“அறியப்படாத வரலாற்றை எழுத வேண்டும்!” - எஸ்.ஜெயசீல ஸ்டீபன் நேர்​காணல்

“அறியப்படாத வரலாற்றை எழுத வேண்டும்!” - எஸ்.ஜெயசீல ஸ்டீபன் நேர்​காணல்
Updated on
3 min read

சோழமண்டலக் கடற்கரையின் வரலாற்றை, குறிப்பாக, காலனியக் காலக்கட்டத்தில் அதன் பன்முக வரலாற்றுப் பரிமாணங்களை, பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் ஆய்வுகளை மேற்கோள் காட்டாமல் நிறைவுசெய்ய முடியாது. 58 ஆய்வு நூல்கள், 38 ஆய்வுத்தொகைகளில் அத்தியாயங்கள் என விரிந்து பரந்த ஆய்வுலகம் அவருடையது. முத்துவிசய திருவேங்கடம் பிள்ளை, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை ஆகியோரின் நாட்குறிப்புகள் உள்பட 15 வரலாற்று ஆவணங்களைப் பதிப்பித்துள்ளார்.

ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையின் நாட்குறிப்புகளைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் தமிழகம் வந்த இயேசு சபை பாதிரியார்களின் கடிதங்களைப் போர்த்துக்கீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். அவரது ஆய்வு நூல்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டுவருகிறது. (அரங்கு எண்:F-9) அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.

தமிழ்க் கல்விச் சூழலில் வரலாற்றுத் துறையின் தொடக்கம் எவ்வாறு இருந்தது?

முற்காலத்தில் இளவரசர்களுக்கு அவர்கள் மன்னராகும் வரை வரலாறு கற்பிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் தமிழகத்தில் கிடைக்கப்பெறவில்லை. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் வரலாறு எழுதத் தொடங்கப்பட்டதால் முற்கால வரலாற்றைப் பலர் எழுத ஆரம்பித்தனர். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் அடிப்படையில் சிறப்பாகப் படைக்கப்பட்டது. அரசியல், சமுதாய, கலாச்சார நிலைகளை விளக்கி, முற்கால வரலாறு எழுதப்பட்டுள்ளது. வரலாறு பல வகைகளில் உருவாக்கப்பட்டாலும், தோற்றம், வளர்ச்சி, மாற்றம், தொடர்ச்சி பற்றி எழுதப்படாதது ஒரு குறையே.

இன்றைய கல்விப் புலத்தில் வரலாற்றுப் படிப்புகள் நிறைவளிக்கின்றனவா?

நாம் வாழ்ந்த உலகம், நடந்த நிகழ்வுகள், தோன்றிய இயக்கங்கள் பற்றிய தகவல்களை வரலாறு கற்பித்தலில் சேர்க்க வேண்டும். வரலாற்றுக் கல்வி கற்பிப்பது இன்றியமையாதது. இவை சிந்தனை வளர்ச்சிக்கு உதவும். எனவே, தெரிவிக்கப்பட்டுள்ள, புதிய தகவல்களை மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது. மனப்பாடம் செய்யும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். வரலாற்றுச் சிந்தனை உருவாக ஊக்குவிக்க வேண்டும். நல்ல குடிமகனாக வாழ வரலாறு முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும்.

கல்வி/வரலாறு என்பது பொதுவாக மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்பதால், ஆளும் கட்சிகள்/ஆட்சியாளர்கள், கட்டுப்படுத்த முயலுகின்றனர். இதனால் விவாதங்களும் எதிர்மறைக் கருத்துகளும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுகின்றன. இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் மக்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் உள்பட்ட வரலாற்றை மக்களை அடையாளம் காணாமல் பொத்தாம் பொதுவாக இந்திய வரலாறு என்ற தலைப்பில் கற்பித்தல் சரிவராது. வரலாறு கற்பித்தலின் கொள்கையாக ‘பன்மையும் குடியாட்சியும்’ (Diversity and Democracy) அமைய வேண்டும்.

இந்திய வரலாற்றில் கலாச்சார, மொழி, இன வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குடிமக்களின் அல்லது குடியாட்சியின் வரலாறு சிக்கலானது மட்டுமன்றி, அவ்வளவு எளிதானதல்ல. தனிநபர்களும் குழுக்களும் அறியப்பட்டு அவர்கள் படைத்த வரலாறு வெளிப்பட வேண்டும். பல்வேறு பின்னணியைக் கொண்டுள்ள இனங்கள், மதங்களின் அடையாளங்கள் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்தின என்பதை வெளிக்கொணர வேண்டும். வரலாறு கற்பித்தல் நாட்டுப்பற்றை உருவாக்கவும் நல்ல தேசபக்தியுடைய குடிமக்களை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டது.

நாட்டின் வரலாற்றை அறியவும், நீதிபோதனைக் கல்வியை ஊட்டவும் செய்யப்பட்டது. வரலாறு வெற்றியையும் பெருமையையும் கொண்டாடுவதற்காக அல்ல. அமைதியையும் சகிப்புத்தன்மையையும் உணர்த்துவதே வரலாறு. திணிக்கப்பட்ட வரலாறும் புகுத்தப்பட்ட வரலாறும் எக்காலத்திலும் எடுபடாது.

வரலாற்று ஆய்வில் நீங்கள் காலனிய ஆட்சிக் காலத்தையும் கடல்சார் வரலாற்றையும் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

ஐரோப்பியர்களின் தமிழக வருகைக்குப் பின்னர் பல ஐரோப்பிய மொழி பேசியவர்கள் பதிவுசெய்த ஆவணங்கள் அடிப்படையில், வரலாறு அறியப்படாமலும் எழுதப்படாமலும் உள்ளது. அந்த ஒரு பெரிய இடைவெளியை நிரப்பும் வகையில், காலனிய ஆட்சி பற்றி எழுத ஆரம்பித்தேன். எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் இந்த விவரங்கள் இல்லாமல் உள்ளது. மக்களை மையப்படுத்தி எழுத வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது.

தமிழ் மொழி, பொருளாதார, சமுதாய, கலை, தொழில்நுட்பம், பண்பாடு, அறிவியல் தொடர்பான தமிழர்களின் வரலாறு ஐரோப்பியர்கள் கண்டு வியந்தது தெரிவிக்கப்பட வேண்டும். காலனியம் எப்படி உருவானது, வளர்ந்தது, மக்களும் நாடும் எப்படி அந்நியர் கைவசமாயின, ஏற்பட்ட சீரழிவுகள், மக்கள் புலம்பெயர்ந்தது, உலக வரலாறும் உள்ளூர் வரலாறும் எப்படிப் பின்னிப் பிணைந்தவை என்பதை அறிவது அவசியம். ஐரோப்பியர்களின் தமிழக வருகைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளின் வரலாறு எழுதப்படத் தொடங்கியுள்ளது. முக்கியமாக, பல்வேறு ஐரோப்பிய மொழிகளின் அடிப்படையில் ஆவணங்கள் மூலம் வரலாறு வெளிப்படுகிறது. காலனிய ஆட்சியின் வரலாறு நீண்டது, நெடியது என்பதை நாம் அறிவோம்.

வரலாற்று நூல்களுக்குப் பரவலான வாசகர்கள் இருக்கிறார்கள். வரலாற்று நூல்களும் பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கின்றன. ஓர் ஆய்வாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பலரும் வரலாறு எழுதுகிறார்கள். வரலாறு எழுதுவதற்கு ஒரு தகுதி வேண்டும். வரலாறு எழுதத் தன் தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டும். முதன்மை ஆவணங்களைத் தேட வேண்டும். ஒரு துப்பறிவாளனைப் போலத் தகவல்களைத் திரட்ட வேண்டும், சேகரிக்க வேண்டும். அவற்றை அலசிப் பார்த்து எழுத வேண்டும். பல்பரிமாண வரலாறு உண்மையாக வெளிப்பட வேண்டும்.

ஆவணங்கள் மூலமாகப் பேச வேண்டும். ஒவ்வொரு காலக்கட்டம், நூற்றாண்டுகள் இடைவெளியில் ஏற்பட்ட கருத்து வெளிப்பாடுகள், வரலாற்றில் மனித முன்னேற்றம் ஆகியவை தெளிவாக விளக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். தகுதியுடைய நபர் வரலாறு எழுதினால் சிறப்பாய் இருக்கும் என்பதில் இரு வேறுபட்ட கருத்து இருக்க முடியாது.

வரலாற்று ஆய்வுகளில் சிறப்புக் கவனம் வேண்டியுள்ளவை என்று தாங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

உலகம் ஒரே நிலைப்புத் தன்மையில் இயங்கவில்லை, மாற்றம் தொடர்கிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர், பல்வேறு காலக்கட்டங்களில் 75 ஆண்டுக்கான தமிழக வரலாறு எழுதப்பட வேண்டியுள்ளது. 1947க்குப் பின்னர் தமிழகத்தின் முன்னேற்றம், எந்தத் துறைகளில் பின்தங்கி உள்ளது என்பன வெளிப்படுத்தப்பட வேண்டும். உண்மையில், ஒரு முதலமைச்சர் ஊழல் வழக்கில் சிக்கிச் சிறை சென்ற வரலாறு, பல ஆண்டுகளாக வழக்கு நடந்த விதம், நீதித் துறை, காவல் துறை செயல்பட்ட விதம், போன்ற நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. கசப்பானவை அடங்கிய வரலாறும் எழுதப்பட வேண்டும். கசப்பும் உண்மையில் ஒரு சுவைதானே. அனைவரையும் திருப்தி செய்யும் வரலாற்றை ஒருகாலும் எழுத முடியாது.

வரலாற்றுச் சங்கங்கள் பெயரளவில்தான் இயங்குகின்றன; இயங்காமலும் இருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் வரலாற்று ஆராய்ச்சியை முனைப்பாகச் மேற்கொள்ள வேண்டும். எழுதியதை எழுதாமல், அறியப்படாமல் உள்ள வரலாற்றை எழுத வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களைப் புதிய பாதையில் திருப்பிவிட வேண்டும். அறிவு உலகத்திற்குப் பயன்படும் வரலாற்றை எழுத வேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி ஆவணங்களைச் சீர்தூக்கிப் பார்த்து நடுநிலையுடன் வரலாறு எழுதப்பட வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும். ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றி எழுதப்படும் வரலாறு, காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் என்றும் நிலைத்து நிற்கும்.

- தொடர்​புக்கு: ilavenilse@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in