

ஒரு பொதுவினா: ‘உலகத்தில் யாருக்கும் நடக்காததா உனக்கு நடக்கிறது, நீ மட்டும் என்ன உசத்தி?’. ‘ஆமாம், எனக்கு நான் உசத்திதான்’ என்று அடித்துச் சொல்பவர்கள் ‘அந்தி வானின் ஆயிரம் வெள்ளி’ தொகுப்பின் கதை மாந்தர்கள். ஒரு சறுக்கலுக்குப் பிறகு, புழுதியில் வீழ்ந்த பிறகு, நிதானமாக எழுந்து, கை, கால் மூட்டுகளைத் தட்டி விட்டுக்கொண்டு, சுற்றி நின்று பார்க்கும், சிரிக்கும் முகங்களைப் பொருட்படுத்தாமல், சறுக்கிய வழியிலேயே மீண்டும் ஏறும் அபாய விரும்பிகள் இவர்கள்.
சில சமயங்களில், முணு முணுத்துக்கொண்டோ, கண்ணீரைத் துடைத்துக்கொண்டோ, சேர்ந்து சிரித்துக்கொண்டோ, காப்பியோ டீயோ ஒரு குவளையை கையில் ஏந்தித் திரும்பி ஏறும் வழியில் ஒரு துணைக்கரம் நீள்வதுண்டு. அப்படி நீளும் கரங்கள் இந்தக் கதைகளை உச்சிக்கு அழைத்துச் செல்கின்றன. பழ ஜூஸ் வாங்கித் தர விரும்பும் சவரியும், பக்கத்து வீட்டுக்குள் வந்து காப்பி கலக்கும் சீதாவும் நட்சத்திரங்களே.