கரோனா காலத்து கதை | நூல் வெளி

கரோனா காலத்து கதை | நூல் வெளி
Updated on
2 min read

‘ஹம் மஜ்தோரோங்கொ காவ் ஹமாரே பேஜ் தோ சர்கார் சூனா படா கர் த்வார்...’ (‘நாங்க கூலிக்காரங்க எங்கள எங்க ஊருக்கே அனுப்பிடுங்க கவர்மெண்டே/மூளியாய்க் கிடக்குது எங்க வீடும் வாசலும்’) இந்தப் பாட்டை முகக்கவசத்தால் முகத்தை மறைத்திருந்த ஒரு புலம்பெயர் தொழிலாளி பாடுகிறார். யூடியூபில் கேட்கலாம். நாகரிகப் பூச்சற்ற, விடியலில் நம்பிக்கையற்ற குரல். நீங்கள் தமிழில் இதே குரலை எழுத்தாளர் இமையத்தின் ‘உப்பு வண்டிக்காரன்’ நாவலில் கேட்கலாம்.

“சுற்றிலும் கேட்கும் குரல்களும், சந்திக்கும் மனிதர்களும், பார்க்கும் காட்சிகளும்தான் என் கதைகளாய் உருவெடுக்கின்றன” என்கிறார் இமையம். ‘உப்பு வண்டிக்காரன்’ கதை உருவானதற்கு இந்தப் பாடல் ஒரு முக்கியக் காரணி. இந்தக் கதையை கதாபாத்திரமான ‘கவர்னரின்’ குரல் வழியாகத்தான் நாம் கேட்கிறோம்.

ஆனால், கவர்னர் கதை சொல்லி அல்ல. திரும்பத் திரும்ப ஒரே பெயர்களைக் கேட்டு அழுத்தியதனாலோ என்னவோ, சண்முகம்-முத்துக் கருப்பாயி தம்பதி தங்கள் அருமை மகனுக்கு கவர்னர் என்று பெயரிட்டார்கள். அந்தப் பெயரால் அவன் எதிர்கொண்ட நக்கலும் சிரிப்பும் வேறு கதை. கவர்னர் ஒரு சாவுக்குப் போகிறான்.

செத்தவர் கரோனாவில் செத்தாரோ என்ற சந்தேகத்தினால், கவர்னரையும் அவன் பெற்றோரையும் தனிமைப்படுத்திவிடுகிறார்கள். உப்பை வண்டியில் வைத்துத் தெருத்தெருவாகப் போய் விற்ற சண்முகமும், கருவாட்டையும் கத்திரிக்காயையும் தலையில் வைத்துத் தெருத்தெருவாகப் போய் விற்ற முத்துக் கருப்பாயியும் தனித்தனியே அறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஜோடி பிரியாமல் இந்த வயசிலேயும் இருக்கிறார்கள் என்று ஊரே சொல்கிறது. ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை. கவர்னர் பிறந்து பதினெட்டாம் நாளிலேயே சண்முகம், முத்து கருப்பாயி தலை மேல் கருவாட்டுக் கூடையை ஏற்றிவிடுகிறார். நிற்காமல் நடந்த கால்கள், பிரியாமல் வாழ்ந்த ஜோடி. இவர்கள் கால்களில் தடை போட்டு, ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் செய்கிறது கரோனா. செடிக்குத் தண்ணீர் ஊற்றவில்லை என்றால் செடி என்ன ஆகும்? அது தான் இங்கும் நடக்கிறது.

கவர்னர் பெற்றோர் சொல் பேச்சைக் கேட்காமல் வளர்ந்த பிள்ளைதான். ஆனால், இப்போது அவனைக் குற்ற உணர்வு வாட்டுகிறது. அம்மா போகாதே என்று சொல்லியும் அந்தச் சாவுக்குப் போய், அப்பா - அம்மாவையும் தனிமை என்ற நரகத்தில் தள்ளி விட்டோம் என்ற குற்ற உணர்வு. அவன் மனதில் அப்பா - அம்மாவைப் பற்றிய கடந்த கால நினைவுகள். சண்முகம் நம் கண் முன் ஒரு நெடிய உயர்வான ஆளுமையாக விரிகிறார். முத்து கருப்பாயியும்தான்.

ஓரிரு ஆண்டுகளிலேயே நாம் மறந்துவிட்ட அந்தப் பொதுமுடக்க நாள்களை, மனிதம் நீர்த்துப்போன நாள்களை, மனதின் ஈரம் காய்ந்து போன நாள்களை, பயம் நம்மைக் கவ்விக்கொண்ட நாள்களை, நாம் மறக்கக் கூடாது என்று அதைப் பதிவு செய்துள்ளார் இமையம். இது ஓர் ஆவணம், படிப்படியாகக் கரோனாவின் பிடி நம்மை என்ன செய்தது என்பது இதில் சொல்லப்பட்டுள்ளது. நாம் இயல்பான மனிதர்களாக இல்லாமல் மாறிப்போன அந்த நாள்களை இந்த நாவல் பதிவுசெய்துள்ளது.

‘உயிரக் கையில புடிச்சிக்கிட்டுத்தான் வேல செய்ய வேண்டியிருக்கு. ஆஸ்பத்திரிக்குள்ளார வர்றதுக்கே பயமா இருக்கு’ - இது ஒரு அதிகாரியின் குரல். ‘நேத்து ராத்திரி யூடியூப்ல பாத்தன்.. எந்த நாடுன்னு மறந்துபோச்சி... லாரிலாரியா கொண்டாந்து பெரிய பள்ளத்தில பொணத்தக் கொட்டுறான்’ - இது கவர்னரின் நண்பன். பிஹாரில் கரோனா வார்டிலிருந்து தப்பித்து வந்த பெண்ணைக் கணவனும் வீட்டாரும் அடித்து விரட்டுகிறார்கள். அதைப் பார்த்துக் கசந்து போகிறான் கவர்னர்.

அப்பாவைப் பார்க்க முடியாமல், அப்பாவைப் பார்த்தேன் என்று அம்மாவிடம் சொல்ல முடியாமல், அப்பாவிடம் ஒரு நாள்கூட வாய் வார்த்தையாகப் பேசவில்லையே என்று கவர்னர் புலம்புகிறான். ‘தொட்டதும் பட்டென உடையுங்குமிழ்/கை பட்டதும் கலங்கு நீர் வட்டக்குளம்/உயிர் விட்டதும் சில்லிடும் ஊனுடல்/மனம் கெட்டதும் மாயை மாயை மகாமாயையே’ என்று அன்றே திருக்கோவிலூர் கார்த்திகைச் சித்தர் பாடி வைத்ததாக கவர்னரின் நண்பர் சொல்வது கவர்னர் காதில் விழவில்லை. ஆனால், கரோனா எப்படி உலகத்தை, மனித மாண்பை, உறவுகளை உயிரைத் தலைகீழாக மாற்றியது என்பதை இமையம் சொல்வது நம் காதில் அழுத்தமாக விழுகிறது.

உப்பு வண்டிக்காரன் இமையம்
க்ரியா
விலை: ரூ.350
தொடர்புக்கு: 72999 05950

- தொடர்புக்கு: prabha.sridevan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in