Last Updated : 19 Jul, 2018 09:24 AM

 

Published : 19 Jul 2018 09:24 AM
Last Updated : 19 Jul 2018 09:24 AM

மரணம் ஒரு கலை 20: அடால்ஃப் ஹிட்லர்

ஹிட்லர் பிறக்கும்போது வானத்தில் துர்சகுனமோ, சாத்தான் வருகையின் அறிகுறியோ இல்லை. ஆஸ்திரிய ஜெர்மனி எல்லைப் பகுதியான பிரானோ - ஆம் – இன் நகரத்தில் ஹிட்லரின் தாய்க்குப் பிறந்த முதல் மூன்று குழந்தைகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று இறந்துபோக, நான்காவதாகப் பிறந்த ஹிட்லர் பிழைத்திருந்தார். பின்னாளில் ஜெர்மனின் தேசியவாதியாகத் தான் மாறியதற்கு அந்நகரமே காரணம் என்கிறார்.

படித்தப் பள்ளிகளில் நற்பெயர் கிடையாது. படிப்பையும் தொடரவில்லை. ஊர் சுற்றுவது ஒன்றே இலக்காகச் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு, “என்ன செய்யப் போகிறாய்?” என்று யாராவது கேட்டால் மட்டும் பிடிக்காது. ஓவியன் அல்லது சிற்பியாவது என்ற இலக்குடன் வாழ்வைத்  தொடங்கிய ஹிட்லர், வியன்னாவுக்குச் சென்றார். அங்கு உள்ள ஓவியக் கல்லூரியில் சேரச் சென்றவருக்குப் பலத்த அதிர்ச்சி. மூன்று முறை நுழைவுத் தேர்வு எழுதியும் ஓவியக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இடம் கிடைத்திருந்தால், வரலாற்றின் பத்தாண்டுக் காலத்தை ரத்தவாடை வீசச் செய்த சர்வாதிகாரியாக ஹிட்லர் உருமாறியிருக்க மாட்டாரோ என்னவோ?

கலை ஆர்வத்தில் வியன்னாவைச் சுற்றித் திரிந்த ஹிட்லர், அரசியல் ஆர்வத்துடனும், யூத, கம்யூனிச வெறுப்புடனும் 24-வது வயதில் வியன்னாவைவிட்டு வெளியேறினார். ஜெர்மனியின் எதிர்காலம் என்பது மார்க்சியத்தின் அழிவிலேயே அடங்கியிருக்கிறது என்றும், ஆன்மாவை அழிக்கும் விஷத்தை உற்பத்தி செய்பவர்கள் யூதர்கள் என்றும் அவர் முடிவுக்கு வந்திருந்தார்.

பிறப்பால் ஆஸ்திரியரான ஹிட்லர் ஜெர்மனியின் மியூனிச் நகரத்துக்கு வந்து சேர்ந்தார். சிற்பக் கலையில் புகழ்பெற்ற தன்னுடைய தேசத்துக்கு சேவை செய்யும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார். சோதனையாக, வியன்னாவின் ராணுவப் பணியில் சேர ஹிட்லருக்கு ஆணை வந்தது.

விருப்பமே இல்லாமல் மீண்டும் வியன்னா சென்றவர், உடல் தகுதி இல்லை என்று மகிழ்ச்சியுடன் மியூனிச் திரும்பினார்.

கடவுள் தந்த வரமாகவே முதல் உலகப் போரை நினைத்தார் ஹிட்லர். போரின் வழியாக ஜெர்மனியை அறிந்துகொள்ள முயன்றார். போரில் ஈடுபட தானாகவே ராணுவத்தில் சேர்ந்தார். தகவல்களைத் தாங்கிச் செல்லும் ரன்னர் வேலைதான். முதல் உலகப்போரில் ஜெர்மனி படுமோசமாகத் தோற்றது. தோல்விக்குக் காரணம் துரோகிகளான யூதர்களும் போல்ஷ்விக்குகளும்தான் என்று குற்றஞ்சாட்ட தொடங்கினார். ஜெர்மனியின் தோல்வியில்தான் ஹிட்லரின் அரசியல் பிரவேசம் தொடங்கியது.

கோர்வையாகப் பேசுவதற்குக்கூட சொற்கள் கைவராத, குரலிலோ, உடல்மொழியிலோ ஈர்ப்பற்ற ஹிட்லர், தன்னுடைய உணர்ச்சிகளால், பேச்சைக் கட்டமைத்தார். ஹிட்லர் பேசியதெல்லாம் இரண்டே விஷயங்கள்தான் ஜெர்மனி... ஜெர்மானியர்களுக்கே. யூதர்களை வேரோடு அழிக்க வேண்டும்.

அரசியலில் ஈடுபட்டு, குறுகிய காலத்தில் பிரபலமான ஹிட்லர், தன் நோக்கங்களை நிறைவேற்ற தொடங்கிய அரசியல் கட்சிதான் நேஷ்னல் சோஷலிஸ்ட் ஜெர்மன் ஒர்க்கர்ஸ் பார்ட்டி என்ற நாஜி கட்சி. தேர்தலை சந்தித்து, ஜனநாயகத்தின் வழியாகவே ஜெர்மனியின் சான்ஸ்லரானார் ஹிட்லர்.

பதவியேற்றவுடன் தூய்மையான ஜெர்மனியை உருவாக்குவதே தன் ஆட்சியின் லட்சியம் என்று மனித குலத்துக்கே முரணான ஒரு லட்சியத்தை அறிவித்தார். உலகமே கண்டிராத  இனஅழித்தொழிப்பு வேலையை ஹிட்லரின் ஆட்சி அரங்கேற்றியது. தாங்கள் கொன்றழித்தவர்களும் தங்களைக் கொன்றழித்தவர்களுமாக ரத்த வரலாற்றைக் கொண்டது யூத இனம்.

யூதர்களின் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. ஜெர்மானியர்களுடன் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் கடைகளுக்குள் நுழையவும்  கலாச்சார நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன. ஆறு வயதுக்கு மேற்பட்ட யூதர்கள் மஞ்சள் நிற வில்லையொன்றை அணிந்துகொள்ள வேண்டும் போன்ற யூதர்களுக்கு எதிரான உத்தரவுகளை ஹிட்லர் அரசாங்கம் பிறப்பித்தது.

வாழ்வதற்கான கட்டுப்பாடு கள் போல் தோற்றம் தரும் இந்த உத்தரவுகளுக்குத் தேவையே இல்லாமல், தினம் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

முதலில் ஒவ்வொரு வராகக் கொல்லப்பட்டார் கள். யூதர்கள், கம்யூனிஸ்ட் கள், சோஷலிஸ்ட்கள் என்று கொல்லப்பட வேண்டி யவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, ஒரே நேரத் தில் ஆயிரக்கணக்கான வர்களைக் கொடுமைப் படுத்தவும் கொல்லவும் கொலை முகாம்கள் உரு வாக்கப்பட்டன. நீண்ட

கூடங்களில் அடைத்து வைத்து குழாய் வழியாக

கூடத்துக்குள் விஷ வாயுவை செலுத்தி, கொல்பவனின் வேலையை எளிதாக்கினார்கள். விதவிதமாக சித்ரவதை செய்து கொல்வது எப்படி என்று மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். புதிய கொலைக் கருவிகளை அறிஞர்கள் கண்டுபிடித்தார்கள். துப்பாக்கிகள் குண்டுமழை பொழிந்து வெடிக்க மறந்தன. யூதர்களை எரித்துக்கொண்டே இருந்த நெருப்பும் குளிர்ந்து போனது. ஹிட்லரின் பேயாட்டத்தில் ஜெர்மனியில் மட்டும் 50 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இதில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம். ஏறக்குறைய இரண்டு லட்சம் குழந்தைகள்.

வன்முறையின் உச்சகட்டம்

‘உறைந்த இசை’ என செவ்வியல் கட்டிடங்களை கலைமனத்துடன் படைத்த ஹிட்லர் ஏன் சர்வாதிகாரியானார்? பத்தாண்டுகள் நீடித்த ஓர் இனப் படுகொலையை ஜெர்மானிய மக்கள் எவ்வாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்? யூத வெறுப்புணர்வு ஹிட்லருடையது மட்டும்தானா? அறிவுஜீவிகள் மவுனம் காத்தார்களா அல்லது எதிர்த்துக் காணாமல் போனார்களா? வெறும் ராணுவ பலத்தால் மட்டுமே இப்படிப்பட்ட மனித ஒழித்தழிப்பைச் செய்திருக்க முடியுமா் போன்ற கேள்விகள் காலத்தில் முன்னால் விடையின்றி காத்திருக்கின்றன. வன்முறையின் உச்சகட்டத்தில், நல்லபிள்ளையாக சர்வதேசத்தின் கண்களைக் கட்டி, ஒலிம்பிக் போட்டியொன்றையும் நடத்தியிருக்கிறார் ஹிட்லர்.

இந்தியா பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருப்பதையே ஒரு ஜெர்மானியனாக நான் விரும்புகிறேன் என்ற ஹிட்லர், ஆட்சிக்கு வந்தவுடன், பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற நேதாஜிக்கு முழு ஆதரவளித்தார். ஹிட்லரின் மரணம் இந்தியாவின் விடுதலையை இரண்டாண்டுகள் பின்னுக்குத் தள்ளியது.

ஹிட்லரின் பேயாட்டம்

சர்வாதிகாரி என்றாலே ஹிட்லர் பெயர் மனதுக்குள் வருகிறது. ஆனால், ஹிட்லரின் மறைவுக்குப் பின், ஜப்பான் மேல் அமெரிக்கா அணுகுண்டு வீசி பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. ரஷ்யா, ஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் நிகழ்த்திய இனப்படுகொலைகளும் ஹிட்லரின் சர்வாதிகாரத்துடன் இணைத்து விவாதிக்கப்பட வேண்டியவையே.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியில் அசாத்திய வளர்ச்சியை உண்டாக்கிய ஹிட்லர், இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி வைத்ததன் மூலம், தன்னுடைய வீழ்ச்சியையும் ஜெர்மனியின் வீழ்ச்சியையும் உறுதி செய்தார்.

ஐரோப்பிய தேசங்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமே ஹிட்லரின் பேயாட்டத்தில் கதிகலங்கிப் போயிருந்த நேரத்தில் போரின் இறுதிக் காட்சிகள் அவருக்கு எதிராகத் திரும்பின. ஜெர் மனியைவிட்டு வெளியேற தயாராக இல்லாத ஹிட்லர், தோல்வியை ஏற்று மரணத் துக்குத் தயாரானார். தனக்கு விசுவாசமான ராணுவத் தளபதிகளுடனும் உதவியாளர்களுடனும், தங்கியிருந்த நிலவறையில் 1945, ஏப்ரல் 30-ம்

தேதி மதிய உணவுக்குப் பிறகு விடைபெற்றார்.

கடைசி நாள் மதியம்

மதிய உணவு நேரமே, ஹிட்லரின் சொற்கள் ஆணைகளாகப் பிறப்பிக்கப் படும் நேரம். மரணத்துக்குப் பின், தன்னுடைய உடல் எதிரிகளின் கையில் சிக்காமல் எரிக்கப்பட வேண்டும் என்ற கடைசி மதிய உணவு நேர உத்தரவைப் பிறப்பித்தார். அவருடைய நீண்டநாள் காதலி ஈவா பிரவுனுடன் திருமணம் முடிந்து ஒன்றரை நாட்களே ஆகி இருந்தது. இருவரும் அறைக்குள் சென்றார்கள்.

ஹிட்லரின் நிழலாக இருந்த கெப்பல்ஸ், ஹிட்லரின் மரணத்துக்குப் பிறகு தன் ஆறு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்ள வெளியே காத்திருக்கிறார். பத்து நிமிடங்கள் கழித்து ஹிட்லரின் அறைக்குள் செல்கிறார்கள். ஈவா பிரவுன் ஹிட்லரின் தோள்மேல் சாய்ந்திருக்க அவரின் காலடியில் துப்பாக்கிக் கிடந்தது.

ஹிட்லரின் வலது நெற்றியில் வழிந்திருந்த ரத்தம், ஜெர்மானிய அடையாளங்களற்று  மனித ரத்தமாக மட்டும்தான் இருந்தது.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x