

கிதார் இசைக்கும் துறவி - எஸ். ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம் 9789825280
தனக்கெனத் தனிமொழி, கொண்ட பொருளை நோக்கி அதை நகர்த்தும் தன்மை ராமகிருஷ்ணன் கதைகளின் தனித்துவம். அதற்கு இந்நூல் ஓர் உதாரணம். செக்காவின் கதாபாத்திரங்கள், இரவுக் காவலாளியின் தனிமை எனச் சுவாரசியம் அளிக்கும் பல கருக்களில் இந்தக் கதைகள் அமைந்துள்ளன.
வீடு வெளி - சி.மோகன் - டிஸ்கவரி புக் பேலஸ். 99404 46650
நவீன உலகில் ஒரு ஆணின் தனிமை நெருக்கடிகள், நிறைவேறா விருப்பங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டு இந்த நாவல் மொழியப்பட்டுள்ளது. வாழ்க்கையின் அற்புத தருணங்களையும் காதல் செய்யும் குறுக்கீடுகளையும் மோகன் இதில் நிகழ்த்தியுள்ளார்.
நெஞ்சறுப்பு - இமையம் - க்ரியா பதிப்பகம். 72999 05950
உறவுச் சிக்கல்களைச் சமீப காலமாகத் தொடர்ந்து சித்தரிக்கும் இமையத்தின் படைப்பு இது. யதார்த்தமாகப் பரிமாறிக்கொள்ளும் கைப்பேசி எண், ஒருவனின் வாழ்க்கையை என்ன பாடுபடுத்துகிறது என்கிற நவீனச் சிக்கலை நவீன மொழியில் சொல்லும் நாவல் இது.
காடு விளையாத வருஷம் - மு.சுயம்புலிங்கம் - மணல் வீடு பதிப்பகம், 98946 05371
கரிசல் மொழியை பூமணிக்குப் பிறகு நவீனப்படுத்தியவர் மு.சுயம்புலிங்கம். கரிசல் சம்சாரிகளின் அன்றாடங்களைத் திருத்தமாகச் சித்தரிக்கின்றன இந்தக் கதைகள். சமூகத்தையும் நிலத்தையும் இத்துடன் இந்தக் கதைகள் பதிவுசெய்கின்றன.
சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் - சு.தமிழ்ச்செல்வி - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். 044 2625 1968
தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்க்கைப் பாடுகளைத் தன் கதைகளில் தொடர்ந்து சொல்லிவரும் சு.தமிழ்ச்செல்வியின் சிறுகதைகள் இவை. ஒரு மானிடவியல் ஆய்வுநோக்கும் இந்தக் கதைகளுக்கு உண்டு. சிக்கலில்லாத எளிய உரையாடல் மொழி இவரின் சிறப்பாகும்.
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன் - நூல் வனம் வெளியீடு, 91765 49991
ஈழப் போரின் துண்டுச் சித்திரங்களாக இத்துங்கதை வடிவம் திரண்டுள்ளது. எளிய மனிதர்கள், அவர்களின் எளிய நம்பிக்கைகள் ஆகியவற்றின் மீது பீரங்கிகள் ஏறிச் சென்ற கதையை அகரமுதல்வன் தன் தனித்த மொழியில் சொல்லியிருக்கிறார்.
ஜிகிட்டி - கவிப்பித்தன் - தடாகம் வெளியீடு. 89399 67179
சமூக மாற்றத்தால் கேள்விக்குள்ளாகும் ஒரு கூத்துக் கலைஞனின் பாடுகளைச் சொல்லும் நாவல் இது. கவிப்பித்தன், வட ஆர்க்காடு வட்டாரத்தின் தனித்துவமான மொழியை இலக்கியத்தில் கொண்டுவந்து சேர்த்த விதத்தில் இந்த நாவல் விசேஷமானதும்கூட.
வேறு வேறு சூரியன்கள் - சந்திரா தங்கராஜ் - எதிர் வெளியீடு/சால்ட்(முதல் பதிப்பு). 04259 226012
‘எழுத்து’ மரபின் தொடர்ச்சி சந்திரா தங்கராஜ். மாயமும் யதார்த்தமும் முயங்கிக் கிடக்கும் சந்திராவின் இந்தக் கவிதைகள் அதற்கான சாட்சியங்கள். நவீன உலகின் துயரங்களை இந்தக் கவிதைகள் நதியின் நீர்ப்பரப்பில் மிக எளிமையாக மிதக்கவிடுகின்றன.
தரூக் - கார்த்திக் பாலசுப்ரமணியன் - காலச்சுவடு பதிப்பகம். 04652 278525
தன் ஆஸதிரேலிய வாழ்பனுவத்தை அங்குள்ள இனவெறி என்கிற சமூகப் பின்னணியுடன் கார்த்திக் பாலசுப்ரமணியன் இந்த நாவலில் சொல்கிறார். சமகால யதார்த்தத்தை 18ஆம் நூற்றாண்டின் வரலாற்றுடன் மோதச் செய்வதன் வழி இந்நாவலைச் சுவாரசியப்படுத்துகிறார் கார்த்திக்.
ஆகிதம் - நவமகன் - கருப்புப் பிரதிகள் 94442 72500
ஈழத்துப் புலம்பெயர் வாழ்க்கையைச் சொல்லும் கதைகள் இவை. ஈழத் தமிழ்ப் பண்பாட்டை நெஞ்சில் கொண்ட அந்த மனிதர்களின் கதைகள் இவை. புலம்பெயர் தேசத்தின் இந்த மனிதர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டு முரண்களையும் இக்கதைகள் விவரிக்கின்றன.