காவல் | அகத்தில் அசையும் நதி 3

காவல் | அகத்தில் அசையும் நதி 3
Updated on
3 min read

வாசலில் யாரோ வழுக்கிவிழும் சத்தம் கேட்டது. சுதாரித்து எழுந்த செல்லபாங்கியக்கா வானத்தை வைதுகொண்டிருந்தாள்.

“வாங்கக்கா.”
“எங்குட்டு வாறது? முத்தத்துல பெரண்டு எழும்புனாத்தான் உள்ள வுடுவ போலருக்கு?”
“கீழ சாஞ்சிட்டியளாக்கா?”
“இஞ்சபாருங்கச்சி பதிஞ்சி கெடக்குறத்த. இவ்வள தூரம் வழுக்கியடிச்சா சாயாம நிக்க முடியுமா?”
“ஐயய்யோ பாத்து வரக்கூடாதுக்கா?”
“கட்டவெரல ஊணிவச்சிதான் நடந்தன். எப்புடி வழுக்குச்சின்னே தெரியலங்கச்சி.”
“உள்ள வாங்கக்கா.”
உள்ளே வந்தாள். சூடுகாட்டி எடுத்துவந்த காப்பியைக் கொடுத்தேன்.
“ஒனக்கு புண்ணியமாப் போவுங்கச்சி.”
“எதுக்குக்கா?”
“சுடச்சுட வாயில ஊத்துறன்ல. உள்ளங் காலுல ஏறுற ஈரம் நெஞ்சாங்கொல வரைக்கும் வெறச்சி போவுதுல்ல.”
“சரிசரி குடிங்க.”
“யாங்கால பாரங்கச்சி. இத்தி எடம் பாக்கியிருக்கா? வெரலிடுக்கெல்லாம் கொதகொதன்னு இருக்கு.”
“பொழுதேனைக்கும் சேத்துக்குள்ளயும் தண்ணிக்குள்ளயுமே நின்னுகிட்டு இருந்தா இப்புடித்தான் ஆவும்”.
“என்னங்கச்சி பண்ணுறது? கடகன்னிக்கி போவாண்டாமா? தண்ணிவெண்ணிக்கு வெறவுசத்தைக்கு வெளிய கெளம்புறதில்ல? சரிங்கச்சி. அது கெடந்துட்டுப் போவுது. வடவாண்ட வேலியில மருதண்ணி செடி இருந் திச்சே இருக்கா வெட்டிப் போட்டுட்டியளா?”
“இருக்குக்கா.”
“ஒரு கையி உருவிக்கிட்டுப்போயி அரச்சி ரெண்டு காலுலயும் அப்பிக்கிட்டு படுக்கணுங் கச்சி. அரிச்ச அரிப்புல ரெண்டு நாளா கண்ணகொண்டு மூடமுடியலங்கச்சி.”
“அதுக்கென்ன நீங்க உருவிக்கிட்டு போங் கக்கா” என்றதும் வடவாண்டை வேலியில் அடர்ந்து உயர்ந்திருந்த மருதாணிச் செடியைப் பார்த்தபடி நடந்தாள். சற்று நேரத்திலேயே மடியைச் சுருட்டிப் பிடித்தபடி வந்தாள். மடி நிறைய மருதாணி இலைகள்.
“என்னக்கா போன சொவடு தெரியல, அதுக்குள்ள வந்துட்டிய. போதுமா?”
“கிண்டல்தானங்கச்சி பண்ணுற?”
“இல்லக்கா. நான் எதுக்குக் கிண்டல் பண்ணப்போறன் சொல்லுங்க?”
“அது கெடக்கட்டும். நீ சொல்லுங்கச்சி. இது நல்லா செவக்குமுல்ல?” “சேத்துப்புண்ணுல அப்புறது செவந்தான்ன செவக்காட்டிதான் என்னக்கா?” “அதுக்கில்ல. நான் ஒண்ணு சொன்னா நீ சிரிக்கக் கூடாது.” “சிரிக்கமாட்டேன் சொல்லுங்கக்கா.”
“யாந்தங்கச்சி மவள நாளைக்கி பொண்ணு பாக்க வாறாவொ. நானுந்தான போவணும். அதான் ஒத்த கைக்காவது அழகா மருதண்ணி வச்சிக்கிடலாமேன்னு பாத்தன்.”
“அதான் சங்கதியா? சரிசரி. ஒரு கையில மட்டும் என்ன? ரெண்டு கையிலயுமே போட்டுக் கிடுங்க. ஒங்கள யாரு கேக்கப்போறா?”
“என்ன இருந்தாலும் அததுக்கான வயசுன்னு ஒண்ணு இருக்கில்லங்கச்சி?”
“ஒங்களைப் பாத்தா வயசானமேரி தெரியலக்கா. நீங்க போட்டுக்கிடுங்க.” வெட்கப்பட்டுச் சிரித்தாள்.
“வந்துருக்குற எடம் கொஞ்சம் பெரிய எடம். படிச்ச குடும்பமாம். மாப்புள்ளக்கு போலீஸ்
கார வேலயாம். அவங்களுக்குத் தக்கன கொஞ்ச மாச்சிம் நம்மளும் இருக்கணுமுல்லங்கச்சி.”
“நீங்க சொல்றது சரிதாங்கா.”
“வந்து பாக்குறம். பொண்ணு புடிச்சிருந்தா மறுநாளே நீங்க வந்து மாப்புள்ள வூட்ட பாருங்க. ஒங்களுக்கும் புடிச்சிருந்தா வாரம் பத்துநாளுல முகூர்த்தோல எழுதிடுவமுன்னு சொல்லிருக்காவோ.” “நல்லத்துதானக்கா.”
“இந்தக் கல்யாணம் மட்டும் நடந்துட்டுதுன்னு வச்சிக்கயேன், எங்க ஏழெட்டுக் குடும்பத்துக்கும் எந்தப் பயமும் இருக்காது. யாரும் எதுக்காவயும் எங்ககிட்ட நெருங்ககூட முடியாது. எல்லாத்தையும் எங்க சின்னகுட்டி புருசன் பாத்துப்பாரு.”
“அது யாருக்கா?”
“அதான் நாளைக்கி பொண்ணு பாக்க வரப்போராவொல்ல, அந்த மாப்புள்ளதான். அவரு போலீஸ்காரு இல்லயா அதான்.”
“மாப்புள்ளய பத்தி அக்கம்பக்கம் விசாரிக்க யாருக்கா போனா?” “என்னங்கச்சி இப்புடிக் கேக்குற? ஊருல சுத்துற திருட்டுப் பயலுவள, கள்ளச்சாராயம் விக்கிற பயலுகள, கொலகாரப்பயலுகளயெல்லாம் வெரட்டிப் புடிக்கிறவரு. அவரப்போயி யாராவது விசாரிப்பாவொளாங்கச்சி? கத்துகுடுக்குற வாத்தியாருக்கு வித்த தெரியுமான்னு சந்தேகப் பட முடியுமா? சரிங்கச்சி மறுமழ வந்துடும் போலருக்கு நான் பொயிட்டு வாறன்” என்றவள் குடலைமட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

போலீஸ்காரர்களை அப்பழுக்கற்றவர்களாக, கடவுளுக்கு நிகரானவர்களாகப் பார்க்கும் செல்லபாங்கி அக்காவின் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது? இந்த அக்காவின் நம்பிக்கையைக் காப்பாற்றக் கூடியவராக இந்த மாப்பிள்ளை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஏனோ இந்த நேரத்தில் எனக்குக் ‘காவல்’ கதைதான் நினைவுக்கு வந்தது. அதில் பொன்னி என்கிற பெண் புறநகர் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு எதிர்புறம் இளநீர் கடை போட்டிருப்பாள்.

அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி வனிதா பொன்னியின் இளநீர் கடைக்கு வரும் பிரச்சினைகள் முதல் பொன்னியின் கணவன் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது உள்பட அனைத்துப் பிரச்சினைகளிலும் பொன்னிக்கு அரணாக நின்றார். இளநீர் வெயிலில் காய்ந்து போகாமல் இருக்க, தலைக்கு மேலாக ஐந்தாறு கீற்றுகளைக் கொண்டு பந்தல் போட்டி ருந்தாள் பொன்னி. நாளடைவில் அதிலேயே தன் கணவன் பிள்ளைகளுடன் வசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

இரவு நேரத்தில் மழை வந்துவிட்டால் மட்டும் எதிர் வரிசையில் உள்ள குளிர்பானக்கடையின் வராண்டாவில் போய் முடங்கிக் கொள்வார்கள். இளநீர் குடிக்க வரும் சிலர் அவளிடம் இரட்டைப் பொருளில் பேசுவார்கள். இன்னும் சிலர், ‘இரவு வரலாமா?’ என்பார்கள். அப்போதெல்லாம் வனிதா கொடுக்கும் தைரியத்தில் ‘கையில கத்தி வச்சிகிட்டு நிக்கிறவகிட்டயே இந்தச் சேட்டையா? எளனி சீவுறதப் பாத்தும் பயமில்லாம போயிடுதா?’ என்று புன்னகைத்தபடியே சமாளிப்பாள்.

ஆனால், எதிர்கடைக்காரன் ஒருவனின் தொல்லையிலிருந்து மட்டும் என்ன செய்தும் அவளால் விடுபட முடியாமல் போய்க்கொண் டிருந்தது. இரவு நேரத்தில் தன் கடைக்கு வரும்படி அவளை மிரட்ட ஆரம்பித்திருந்தான். இவன் இப்படிச் செய்வது அவளுடைய கணவனுக்குத் தெரிந்தால் அவன் வெட்டு கிறேன் குத்துகிறேன் என்று பெரும் பிரச்சினை யாக்கி, கடையைக் காலி செய்துவிட்டுக் கிராமத்திற்கே போகும்படி செய்துவிடுவான்.

இந்த விஷயத்தை வனிதா மேடத்திடம் சொல்லித்தான் சரிசெய்ய வேண்டுமெனத் தீர்மானித்தாள். பொழுதுசாயும் நேரம் இரண்டு இளநீரை எடுத்துக்கொண்டு காவலர் குடியிருப்புக்குச் சென்றாள். பிரச்சினையைப் புரிந்துகொண்ட வனிதா, “இத நீ காலையி லேயே சொல்லிருந்தா உடனே அவனக் கூப்பிட்டு சரி பண்ணிருப்பேனே.

இப்ப நான் ஒரு முக்கியமான மீட்டிங் போகணும், அமைச்சர், கலெக்டர் எல்லாம் வர்றாங்க. நான் வந்துசேர ராத்திரி மணி பன்னண்டு, ஒண்ணு ஆகிடும். இன்னைக்கு நைட்டு மட்டும் சமாளிச்சிக்க. காலையில எழுந்ததும் முதல் வேல அவனுக்கு லாடம் கட்டுறதுதான். நான் இருக்கேன் பயப்படாம போயி இரு” என்று சொல்லியனுப்பினாள்.

இன்னைக்கு மட்டும்தான் எப்படியாவது சமாளித்து விடுவோமென நினைத்தவள் இரவில் தண்ணீர் குடிக்கக்கூட எழவில்லை. பிள்ளைகளை அணைத்தபடி தலைதூக்காமல் கிடந்தாள். எப்போது விடிந்ததென்று தெரியவில்லை. ஐயையோ வனிதா மேடம் வர்ற நேரமாச்சே என்று துடித்துப் பிடித்து எழுந்தாள். காவல் நிலையத்தில் ஒரே கூட்டமாக இருந்தது.

‘ஏதோ பெரிய பிரச்சினை போலருக்கு, ஊரே தெரண்டு வந்திருக்கு’ என்று நினைத்தாள். கடையிலிருந்து டீ வாங்கிக்கொண்டு வந்த அவளுடைய கணவன், “பொன்னி, நம்ம வனிதா மேடம் எவ்வளவு நல்லவங்க. அவங்களப் போயி அந்தப் பொறுக்கி நாயி அடிச்சித் தொங்க விட்டுட்டானாம்.

அவன்கூட வேலைபாக்குற போலீஸ்காரன்தானாம். ராத்திரி ஏதோ மீட்டிங் போனாங்களாம். திரும்பி வரும்போது அந்தாளு குடிச்சிட்டு மேடத்த தொந்தரவு பண்ணிக்கிட்டே வந்தானாம். இங்க வந்து கையெழுத்துப் போட்டுட்டு வீட்டுக்குப் போவக்குள்ள பின்னாடியே போயி இந்தக் காரியத்த பண்ணிருக்கான்.” பொன்னிக்கு அவன் மேற்கொண்டு சொன்ன எதுவும் காதில் விழவில்லை. அவள் கால்களுக்குக் கீழே தரை நழுவியது. மண்ணில் சரிந்தாள்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.co

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in