

திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளி தன்னுடைய வளாகத்திற்கு 1,300க்கும் மேற்பட்ட ஆளுமை களை வரவழைத்து உள்ளது. அப்படி வருகை தந்த ஆளுமைகள் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோருடன் கூட கலந்துரையாடி இருக்கின்றனர். அங்கு வருகை தந்த ஆளுமைகளில் வெறும் 31 பேருடைய உரைகளை மட்டும் தொகுத்து 'வெளிக் காற்று' எனும் நூலாக கொண்டு வந்துள்ளனர். மிகக் குறைவான உரைகள். என்றாலும் அந்நூல் ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக வந்திருக்கிறது.
உரையாற்றியவர்களில் களப்பணியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், நடிகர்கள் , எழுத்தாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பத்திரிகையாளர்கள், நம் நாட்டின் தேர்தல் ஆணைய உயர் பொறுப்பில் இருந்தவர் எனப் பலரும் பேசி இருக்கின்றனர். வரலாறு, இலக்கியம், வாசிப்பு, கனவுகள், அரசியல், சமூகம், நாடகம், இசை, கல்வி என வாழ்வின் அனைத்து சாளரங்கள் வழியாகவும் வீசியிருக்கிறது வெளிக் காற்று.. அந்த உரைகளை எல்லாம் மூத்த எழுத்தாளர் கமலாலயன் எழுத்தாக்கம் செய்துள்ளார்.