

பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதியின் இரண்டாவது கவிதை நூலிது. தனது மகளின் குறும்புகள், தந்தைக்கும் மகளுக்குமான உரையாடல்கள், மகளின் வழியாகக் கண்டடைந்த குழந்தைமை தரிசனங்களே நூலெங்கும் கவிதைகளாக உருப்பெற்றுள்ளன.
‘ஒருவழியாக / தாலாட்டுப் பாடி முடித்து/அவளுக்குப் பதிலாக/நான் கண்ணயர்ந்த காலையில்/‘பாப்பா’ என்றொரு குரல் கேட்டு/திடுக்கிட்டெழுந்தேன்’ எனும் வரிகளில் எல்லா அப்பாக்களுமே விழித்தெழுந்த நினைவுகள் மேலெழும்புவது நிச்சயம். ‘கோவில் முற்றத்தில்/விழுந்து கிடந்தன பல சூரியன்கள்/ஒவ்வொன்றிலுமாய் கால் பதித்துச்/செல்கிறாள் மகள்/ஒவ்வொரு மிதிப்பிலும்/அணைத்துக் கொள்கின்றன/பஞ்சும் நெருப்பும்’ எனச் சொற்களைக் கடந்தும் காட்சிகளின் வழியாக நம்மோடு உறவாடும் இக்கவிதைகளின் வழியே மகளை மட்டுமல்ல, அன்பின் வழி உருவான பெண்ணையும் சேர்த்தே போற்றியுள்ளார். - மு.முருகேஷ்
மாமகள் போற்றுதும்
நிரஞ்சன் பாரதி
வானவில் புத்தகாலயம்
விலை: ரூ.111
தொடர்புக்கு: 044-29860070
புவி வெப்பமாதலால் என்ன நடக்கும்? - இன்றைய உலகின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று, புவி வெப்பமாதல். அதனால் ஏற்படும் சிக்கல்கள் அதிகம். எதிர்காலமே இதனால் கேள்விக்குரியதாக உள்ளது. அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும், அதன் விளைவுகள் எவையெவை என்பவற்றை இந்த நாவல் சொல்கிறது.
ஒரு தீவு போன்ற பகுதியில் புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்வதும் அதனால் அங்குள்ள பள்ளிகள் மூடப்படுவதும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக அதன் பாதிப்பு தொடர்வதையும் பல அனுபவங்கள் மூலம் சொல்கிறார் நாவலாசிரியர். அவர்களுக்குள் ஏற்படும் அன்பை, காதலை யதார்த்தமாகக் கூறியிருக்கிறார். இதில் குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விஸ்வரூபம் எடுப்பதை அனுபவங்கள் மூலம் இந்த நாவலில் சொல்லியிருக்கிறார். - மதுராந்தகன்
வெப்பம் (சிறார் நாவல்)
சுப்ரபாரதிமணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
விலை: ரூ.55
தொடர்புக்கு: 044 2625 1968
மாயாஜாலக் கதைகள்: காலத்தால் அழியாத கதைகளில் ஒன்று விக்கிரமாதித்தன் கதைகள். உஜ்ஜைனி மன்னன் விக்கிரமாதித்தனின் அருமை, பெருமைகளைக் கூறும் விதத்தில் 32 பதுமைகளும் வேதாளமும் சொன்ன கதைகள் இவை. இந்தக் கதைகள் மூலம் அந்தக் கால வாழ்க்கை முறை, பிறருக்கு உதவும் குணம், பக்தி போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. மாயாஜாலக் கதைகளை விரும்புவோருக்கு இந்தக் கதைகள் சுவாரசியத்தை அளிக்கும். பெரிய பக்கங்களில், பெரிய எழுத்துகளில், படங்களுடன் புத்தகம் வந்திருப்பது வண்ணமயமான வாசிப்புச் சுவாரசியத்தை அளிக்கும். - ஸ்நேகா
விக்கிரமாதித்தன் கதைகள்
அரு.வி.சிவபாரதி
அருணா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 94440 47790