

இந்தப் புத்தகத்தில் உள்ள 35 பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். பல இடங்களில் படித்தது, பேட்டிகளாகக் கேட்டது, கற்பனைகள் என அனைத்தும் சேர்ந்ததுதான் இந்தப் புத்தகம். இந்தத் தொடர் ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டல் பக்கத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்றதாகும்.
இசைஞானியின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம்தான் இந்த நூலில் எழுத்துகளாக உருப்பெற்றுள்ளன. அவரது ஒவ்வொரு பாடலும் தந்த அனுபவத்தையும் நுட்பமாக நூலாசிரியர் இதில் விவரித்துள்ளார். இளையராஜா ரசிகர் ஒருவர் அவரது இசைத் தலைவனுக்குச் செய்த புகழாரம் இந்த நூல் எனலாம்.
இளையராஜாவுடன் இசையிரவு
குமார் துரைக்கண்ணு
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 74012 96562
இந்து தமிழ் திசைஅரங்கு எண்: 55 & 56
முகத்திலறையும் சொற்கள்! | சிறப்பு: தமிழ்ச் சிறுகதைக்குப் புதிய வரவாக வந்துள்ளது இந்தத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘தொக்கம்’ என்கிற கதை, தமிழ்ச் சிறுகதைக்கான லட்சணம் எனலாம். சொல் முறையும் உடற்கட்டும் இந்தக் கதையை தமிழ்ச் சிறுகதைகள் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தருகின்றன. உக்கிரமான வட்டார மொழியில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகளின் மாந்தர்கள் எளியவர்கள். மாறாத யதார்த்துடன் அவர்களை சதிஷ் படைத்திருப்பது விசேஷமானது.
கட்டக்கால்
சதிஷ் கிரா
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.170
அரங்கு எண்: 530,531
பத்திரிகையாளரின் குரல் | செம்மை: ரமோன் மகசேசே விருது பெற்ற பத்திரிகையாளர் ரவீஷ் குமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்திய ஜனநாயகம் இன்றைக்கு எப்படி உள்ளது என்பதை இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் துணிச்சலுடன் சொல்கின்றன. பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் ஒரு தூண் என்கிற அடிப்படையில் மதவாத அரசியல் முன்னெடுக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் சில கேள்விகளை முன்வைக்கிறது இந்த நூல். சமகால அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அந்த விதத்தில் ரவீஷ் குமாரின் குரல் முக்கியமானது.
சுதந்திரப் பேச்சு
ரவீஷ் குமார் (தமிழில்: பி.கே.ராஜகோபால்)
எதிர் வெளியீடு
விலை: ரூ.375
அரங்கு எண்: F-43
வெளி அரங்கில் இன்று... புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (04.01.25) மாலை 6 மணி அளவில் ‘அறிவை விருத்திசெய்’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ம.எஸ்தர் ஜெகதீஸ்வரி உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து, ‘வாசிப்பால் உயர்ந்த வரலாறு’ என்கிற தலைப்பில் கிருங்கை சேதுபதி உரையாற்றுகிறார். ‘தமிழ் எழுத்துகளில் உழவனின் வாழ்க்கை’ என்கிற தலைப்பில் பெ.மகேந்திரன் உரையாற்றுகிறார். பபாசி செயற்குழு உறுப்பினர் H.B.அசோக்குமார்
வரவேற்புரையும், பபாசி நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர் கே.மோகன் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.