

உலகப் புகழ்பெற்ற நாடகங்களுக்காக, நானூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக உலகம் ஒருவரைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது என்றால், அது ஷேக்ஸ்பியரைத்தான். இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர்களுள் மிகவும் முக்கியமானவர் ஷேக்ஸ்பியர். தன் நாடகங்களாலும் கவிதைகளாலும் இன்றும் புகழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஷேக்ஸ்பியர் தன் வாழ்நாளில் 39 நாடகங்களை எழுதியிருக்கிறார். இந்த நாடங்களை வரலாறு, நகைச்சுவை, துன்பியல், காதல் என 4 வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றில் ’கோடைக்கால நடுவில் கனவு வந்த இரவில்’ (A Midsummer Night's Dream), சூறாவளி (The Tempest), வெனிஸ் நகர வியாபாரி (The Merchant of Venice) போன்ற நகைச்சுவை நாடகங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
பின்னர் துன்பியல் நாடகங்களை எழுதி, புகழின் உச்சிக்குச் சென்றார் ஷேக்ஸ்பியர். அவற்றில் ஜூலியஸ் சீசர், மக்பெத், ஹாம்லட், கிங் லியர் போன்றவை மிகவும் புகழ்பெற்றவை. இவை ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. ரோமியோ ஜூலியட், ஆண்டனி கிளியோபாட்ரா போன்ற துன்பியல் காதல் நாடகங்களும் ஷேக்ஸ்பியர் எழுதியவற்றில் புகழ்பெற்றவை.
உலகின் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கின்றன. இவை நாடகங் களாகவும் உலகம் எங்கும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. பின்னர் நாடகங்களின் புகழ் குறைந்து திரைப்படங்களின் ஆதிக்கம் வந்தபோது, ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் திரைப்படங்களாகவும் பல மொழிகளில் வெளிவந்து, அவர் புகழை மேலும் மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றன.
சுமார் 52 ஆண்டுகளே வாழ்ந்த ஷேக்ஸ்பியர் தன் வாழ்நாளில் சுமார் 10 லட்சம் வார்த்தைகளை எழுதியிருக்கிறார்! ஆனாலும் ஷேக்ஸ்பியர் எந்த ஆண்டு பிறந்தார், எந்த ஆண்டு மறைந்தார், ஏன் நாடகங்களை எழுதினார், ஒவ்வொரு நாடகத்துக்கும் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார் என்பதெல்லாம் துல்லியமாக யாருக்கும் தெரியாது.
சரி, ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் எது மிகச் சிறந்தது என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ரோமியோ ஜூலியட்’ நாடகத்தில், ‘நீங்கள் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜா பூவின் வாசம் இனிமையாகவே இருக்கும்’ என்கிற ஒரு வரியைத்தான் இந்தக் கேள்விக்குப் பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும்! ஆமாம், ஷேக்ஸ்பியரின் படைப்பில் எல்லாமே சிறந்தவைதான்! - ஸ்நேகா