

நாம் நடந்து செல்கிற தெருவோ, ஒரு சாலையோ, பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களோ, காற்றில் எழுந்து வருகிற புழுதிகளோ, நம் முந்தைய வரலாற்றை, வாழ்க்கையை, வென்ற/வெல்லாத கனவுகளைப் புதைத்தே வைத்திருக்கின்றன. அதைத் தோண்ட, தோண்ட வருகிற சுவாரசியங்கள், ஆச்சரியங்களாகவோ, அதியசங்களாகவோ இருக்கலாம். கவிஞர் கலாப்ரியாவின் நான்காவது நாவலான ‘மாக்காளை’ அப்படியான, நினைவுகளைக் கிளறும் உணர்வை, தாமிரபரணியின் குளிர்ச்சியோடு தருகிறது.
திருநெல்வேலி திரையரங்கம் ஒன்றின் பின்னணியைக் கொண்ட இந்த நாவல், 1960களில் நடக்கிறது. இன்றைக்குள்ள தலைமுறை கண்டிராத, வாழ்ந்திடாத வாழ்க்கையை அங்கதமாகவும் அழுத்தமாகவும் பேசுகிறது. அந்தக் காலகட்டத்து மக்களின் பழக்க வழக்கங்கள், திரையரங்க நடைமுறைகள், படம் பார்க்க முண்டும் கூட்டம், பெண்கள் டிக்கெட் கவுன்டருக்கான மவுசு, சினிமா விளம்பரங்கள், திரையரங்க கேண்டின் வியாபாரம், எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி’, ‘எங்க வீட்டு பிள்ளை’ பட ரிலீஸ்களின் போது நடந்த கொண்டாட்டம் முதல் அப்போது வெளியான படங்களுக்கான வரவேற்பு எனச் செல்லும் தகவல்களின் வழி, வாழ்ந்து கெட்ட அல்லது வாழ்வைத் தொலைத்த விஸ்வநாத அண்ணாச்சியின் கதையை, எந்தப் பாசாங்கின்றியும் விவரிக்கிறது, நாவல்.