

மறு பதிப்பு காணாத பல நூல்களை சென்னை புத்தகக் காட்சியில் காணமுடிந்தது. இயக்குநர் மகேந்திரனின் ‘மருதாணி’ நாவலும் அவற்றுள் ஒன்று. வானதி பதிப்பகம் சார்பில் 1992 டிசம்பரில் வெளிவந்த இந்த நாவலின் விலை ரூ.18. பத்திரிகையாளராகப் பணியாற்றியபோது அவர் சந்தித்த மனிதர்களின் குணாதிசயங்களை மையமாக வைத்துத்தான் கதை களையும் அவற்றின் கதாபாத்திரங்களையும் வடிவமைத்திருக்கிறார். நாவலைவிட முன்னுரையில் இயக்குநர் மகேந்திரன் எழுதியிருக்கும் தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.
சட்டம் படிக்க சென்னைக்கு வந்த வரை சினிமா உலகுக்கு அழைத்துச் சென்றவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமா வில் மனம் ஒன்றாத நிலையில் ஊருக்குக் கிளம்பியவரை முழுநேரப் பத்திரிகையாளராக மாற்றியவர் ‘சோ’. நாடக ஆசிரியராக ஆக்கி, திரைப்படக் கதை வசனகர்த்தாகவாக மாற்றியவர் நடிகர் சிவாஜி கணேசன்.