

முதன் முறையாக ஒரு கன்னட எழுத்தாளரின் புத்தகம் சர்வதேச புக்கர் பரிசு நெடும்பட்டியலுக்குத் தேர்வாகி உள்ளது. பானு முஷ்டாக் (76) எழுதிய ஹார்ட் லேம்ப் (இதய விளக்கு) என்கிற சிறுகதைத் தொகுப்பே அந்த நூல். இந்தத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தீபா பாஸ்தி. இவர் தி இங்கிலிஷ் பென் விருதை 2024இல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படையில் வழக்குரைஞரான பானு, ஓர் அரசியலர், சமூகச் செயற்பாட்டாளரும்கூட. தொடக்கக் காலத்தில் 'லங்கேஷ் பத்ரிகே' எனும் இதழில் செய்தியாளராக இவர் இருந்துள்ளார் (கௌரி லங்கேஷின் தந்தை நடத்திய பத்திரிகை). 1990இல் பத்திரிகைப் பணியிலிருந்து விலகிய பானு வழக் குரைஞராகச் செயல்படத் தொடங்கினார். கன்னட இலக்கியத்தில் சமூக, பொருளாதார நீதிக்கான பந்தாய இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய பானு, 60 ஆண்டுகளாக எழுதிவருகிறார்.