

அரூபத்திலிருந்து ரூபத்தைக் கொண்டு வருவது ஓவியக் கலை. ஓவியக் கலையில் எத்தனையோ வகைமைகள் இருந்தாலும் கற்பனை, படைப்பாற்றல், செய்நேர்த்தி, உருவாக்கம் போன்றவற்றில் தன்னிகரற்ற சிறப்பைக் கொண்டது தஞ்சாவூர் ஓவியக்கலை.
இதனையே தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கான கருப்பொருளாக ஆய்வு செய்திருக்கிறார் ஜெ.அமுதன். ஓவியத் துறையில் நுண்மான் நுழைபுலம் மிக்க நூலாசிரியரின் திறமை, நூலின் பக்கத்துக்குப் பக்கம் பளிச்சிடுகிறது.தகவல்களை வெறுமனே சொல்லிவிட்டுச் செல்லாமல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தொல்லியல் சார்ந்த தரவுகளுடன் `தஞ்சாவூர் ஓவியக்கலை' குறித்த முழுமையான ஓர் ஆவணத்தை இந்த நூலின்வழியாக வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர்.