லட்சினை ஓவியமான ‘ஒரு மொட்டும் இரு இலைகளும்’ ஓவியத்தை வரைந்தவர் அப்பாதான். புராணிக ஓவிய மரபு தெரிந்தவர் அப்பா. ஓவியம் வழியாக ஒருகட்டத்தில் தத்துவத்துக்குப் போய்விட்டார். அசல் மார்க்க வேதாந்தி அவர். எதற்கும் சலிக்காத, சலனமில்லாத மனத்தை நோக்கிய நிலையைத் தேடியவர். சத்குரு என்று அவரைச் சொல்வார்கள். அதைத்தான் எனது இல்லத்துக்குப் பெயராக வைத்திருக்கிறேன்.

ஓஷோ தொடங்கி ‘மிர்தாதின் புத்தகம்’ வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டதற்கு, உங்கள் அப்பாவிடமிருந்த மெய்யியல் தேடல் தொடர்வது ஒரு காரணம் என்று சொல்லலாமா?

நான் மெய்யியலுக்கு வந்ததன் காரணம் பேரூர் மடத்தில் படித்ததுதான். தமிழ் இலக்கியங்கள் எல்லாமே திருக்குறள், தொல்காப்பியம் தவிர சமய இலக்கியங்கள்தான். சீவக சிந்தாமணி சமண இலக்கியம். ஒரு நாயகன், எட்டு நாயகிகள். கடைசியில் அவன் துறவியாகிறான். அதைப் படிப்பதற்கு சமணத் தத்துவம் தெரிய வேண்டும். சமணம், பவுத்தம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டோம். நாங்கள் முதலில் மபொசியையும் அடுத்து மார்க்ஸையும் பற்றினோம். எதற்குள்ளும் ஒரு தலைவர் மூலமாகத்தான் போக வேண்டும். சங்கமாகச் சேர வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி, ஓஷோவின் அமைப்பாக இருந்தாலும் சரி. அதற்குப் பிறகு தத்துவத்தைப் பற்ற வேண்டும். மபொசி, திராவிட இயக்கத்தை எதிர்த்தவர். ஆனால், அவரே திமுகவுடன் கூட்டணி வைத்தார். ‘தலைவனை நம்பாதே தத்துவத்தை நம்பு’ என்றார். காலம் முழுவதும் திராவிட இயக்கத்துக்கு எதிராக மாநாடு என்று கூட்டம் நடத்திய அவர் அதே திமுகவுடன் போய்ச்சேர்ந்ததை எப்படி எடுத்துக்கொள்வது? பெரும்பாலான மனிதர்கள் சங்கத்துடனேயே நிறுத்திவிடுகிறோம். தத்துவத்தைப் பற்றுவதேயில்லை.

கமல்ஹாசனின் ஆசிரியர்களில் ஒருவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு அவருடன் உறவில் இருப்பவர் நீங்கள். அவரோடு உங்களுக்கு நட்பு ஏற்பட்டது எப்படி?

அப்போது எனக்கு ஒரு குறும்படம் எடுக்க வேண்டுமென்ற திட்டம் இருந்தது. ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் என்று நினைக்கிறேன். அதில் ரஜினி ஒரு 16 எம்.எம். கேமராவை வைத்திருப்பார். மீராதான் சொன்னார். ‘இந்த கேமரா கமலுடையதாகத்தான் இருக்கும், ஆவணப் படம் எடுக்க அவரிடம் அந்த ஒளிப்பதிவுக் கருவியை இரவலாகக் கேட்டுப்பார்க்கலாம்’ என்றார். எனது கவிதைத் தொகுப்பை கமல்ஹாசன் பணவிடை அனுப்பி வாங்கியிருந்த காலம் அது. நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். பெங்களூருவிலிருந்து இரண்டு மாதம் கழித்து ஒரு கடிதம் வந்தது. தாமதத்துக்குச் சங்கடம் தெரிவித்துத் தனது கடிதத்தைத் தொடங்கியிருந்தார்.

 எனக்கு 16 எம்எம் பைத்தியம் பிடித்திருப்பதாக எழுதியிருந்தார். 16 எம்எம்மில் நேரடியாக ஒலியைப் பதியவைக்க முடியாதென்றும் படமெடுத்த பிறகு சிங்கப்பூரில்தான் ஒலியைச் சேர்ப்பதற்கு வசதி உண்டென்றும் எல்லா தகவல்களோடும் விரிவாக எழுதியிருந்தார். கடைசியில் 35 எம்எம் பைத்தியம் பிடிக்கட்டும் என்று சொல்லி முடித்திருந்தார். இப்படித்தான் தொடங்கியது நட்பு. நான் என்னை எப்போதும் மாணவனாகவே வைத்துக்கொண்டிருப்பவன். கமல்ஹாசன் அவரே தனக்குள் ஒரு ஆசிரியரை வைத்துக்கொண்டிருப்பவர்.

கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ திரைக்கதையை நீங்கள் பதிப்பித்திருக்கிறீர்கள். அவருடன் திரைக்கதை விவாதத்தில் ஈடுபடுவீர்களா?

கமல்ஹாசன் திரைக்கதையை யாருடனும் விவாதிக்க மாட்டார். அவர் மட்டுமே உட்கார்ந்து எழுதுவார். ‘மருதநாயக’த்துக்கு மட்டும் நானும் சுஜாதாவும் கமலும் சேர்ந்து எழுதினோம். நான் ஒரு காட்சியை எழுதி பெங்களூருவில் இருந்த சுஜாதாவுக்கு அனுப்புவேன். அவர் அதைத் திருத்தி கமலுக்கு அனுப்புவார். அதற்குப் பிறகு அவர் திருத்தி எனக்கு வரும். 12 தடவை முழுமையாக ‘மருதநாயக’த்தைத் திருப்பித் திருப்பி எழுதியுள்ளோம். ஒரு சினிமா படப்பிடிப்புக்குப் போகும்போது, சில நாட்களுக்கு முன்னர் முழுக் கதையையும் ஆக்‌ஷனுடன் என் போன்ற நண்பர்களிடம் சொல்வார். திருத்தமெல்லாம் நம்மிடம் கேட்க மாட்டார். திருத்தங்களைச் சொன்னால் ரொம்பவும் குறைவாகத்தான் ஏற்றுக்கொள்வார்.

கமல், மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பாரா?

ஆழ்ந்து கவனிப்பார். சாமானியர்களிடமும் அவர்களது பின்னணி பற்றி ஆழமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார். எல்லாம் தெரிந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களையே அதிகம் பார்த்து அவர் ஏமாந்துவிட்டதால், அதுபோன்ற ஆட்களை மட்டும் தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுவார்.

கமல் தேர்தல் அரசியலுக்குத் தகுதியானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கிராமங்களிலிருந்துதான் பணியை அவர் தொடங்கியிருக்கிறார். ஆறு மண்டலங்களாகத் தமிழகத்தைப் பிரித்து வேலைபார்க்கிறார். கிராமங்களிலிருந்து தொடங்கும் எதுவும் தோற்காது என்பது என் நம்பிக்கை. அவருக்கு அரசியல் முழுக்கத் தெரியும் என்பதற்கு ‘விருமாண்டி’ படமே உதாரணம். மரண தண்டனைக்கான அவருடைய எதிர்வினைதான் ‘விருமாண்டி’. இதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.

‘ஹே ராம்’ படப்பிடிப்பில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். கமல்ஹாசனின் பூரணமான படைப்பு என்றும் அதைச் சொல்லலாம். அதைப் பற்றிச் சொல்லுங்கள்...

காந்தியின் வாழ்க்கை பற்றியும் காந்தியின் எழுத்துகளையும் அக்குவேறாகப் படித்தவர் கமல். வசனங்கள் உட்பட ‘ஹே ராம்’ திரைக்கதையை ஆங்கிலத்தில்தான் எழுதியிருந்தார். திரைக்கதையைப் படப்பிடிப்புடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நகல் எடுத்துப் புத்தகமாகவே கொடுத்துவிடுவார். ‘ஹே ராம்’ கதையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கலாச்சாரப் பின்னணி கொண்டவர்களையே நடிக்க வைத்தது தொடங்கி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார். காந்திக்கும் வங்க முதலமைச்சர் சுஹ்ரவர்த்திக்கும் பேச்சுவார்த்தை நடக்கும் ஒரு காட்சி வரும்.

ஒரெயொரு புகைப்பட ஆவணத்தை வைத்து அந்தக் காட்சியையே ‘ஹே ராம்’ படத்தில் சிருஷ்டிருத்திருப்பார் கமல். அதே பேக்லைட்டைப் பயன்படுத்தியிருப்பார். மகாராஷ்டிர மகாராஜாவுடன் ராமும் அபயங்கரும் காரில் போகும் காட்சியும் வசனமும் இன்னொரு உதாரணம். ‘ரயில் கேட்டை உங்களுக்குத் திறக்கட்டுமா?’ என்று பணியாளர் கேட்கிறார். ‘பட்டேல் சாம்ராஜ்யத்தில் எந்த மகாராஜாக்களுக்கும் கதவு திறக்காது’ என்று விரக்தியுடன் பதில் சொல்வார் மகாராஜா. பெரிய வேலை அது! நம் மக்கள் புரிந்துகொள்ளவில்லை.

தத்துவம், மெய்ஞானம், கவிதை என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை நீங்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். ‘ஓஷோ’, ‘மிர்தாதின் புத்தகம்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’ போன்றவை உங்கள் சாதனை என்றே சொல்லலாம்… அதிக அங்கீகாரம் கிடைக்காத, அதேவேளையில் அதிக உழைப்பைக் கோரும் மொழிபெயர்ப்புப் பணிக்கு எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?

புத்தகங்களால் பணம் கிடைக்கிறது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். எத்தனையோ பதிப்புகள் வந்தாலும் பணம் கொடுக்க மாட்டார்கள். செலவுக்கு வெச்சுக்கோங்கன்னு சொல்லி ஐநூறு, ஆயிரம் கொடுப்பார்கள். எட்டாவது பதிப்பென்று சொல்லியே திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கில் அச்சிட்டு விற்கும் வழக்கமெல்லாம் உண்டு இங்கே.

புத்தகத்தை எழுதுவதோடு அல்லாமல், நம்மிடமே வடிவமைத்தும் வாங்கிக்கொண்டு, காகிதம் வாங்குவதற்கும் பணத்தையும் வாங்கிக்கொண்டவர்களிடம் ஏமாந்த அனுபவமெல்லாம் எனக்கு உண்டு. நான் மொழிபெயர்த்த ‘மிர்தாதின் புத்தகம்’ ஒன்றரை லட்சம் போயிருக்கிறது. அந்தப் புத்தகத்துக்கு ஒரு ரசிகர் படையே இருக்கிறது. நான்தான் மிர்தாத் என்று நினைத்து என்னைப் பார்க்க வருபவர்களும் இருக்கிறார்கள்.

சமானந்த சுவாமி என்ற ஒரு மகான் என்னைக் கூப்பிட்டு, தன் சீடர்களுடன் என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார். நான் அவரிடம் அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர்தான் என்று கூறி, ரொம்பவும் கெஞ்சி அவரைத் தவிர்த்தேன். அந்தப் புத்தகத்தை எழுதிய மிகைல் நேமி, கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். கலீல் ஜிப்ரானைச் சிறு வயதிலிருந்து காப்பாற்றி வந்த நண்பர் மிகைல் நேமி. தன் நண்பனின் சாதனைப் படைப்பான ‘தீர்க்கதரிசி’யை மிஞ்ச வேண்டுமென்று அவர் எழுதியதுதான் ‘மிர்தாத்தின் புத்தகம்’.

அந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கச் சொல்லி ரமணாசிரமத்திலிருந்து எனக்கு அனுப்பி வைத்தார்கள். ‘இதை மொழிபெயர்த்துவிட்டுச் செத்துப்போ’ என்ற செய்தியுடன் எனக்கு அனுப்பப்பட்டதுபோல் இருந்தது. ஒரு அரேபிய நாட்டுக்காரர். அவரால் அத்தனை தூரத்திலிருந்து நம் மேல் பாதிப்பை ஏற்படுத்த முடிந்திருக்கிறது.

ஒரு எழுத்தாளன் மாபெரும் படைப்பையெல்லாம் எழுத வேண்டியதில்லை. ‘கரமசோவ் சகோதரர்கள்’ மாதிரியான ஒரு மாபெரும் நாவலை மொழிபெயர்த்தால் போதும் என்று சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நீங்கள் அதை மொழிபெயர்த்திருக்கிறீர்கள்? அந்த மொழிபெயர்ப்பு வேலை கொடுத்த அனுபவம் என்ன?

ஞானிகள் நமக்குப் பாதைகளைச் சுட்டிக்காட்டும் கைகாட்டி மரங்களாக நின்றுகொண்டிருக்க, தஸ்தயேவ்ஸ்கி நம் கரம்பற்றி ஒரு புதிய பாதையில் அழைத்துச்செல்கிறான். பயண முடிவில் என்னதான் இருக்கிறது? எதுவுமே இல்லை! முடிவே இல்லை! இந்தப் பயணம் முடிவிலா பயணம். இங்கே பயணம் மட்டுமே முக்கியம்; சென்று சேருமிடம் அல்ல. பயணவழி அனுபவங்களே பாடங்கள்.. அதுவே வாழ்க்கை. தஸ்தயேவ்ஸ்கி தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை, வேறு யாரும் படவில்லை. மரணத்தின் முனையிலிருந்து மீண்டுவந்த நசிகேதன் அவன். அதனால்தான், வாழ்வின் சாரத்தை வடித்து இறக்கி வைக்க அவனால் முடிந்திருக்கிறது.

அவன் படைப்பில் நாம் உணரும் ஆழத்துக்கு அதுவே காரணம். அவனைப் படித்து மொழிபெயர்த்த பிறகு, வாழ்க்கையில் எல்லா சங்கடங்களும் சாதாரணமாகிவிடுகின்றன. அவமானப்படுவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது என்று, அவனது கதாபாத்திரம்தான் சொல்ல முடியும். எவ்வளவு அவமானங்களும் துயரங்களும் வந்தாலும் கவலையே பட வேண்டாம் என்பதுதான் அவன் கொடுத்த ஞானம்!

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in