பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது? | சிறப்பு

பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது? | சிறப்பு
Updated on
2 min read

உலகில் மூலதனச் சந்தை மதிப்பீடு அடிப்படையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்துப் பெரும் சந்தை மதிப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியப் பங்குச் சந்தைகளில் தினமும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்குப் பங்கு பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு பெரும் பணம் புழங்கும் பங்குச் சந்தைக் களத்தில் எவ்வாறெல்லாம் மோசடிகள் நிகழ்கின்றன என்பதை இந்த நூல் விரிவாக அலசுகிறது. ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக், அதானி உள்ளிட்ட இந்தியப் பங்குச் சந்தையைப் புரட்டிப் போட்ட விவகாரங்கள் பற்றி இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தை செயல்பாடுகளைக் கண்காணித்து, ஒழுங்குபடுத்தும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட செபி அமைப்பு பற்றியும் இந்நூல் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளது. பங்குச் சந்தை செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை மோசடிகள்
சொக்கலிங்கம்
வெங்காயம் பதிப்பகம்
விலை: ரூ.120
அரங்கு எண்: 517-518

பேப்பர் போடுபவர்களின் கதை | செம்மை: நம் வீடுகளுக்கு நாளிதழ்களைச் சேர்ப்பவர்கள், காலங்காலமாக நமது பண்பாட்டின் ஓர் அம்சமாகவே ஆகிவிட்டார்கள். பேப்பர் போடுபவர்கள் இல்லாமல் நமது ஓர் அன்றாடத்தை சினிமாவோ இலக்கியமோ சித்திரிக்க முடியாது. அறிவுமணியின் இந்த நாவல், பேப்பர் போடுபவர்களின் கதையையே ஒரு நாவலாகச் சித்திரித்துள்ளது. லாவகமாக நம்மிடம் நாளிதழ்களைச் சேர்க்கும் அவர்களது நுட்பத்தைத் தாண்டிய வாழ்க்கையை யதார்த்தத்துடன் பதிவுசெய்கிறது இந்த நாவல்.

ஒரு பகுதிநேர வேலையான இது அவர்களது நாளைக் கைக்கொள்ளும் விதத்தையும் நாவல் சொல்லிச் செல்கிறது. சொக்கன் என்கிற கதாபாத்திரம் பேப்பரை எடுத்துச் செருகிக்கொள்வதிலிருந்து பேப்பர் போடும் இந்தப் பண்பாட்டின் எல்லாக் கூறுகளையும் இந்த நாவல் ஓர் அரும்பணியாகப் பதிவுசெய்துள்ளது. கவனிக்கப்படாத உதிரித் தொழிலாளிகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்த விதத்தில் அறிவுமணியின் இந்த நாவல் தமிழில் விசேஷமானது.

சார்... பேப்பர்
அறிவுமணி
ஆதி பதிப்பகம்
விலை: ரூ.290
அரங்கு எண்: 120

வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி | நம் வெளியீடு: என்ன படிப்பது என்னும் தேடலில் இன்றைய இளைஞர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. மறுபுறம், படித்த படிப்பிற்கான வேலை வாய்ப்பு என்ன என்று அறிய வேண்டியுள்ளது. இரண்டும் இரு வேறு தீவுகளாக உள்ளதால் இதனை இணைத்துப் பாலம் சமைக்க உற்ற வழிகாட்டுதல் அவசியமாகிறது. இவ்வழிகாட்டுதல் இன்மையால் பெரும்பாலான மாணவர்கள் / இளைஞர்கள் தங்களின் படிப்புக்கான வேலை வாய்ப்பைப் பெறுவதில் தோல்வியடைகின்றனர்.

ஏதேனும் பட்டப் படிப்பினைப் படித்துவிட்டு, வேலைவாய்ப்பைப் பெறலாம் என்கிற கால ஓட்டத்தில் அருங்காட்சியகத்தின் அங்கமாகிவிட்டது. சரியான வேலைவாய்ப்புகளை நோக்கிய நகர்வுகளுக்கான வழிகாட்டும் முயற்சிதான் இது. தமிழ்நாடு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை, முன்னாள் திட்ட இயக்குநர் இரா.நடராஜன் இந்த நூலின் ஆசிரியர் என்பது கூடுதல் சிறப்பு.

வேலைக்கு நான் தயார்
இரா. நடராஜன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 74012 96562

இந்து தமிழ் திசைஅரங்கு எண்: 55 & 56

வெளி அரங்கில் இன்று... புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (30.12.24) மாலை 6 மணி அளவில் ‘விருந்தும் மருந்தும்’ என்கிற தலைப்பில் கு.ஞானசம்பந்தன் உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து ‘சின்னஞ்சிறு கதைகள் பேசி’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் மாலன் உரையாற்றுகிறார். பபாசி முன்னாள் தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்புரையும் பபாசி செயற்குழு உறுப்பினர் எம்.பாலாஜி நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in