சுவாரசியமான மொழியில் ஆங்கிலப் பயிற்சி! | நம் வெளியீடு

சுவாரசியமான மொழியில் ஆங்கிலப் பயிற்சி! | நம் வெளியீடு
Updated on
3 min read

ஆங்கிலத்தில் பிழையின்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உதவும் கட்டுரைகளைத் தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பல இணைப்பிதழ்களிலும் எழுதிவருபவர் ஜி.எஸ்.எஸ். அந்த வரிசையில், ‘உலக மொழி உங்களிடம் - பாகம் 3’ நூல் வாசக கவனம் பெற்ற நூலாகும்.

ஆங்கிலத்தை அலுவல் சார்ந்த மொழியாகவே பெரும்பாலும் அணுகுவார்கள். ஆனால், ஜி.எஸ்.எஸ். அதையும் தாண்டி, அந்த மொழியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் அர்த்தம், அந்த வார்த்தையின் வேர்ச்சொல் எந்த மொழியில் இருக்கிறது என்பது போன்ற விரிவான தகவல்களையும் போகிற போக்கில், படிப்பவர்களின் மனதில் பதியவைத்துவிடும் வல்லமை மிக்கவர்.

வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமான ‘போட்டியில் கேட்டுவிட்டால்’, ‘கேட்டாரே ஒரு கேள்வி’ போன்ற சுவாரசியங்கள் இந்நூலிலும் இடம்பிடித்துள்ளன. மேலும், கேலிச்சித்திரங்களின் வழியே வெளிப்படும் ரசனையான உரையாடல்கள், குட்டிக்குட்டி வடிவில் பெட்டிச் செய்திகள் எனச் சுவாரசியங்களின் பட்டியல் நூலில் இடம்பெற்றுள்ளன.

உலக மொழி உங்களிடம்
பாகம் - 3
ஜி.எஸ்.எஸ்.
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.160

மருத்துவச் சந்தேகங்களுக்கான பதில்கள்! - மருத்துவரீதியிலான சந்தேகங்கள் நிறைய எழும் காலம் இது. அன்றைக்குப் பலரும் அண்டை அயலார், உறவினர்களிடம் இதற்கு ஆலோசனை கேட்டார்கள். இன்றைக்குப் பலரும் கூகுளிடம் தஞ்சமடைந்து, சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முயல்கிறார்கள். இது தேவையற்ற குழப்பத்துக்குக் காரணமாகிவிடுகிறது.

டாக்டர் கு.கணேசன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறை சார்ந்து எளிய தமிழில், சாதாரண மக்களும் மருத்துவ அறிவியலைப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி எழுதிவருபவர். மக்களை அச்சுறுத்தாமல், அறிவூட்டும் வகையிலும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் பொறுப்புள்ள ஒரு மருத்துவராக எழுதிவருகிறார்.

வாசகர்கள், தங்களுக்கு ஏற்பட்ட மருத்துவச் சந்தேகங்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அனுப்பினர். அதற்கு டாக்டர் கு.கணேசன் அளித்த பதில்கள் வரவேற்பைப் பெற்றன. அதுவே தற்போது நூலாகத் தொகுக்கப்பட்டு்ள்ளது. மருத்துவரீதியிலான சந்தேகங்களுக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக, துணையாக அமையும்.

படுத்துக்கொண்டே செல்போன் பார்த்தால் தலைவலி வருமா, ஷவர்மா சாப்பிடுவது உயிரிழப்புக்குக் காரணமாக அமையுமா, குறட்டையைச் சரிசெய்வது எப்படி, சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாமா, சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்கலாமா? - இப்படிப் பல்வேறு சந்தேகங்களுக்கு டாக்டர் கு.கணேசன் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூலில் பதில் தந்துள்ளார்

டாக்டர்
பதில்கள்
டாக்டர் கு.கணேசன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.200

தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications

வைக்கம் போராட்டத்தின் கதை: இந்தக் கதையை நான்கு தெருக்கள்தான் எழுதச் செய்திருக்கின்றன. கேரளத்தில் உள்ள வைக்கம் சிவன் கோயிலைச் சுற்றிய தெருக்கள்தான் அவை. அங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் அப்போது காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த பெரியார் தலைமையில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தால் சமத்துவம் நிலைநிறுத்தப்பட்டதும் வரலாறு. இந்தப் புதினம், அந்தப் போராட்டத்தை இன்றைய தலைமுறையின் குரலில் மீள்பார்வை செய்துள்ளது.

பெரியார் வழியில் பயணிக்கும் ஒரு இளைஞன், தனது வாழ்க்கைத் துணைக்குப் பெரியார் கருத்துகளை அறிமுகப்படுத்த விழைகிறான். அந்த உரையாடல், வைக்கம் போராட்டத்திலிருந்து தொடங்குகிறது. வைக்கத்துக்கு நேரடியாகச் சென்று வந்த அனுபவம் சார்ந்த ஊக்கத்துடன் கி.தளபதிராஜ் இக்கதையை எழுதியிருக்கிறார். ‘வைக்கம் போராட்டம்’ நூலின் ஆசிரியரும் ஆய்வாளருமான பழ.அதியமான் எழுதியுள்ள அணிந்துரை, சம காலத்தில் இந்நூலின் தேவையை வலியுறுத்துகிறது. - ஆனந்தன் செல்லையா

நாலு தெருக் கத
கி.தளபதிராஜ்
திராவிடன் குரல்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94434 93766

திண்ணை | இந்து தமிழ் திசை நூலுக்குப் பரிசு: ‘இனிய நந்தவனம்’ மாத இதழில் 28ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சுயமுன்னேற்ற நூல்களுக்கான போட்டியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட ‘பெரிதினும் பெரிது கேள்’ முதல் பரிசை வென்றுள்ளது. பிரியசகி எழுதியிருக்கும் இந்த நூல் இதுவரை மூன்று வெவ்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அருணோதயம் அருணன் நூற்றாண்டு விழா: பதிப்பக முன்னோடி சின்ன அண்ணாமலை வழியில் பதிப்பகத் துறையில் நுழைந்தவர் அருணன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் நட்புகொண்டவர். 1953இல் அருணோதயம் பதிப்பகத்தைத் தொடங்கி, கவிஞர் கண்ணதாசனின் ‘ஈழத்து ராணி’ சிறுகதை தொகுப்பை முதல் நூலாக வெளியிட்ட பெருமை கொண்டவர்.

‘தென்றல்’, ‘அருணன்’ ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர். கவிஞர், கட்டுரையாளர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். அருணோதயம் அருணன் நூற்றாண்டு இது. இதை முன்னிட்டு அருணோதயம் பதிப்பகம் 100 நூல்களை வெளியிடவுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in