

நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலில் ஆடு மேய்த்தலைதல், மீன் பிடித்துக் கரைதல், விவசாயம் செய்து ஓய்ந்துபோதல், கட்டட வேலை செய்து நசிந்து போதல் பற்றியெல்லாம் நாவல்கள் பல வந்திருக்கின்றன. ஆனால், பேப்பர் போடுபவர்களின் வாழ்நிலை பற்றிப் பதிவுசெய்வதில் முதன்மை இடம் வகிப்பது எழுத்தாளர் அறிவுமணியின் ‘சார்… பேப்பர்’ என்னும் இந்த நாவல்.
ஒவ்வொரு நாளின் அதிகாலை நேரத்தில் ‘பேப்பர்’ என்ற சத்தம் கேட்டு விழித்தெழக் கூடியவர் நம்மில் பலர் இருப்பர். ஆனால், வாசலில் விழும் பேப்பரை எடுக்கும் ஒருவர் தம் வாசல்வரை வந்துபோகும் பேப்பர்க்காரரை, அவர் யார், பெயர் என்ன, எதுவரை படித்துள்ளார், என்ன சம்பளம், எத்தனை வருடமாக இந்த வேலை, என என்றேனும் கேட்டறிந்ததுண்டா?. அன்றைய செய்திகளை மட்டும் சுடச்சுட அறிய, நம்மில் பலரும் ஆர்வம் கொள்ளும் நிலையில், பேப்பர்போடும் எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது இந்நாவல்.