

மெக்சிக ஓவியரும் பெண்ணியவாதியுமான ஃபிரீடா காலோ, வண்ணங்களின் வழியாகத் தன் வலி நிறைந்த வாழ்க்கையைப் பதிவுசெய்தவர். சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இவர், பதின் பருவத்தில் மோசமான விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் இவரது முதுகெலும்பு, கழுத்தெலும்பு, விலா எலும்பு, இடுப்பெலும்பு, பாதம் எனப் பல பகுதிகளிலும் எலும்பு முறிவு. 30க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர் பிழைத்திருப்பதே கொடுமையாக இருந்த சூழலிலும் கலையை இறுகப் பற்றிக்கொண்டார் ஃபிரீடா.
தன் வலிகளை அடர்த்தியான வண்ணங்களால் ஓவியமாக்கினார். இவரது ஓவியங்களில் 54 ஓவியங்கள் இவரது தற்படங்கள். உடைந்த முதுகெலும்பும் தோலைப் பிணைத்திருக்கும் ஆணிகளுமாக இவர் தன்னைத்தானே வரைந்த ‘The Broken Column’ ஓவியம் காண்பவரைக் கலங்கவைத்துவிடும். தன் தனிப்பட்ட வாழ்வின் ரணங்களையும் ஃபிரீடா ஓவியமாக்கியிருக்கிறார். காதலித்து மணந்துகொண்ட ஓவியரான டியாகோ ரிவேரா வுடனான வாழ்க்கை இவருக்குக் கசப்பைத்தான் பரிசளித்தது.