

ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய கீதம் இருக்கும். தேசியப் பறவை, தேசிய மிருகம் என்பனவும் இருக்கும். தேசிய நாவல் இருக்குமா? அஜர்பைஜானில் இருக்கிறது. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையில் அமைந்திருக்கும் நாடு அஜர்பைஜான். இது சோவியத் ஒன்றியத்தின் அங்கமாய் இருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் (1991) பிறகு தனி நாடானது.
இந்த நாவலின் கதை அதற்கெல்லாம் வெகு காலம் முன்பு முதல் உலகப் போர் (1914-1918) காலக் கட்டத்தில் நடக்கிறது. ஜார் மன்னரின் ஆட்சிக் காலத்தில், ரஷ்யாவின் ஆளுகையின் கீழ் இருந்தது அஜர்பைஜான். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தில் ‘அலியும் நினோவும்’ சந்தித்துக்கொள்கிறார்கள்.