Last Updated : 29 Jul, 2018 09:41 AM

Published : 29 Jul 2018 09:41 AM
Last Updated : 29 Jul 2018 09:41 AM

ப.சிங்காரம்: சூழல் சிதைத்த பயணம்

ப.சிங்காரம் தன் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியுலகு அறியாமல் அமைத்துக்கொண்டிருந்த அபூர்வப் படைப்பாளி. அவருடைய படைப்புகளின் வெளிச்சத்தில்தான் அவர் இன்று புலப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

படைப்பாளியை விடவும் படைப்பு ஞானம் மிக்கது. அதுவே கொண்டாடப்பட வேண்டியது என்பதற்கான உருவகமாகத் திகழ்ந்தவர். அவருடைய எழுத்துலகம் என்பது இரண்டு நாவல்கள் மட்டும்தான். வேறெதுவும் எந்த வடிவத்திலும் எழுதியதில்லை. தென்கிழக்காசிய நாடுகளில் பிழைப்புக்காக எட்டாண்டுகள் (1938-46) வேலை பார்த்த சிங்காரம் தன்னுடைய 26-வது வயதில் ஊர் திரும்பினார். 1947-ல் தினத்தந்தி மதுரை செய்திப் பிரிவில் பணியமர்ந்த அவர், அங்கு 40 ஆண்டுகள் பணிபுரிந்து 1987-ல் ஓய்வு பெற்றார். மதுரை ஒய்எம்சிஏவில் 50 ஆண்டுகள் தனியறை வாசம் புரிந்தவர். உறவுகளோடு எவ்வித ஒட்டுறவும் கொள்ளாமல், நட்பு வட்டம் என ஏதுமில்லாமல் தனித் தீவென வாழ்ந்திருந்தார்.

1950-களின் தொடக்கத்தில் அவருடைய முதல் படைப்பான ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதியிருக்கிறார். அவ்வப்போது விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னை சென்று பதிப்பாளர்களைச் சந்தித்திருக்கிறார். எதுவும் கூடிவரவில்லை. ஏழெட்டாண்டு அலைச்சல்களுக்கும் முயற்சிகளுக்கும் பிறகு, ‘கலைமகள்’ நாவல் பரிசுப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார். அது முதல் பரிசு பெற்றுப் புத்தகமாகவும் 1959-ல் வெளிவந்தது. புத்தகம் அளித்த உத்வேகத்தில், 1960-ல், காலமும் சூழலும் வாழ்வும் ஒன்றையொன்று மேவிய, முழு வீச்சான தளத்தில் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். இதைப் புத்தகமாக்க அவர் பட்ட பாடுகளும், பத்தாண்டு தொடர் முயற்சிக்குப் பின் அது புத்தகமாகியபோது நிகழ்ந்த விபரீதங்களும், நாவல் சற்றும் கவனிக்கப்படாத சூழலும் ஏற்படுத்திய வேதனைகளும் மனச் சோர்வுகளும் கடைசிவரை அவரை முடக்கியிருந்தன. அவர் தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகமோ முனைப்போ கொள்ளாததற்கு இந்த அனுபவங்களின் தாக்கமே பிரதான காரணமாக இருக்கக்கூடும்.

‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் கைப்பிரதியோடு அவ்வப்போது சென்னை சென்று பல பதிப்பகங்களை அணுகியிருக்கிறார். எதுவும் நடந்தபாடில்லை. அந்நாவலின் பெறுமதி குறித்துப் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவர், அது புத்தக வடிவம் பெற வேண்டும் என்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்திருக்கிறார். பத்தாண்டு அல்லாட்டங்களுக்குப் பின், நவீனத் தமிழ் இலக்கியத்தோடும், சிற்றிதழ் இயக்கத்தோடும் உறவு கொண்டிருந்த மலர்மன்னன் (‘1/4’ என்ற சிற்றிதழ் நடத்தியவர்; எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்) வசம் சென்று சேர்ந்திருக்கிறது. சிங்காரம் ஒரு பத்திரிகையாளர் என்பதன் மூலம் நடந்த ஒரு அனுகூலம். கையெழுத்துப் பிரதியை வாசித்துப் பிரமிப்படைந்த மலர்மன்னன் எடுத்துக்கொண்ட பிரயாசைகளின் விளைவாக, 1972-ல் கலைஞன் பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை வெளியிட்டது.

அடுத்தது, அச்சாக்கத்தின்போது நிகழ்ந்த சில விபரீதங்கள். நாவலில் ஊர் நினைவாக வரும் ஒரு பகுதியில் சிதம்பரம் அண்ணாமலை செட்டியார் அளித்த, அன்று மிகவும் விசேஷமாகப் பேசப்பட்ட, 96 வகை காய்கறி விருந்து பற்றி சற்று விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். அந்தப் பகுதியை நீக்கிவிட்டார்கள் என்றார். “அதை நீக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டேன். “இல்லை, அதைப் பற்றி அப்போது ஊரில் நையாண்டியாகவும் நக்கலாகவும் பேசிக்கொண்டதை அப்படியே எழுதியிருந்தேன். அவர்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கும்” என்றார் மெல்லிய முறுவலுடன். மேலும், அச்சில் பக்கங்கள் நீண்டுகொண்டே போனதால், பதிப்பகத்தார், நாவலின் இறுதியில் சில பகுதிகளை சர்வ அலட்சியமாக நீக்கிவிட்டிருக்கிறார்கள். காட்டில் கொரில்லாப் படையைப் பாண்டியன் கட்டமைப்பது, கொரில்லா வீரர்களோடு இணைந்து தாக்குதல்கள் நிகழ்த்துவது, கொரில்லா வீரர்களின் காட்டு வாழ்க்கை, உணவு முறைகள் என்றான பல பக்கங்களை இதன் மூலம் நாம் இழந்துவிட்டிருக்கிறோம். அச்சுக்கோப்பின் மூலம் புத்தகங்கள் உருவான காலகட்டம் அது. 16 பக்கங்கள் அச்சுக்கோத்து அடித்து இறக்கிய பின் அச்செழுத்துகளைப் பிரித்துப்போட்டு மீண்டும் அடுத்த 16 பக்கங்கள் அச்சுக்கோக்கப்படும். இப்படியான ‘லெட்டர் பிரஸ்’ வசதிதான் புத்தகத் தயாரிப்புக்கு உகந்ததாக அன்று இருந்தது. பொதுவாக, 32 பக்கங்கள் வரை கோக்குமளவு அச்செழுத்துகள் இருக்கும். சில பெரிய அச்சகங்கள் 64 பக்கங்கள் கோக்குமளவு அச்செழுத்துகள் கொண்டிருக்கும். எது எப்படியென்றாலும் புத்தகத்தின் வளர்ச்சியைப் படிப்படியாகத்தான் பார்க்க முடியும்.

மேலும், அயலூரில் இருக்கும் ஒரு படைப்பாளிக்கு ‘ப்ரூஃப்’ அனுப்பி அவர் திருத்தி அனுப்பும் வரை காத்திருக்க முடியாது. அச்சகத்தில் வேலை முடங்கிவிடும். ஆக, மெய்ப்பு பார்ப்பது பதிப்பகத்தார் பொறுப்பு. அன்றைய பெரும் பதிப்பகங்கள் மெய்ப்பு பார்ப்பதற்கென்றே ஒருவரை அமர்த்தியிருந்தனர். பெரும்பாலும் ஓய்வுபெற்ற தமிழாசிரியராக அவர் இருப்பார். ‘புயலிலே ஒரு தோணி’யை சிங்காரம் புத்தகமாகப் பார்த்தபோது, அதில் இத்தகைய நீக்கங்கள் தவிர பிழைகளும் மலிந்திருந்திருக்கின்றன. நாவலில் மலாய் சொற்கள் விரவிவரும் என்பதால் இது நேர்ந்திருக்கலாம். ஆனால், திருத்தி அனுப்பிய புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட பதிப்பகத்தார், அடுத்த பதிப்பில் இதனை மூலப்படியாகக் கொண்டு பிழைகளைக் களைந்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேற்பட்டு, அவருக்கு அறிவிக்காமலேயே இரண்டாம் பதிப்பு வெளிவந்து, புத்தகம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அது, முதல் பதிப்பின் அதே பிழைகளுடன் அப்படியே வந்திருக்கிறது என்று வருத்தப்பட்டார். ஒரு பிரதியும் எனக்குத் தந்தார். இந்த வருத்தங்களை எல்லாம் மீறி, அந்த நாவலைக் கொண்டுவந்ததற்காக அவர்கள் மீது அவருக்கு நன்றியும் மதிப்பும் இருந்தது.

அதேசமயம், அன்றைய இலக்கியச் சூழலும் ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற ஒரு மகத்தான படைப்பைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டது. எழுத்தாளர்கள் சிட்டி, சிவபாதசுந்தரம் இணைந்து எழுதி, 1977-ல் வெளிவந்த ‘தமிழ் நாவல் நூறாண்டு: வரலாறும் வளர்ச்சியும்’ என்ற விரிவான ஆய்வு நூலில் சிங்காரத்தின் இரு நாவல்களுமே அவர்களால் அறியப்படாமல் விடுபட்டுப்போயின. (ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’, ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல்களும் அந்த விரிவான வரலாற்றுப் பதிவில் இடம்பெற்றிருக்கவில்லை.) இவ்விரு ஆய்வாளர்களுமே ஓரளவு கவனத்துடன் அவதானிக்க முற்பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், இத்தகைய பிழைகள் நிகழ சுழலின் அசட்டைக்கும் பொறுப்புண்டு. பல ஆண்டுகளாக, ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் கண்டுகொள்ளப்படாததில் விளைந்த விரக்திக்கும் அவருடைய பயணத்தை முடக்கியதில் நிச்சயம் பங்குண்டு.

1980-களின் மத்தியில் ஒரு இதழுக்காக அவரை எழுத வைக்க விரும்பினோம். ஒரு சிறுகதை கேட்டுக் கடிதம் எழுதினேன். தயக்கத்துடன் மறுத்துவிட்டார். அவர் எப்போதுமே ஊரின் மாற்றங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுபவர் என்பதால் மதுரையின் மாற்றங்கள் பற்றி ஒரு கட்டுரையாவது அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். மிகுந்த தயக்கத்துக்குப் பின் என் வற்புறுத்தலுக்காக எழுதி அனுப்பினார். ஆனால், கட்டுரை அவருடைய அவதானிப்புகளின் சுவாரஸ்யத்தை இழந்திருந்தது. புனைவின் சஞ்சாரத்தில் மட்டுமே அவருடைய படைப்பு மனம் சிறகுகளை விரிக்கக் கூடியது என்பது புரிந்தது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x