

இரா.செல்வத்தின் நாவல் ஒன்றை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். ‘பனையடி’ என்பது நாவலின் தலைப்பு. அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமத்து மாணவன் சோர்வுறா தனது முயற்சியால் உயரிய இடத்தை எட்டும் நம்பிக்கையைப் படைப்பாக்கிய முயற்சி அது. தொடர்ந்து தற்போது வாசிக்க நேர்ந்தது ‘ஹார்வர்டு நாட்கள்’ என்கிற அவரது கட்டுரை நூல்.
இந்திய அரசின் ஆட்சிப் பணியில் அமர்ந்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற அனுபவங்களும் அது சார்ந்த சிந்தனைகளும் கொண்ட நூல் இது. 170 பக்க அளவிலான நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நேர்த்தியாக வெளியிட்டுள்ளது. ‘அய்யப்பன் நாயக்கன் பேட்டை அரசுப் பள்ளியிலிருந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு’எனும் முதல் கட்டுரையிலிருந்து ‘இரா.செல்வத்துடன் ஓர் உரையாடல்’ வரை 13 அங்கங்கள் கொண்ட தொகுப்பு இது.