

தமிழில் துப்பறியும் நாவல்கள் நூறாண்டுகளுக்கு முன்பே வெளிவரத் தொடங்கிவிட்டன. பண்டிதர் ச.ம.நடேச சாஸ்திரி 1894இல் எழுதிய ‘தானவன் என்ற போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அத்புத குற்றங்கள்’ என்னும் கதைத்தொகுப்பே தமிழில் வெளியான முதல் துப்பறியும் வகைமையிலான நூல் எனக் கருதப்படுகிறது. பின்னாள்களில் எழுத வந்தவர்களுக்கு ‘துப்பறியும் நிபுணன் தானவன்’ கதாபாத்திரம் தூண்டுகோலாக அமைந்தது.
நடேச சாஸ்திரியைத் தொடர்ந்து ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரை சாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரங்கராஜு ஆகியோர் துப்பறியும் நாவல்களை எழுதினர். குப்புசாமி முதலியார் கதையில் ‘கிருஷ்ணாசிங்’ என்னும் கதாபாத்திரமும் வடுவூரார் கதையில் ‘அமரஸிங்ஹர்’ கதாபாத்திரமும் துப்பறியும் வேலையில் ஈடுபடுவதாகக் கதை அமையும். ஜே.ஆர்.ரங்கராஜுவின் நாவல்களின் வழியாகப் பிரபலமான கதாபாத்திரம் ‘துப்பறியும் கோவிந்தன்’.