

சென்னை: சென்னை இலக்கியம், கலை விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர்கள், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதள உலகில் பழைய கதைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சென்னை சர்வதேச மையம் (சிஐசி) சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் ‘சென்னை இலக்கியம் மற்றும் கலை விழா 3.0’ நேற்று நடைபெற்றது. சிஐசி தலைவர் கோபால் சீனிவாசன் தலைமை வகித்து ‘வெளியுறவு கொள்கை பற்றிய நுண்ணறிவுகளை பேசும் நிபுணர்கள்’ (Experts Speak Insights on Foreign Policy) என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை ஐசிடி அகாடமி இயக்குநர் என்.லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில், ஸ்காட்லாந்தை சேர்ந்த வில்லியம் டேல்ரிம்பிள், அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் கொட்கின் உட்பட 20 எழுத்தாளர்கள் பங்கேற்று 8 அமர்வுகளில் உரையாற்றினர். நேபாள எழுத்தாளர் ஸ்மிருதி ரவீந்திரன் எழுதிய ‘மரம் ஏறிய பெண்’ (The Woman Who Climbed Trees) என்ற பிரபல நூலின் விளக்கவுரை விவாதமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
சிஐசி தலைவர் கோபால் சீனிவாசன்: சென்னை மக்களிடம் அறிவுசார் உணர்வை தூண்டும் இடமாக அமைய வேண்டும் என்ற நோக்கில்தான் சென்னை சர்வதேச மையம் தொடங்கப்பட்டது. தற்போது 10-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இனிவரும் காலங்களில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பிரபலங்களின் கருத்துகள், எண்ணங்கள் ஆகியவை பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் புத்தகங்களாகவும் வெளியிட உள்ளோம்.
எழுத்தாளர் பி.சாய்நாத்: சமூக வலைதளங்களில் எதிர்மறையான, மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்திகள், பதிவுகளை படிப்பதில் அதிக நேரம் செலவிடுவதால் மனநலம் பெரிய அளவில் பாதிப்படைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவது நமது கவனத்தை குறைத்து, நினைவகத்தை பலவீனப்படுத்துகின்றன. நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது மட்டுமின்றி, அதை எங்கு, எப்படி படிக்கிறீர்கள் என்பது முக்கியம்.
எழுத்தாளர் ஸ்மிருதி ரவீந்திரன்: ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு கல்யாண நிகழ்வுகளும் பல கதைகளை கொண்டிருக்கும். ஆனால், இன்றைய இன்ஸ்டகிராம் உலகத்தில் இதுபோன்ற கதைகள் சொல்லப்படுவது இல்லை. அதனால், பழைய கதைகள் இறந்து கொண்டிருக்கின்றன. வலைதளங்கள் வழியே பழைய கதைகளை நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இலக்கிய விழாவையொட்டி, பங்கேற்ற எழுத்தாளர்களின் நூல்கள் சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் சிஐசி நிர்வாக இயக்குநர் சந்திரமவுலி, அமைப்பு குழு உறுப்பினர்கள் டி.எஸ்.திருமூர்த்தி, வித்யா சிங், நிகழ்ச்சி குழு தலைவர் வி.கே.சபரிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, நேற்று முன்தினம் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் 6 இளம் எழுத்தாளர்கள் பங்கேற்று உரையாற்றினர்.