

ரா
ஜபாளையத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களுடன் நாளொன்றுக்கு ஐநூறு பேர் படிக்கும் நூலகமாக விளங்குகிறது காந்தி கலைமன்றம். சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்த பி.எஸ்.குமாரசாமிராஜா வாழ்ந்த இல்லம் அது.
தனது இல்லத்தைப் பெரிய நூலகமாக்கவும், கலை அரங்கம் ஒன்று அமைத்து இலக்கியம், கலை, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டார் குமாரசாமிராஜா. அவர் அவ்வப்போது வாங்கிப் படித்து சேகரித்து வைத்திருந்த நூல்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. எனினும், சென்னைக்குச் சென்று தமிழிறிஞர்கள் மு.வரதராசன், கி.வ.ஜகந்நாதன், பெ.தூரன் ஆகியோரைச் சந்தித்து முக்கிய பதிப்பகங்களில் கிடைக்கும் தமிழ் இலக்கிய நூல்களையும், அறிவியல் நூல்களையும் நிறைய வாங்கி அனுப்பச்சொல்லி பணம் தந்துவிட்டுவந்தார் குமாரசாமிராஜா.
அந்தச் சமயத்தில் குமாரசாமிராஜாவை பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒரிசா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கூறினார். எனது சொந்த வீட்டை கலைக்கூடமாக்கி ஊருக்கு எழுதிவைக்கத் திட்டமிட்டுள்ளேன். அந்த வேலைகள் இருப்பதால் எனக்கு ஆளுநர் பணிக்கு நேரமிருக்காது என்று மறுத்தார் குமாரசாமிராஜா. ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் வற்புறுத்தியும்கூட அவர் கேட்கவில்லை. காந்தி கலைமன்றப் பொறுப்புகளை அவருடைய உறவினர் பி.ஏ.சி.ராமசாமிராஜா ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்து நேருவின் அழைப்புக்கு சம்மதிக்கவைத்தார்.
ஒரிசா மாநில ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்ட குமாரசாமிராஜா தனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும் முதல் சட்ட மன்றக் கூட்டத்தில் தமிழில் உரைநிகழ்த்தினார். இதற்கிடையில் காந்தி கலைமன்றப் பணிகளும் நடந்து முடிந்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத் கலைமன்றத்தைத் திறந்துவைத்தார். இன்றும் அந்த அறிவு விளக்கு ராஜபாளையத்தில் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது.
ஜூலை 8: பி.எஸ்.குமாரசாமிராஜா 120-வது பிறந்த தினம்