காயம் வருடும் கைகள்... | நூல் நயம்

காயம் வருடும் கைகள்... | நூல் நயம்
Updated on
2 min read

சுஜாதா காலம் கடந்து தன் சிறுவயதைக் கனவு காணும் சிறுமியாய், காதலில் கசிந்துருகும் கன்னியாய், மறுக்கப்பட்ட சுதந்திரத்திற்காகக் குமுறும் மனைவியாய், கடலைக் களவாடும் பெண்ணாய் நீரைப் போல ஒவ்வொரு ஜாடிக்குள்ளும் நிரம்பிப் பார்த்திருக்கிறார். ‘மீறலின் சுவை’ என்ற கவிதையில் ஒரு பாதி நான் என்றால் மறு பாதி யார் என்ற கேள்வி மிகவும் ஆழமானதாக இருக்கிறது. அதேபோலக் கவிதையின் கடைசி வரிகள் ‘மீறிச் செல்லும் கால்கள் மட்டுமே திருவிழா காண்கின்றன’ என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

எனக்கு எப்போதும் பெண்கள் காமத்தைப் பற்றி எழுதும்போது அதில் ஒரு மையல் உண்டு. ‘நிலவை இசைத்தல்’ என்ற கவிதையில் ‘நிலாவைச் சுருட்டி இசை மெல்லப் பரவும் பாடலுக்கு நீல நிறம்’ என்பது எத்தனை அழகிய கற்பனை? இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘தேசாந்திரியின் பை’. விலக்கு நாள்களில் எங்கு துணி மாற்றுவாள், யாருமற்ற பாதையில் துணிந்து நடப்பாளா, மரத்தடி உறக்கத்திற்கு உத்தரவாதம் உண்டா? - இத்தனை கேள்விகளோடுதான் இன்றும் தேசாந்திரியின் பெண்பால் பயணிக்க வேண்டியுள்ளது.

‘ஒரு துண்டு வானம்’ மனதில் ஒரு புதிய உத்வேகத்தை உண்டாக்கும் கவிதை. எப்போது கடலுக்குச் சென்றாலும் இன்றுவரை ஒரு கிளிஞ்சலையாவது வீட்டுக்குப் பத்திரப்படுத்தி எடுத்துவரும் சிறுமி என்னுள்ளும் இருக்கிறாள். எனவே, இந்தக் கவிதை கூறுவதுபோல இன்றும் கடலைக் களவாடிக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எப்போதும் என் மகளுக்குப் பிடித்தமான உணவைச் சமைக்கும்போது, ஒரு பூனைக்குட்டியைப் போல அவள் என் சமையலறையில் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டே இருப்பாள். அப்போது சிறிதளவு அவளுக்கு ஊட்டிவிட்டு “ருசியை அறிந்துவிட்டாய், இனி பசி வரும் வரை காத்திரு, அப்போதுதான் முழுதாய் உன்னால் இந்த உணவை அனுபவிக்க முடியும்” என்று கூறுவேன். அதேபோல ஒரு கரண்டி அளவு கவிதைகளை உங்களுக்குத் தந்துவிட்டேன். மீதி எப்போதெல்லாம் உங்கள் வாசகப் பசி உச்சம் தொடுகிறதோ, அப்போது இந்தப் புத்தகத்தைக் கையில் எடுங்கள்..ருசி கண்டிப்பாகக் கூடுதலாக இருக்கும். - மலர்விழி

கடலைக் களவாடுபவள்
சுஜாதா செல்வராஜ்
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 90809 09600

கதைகளின் கதைகள்: நீங்க எழுத்தாளர் ஆகணுமா? ஆசை இருக்கா? யாரெல்லாம் எழுத்தாளராகலாம்? உங்களுக்கு வாசிப்பில் ஆர்வம் இருக்கா? இந்தப் புத்தகத்தை வாசித்தால் நிச்சயமா அதற்கான பதில் கிடைக்கும். எழுத எழுத எழுத்து வரும் என்னும் நம்பிக்கையில் எழுதத் தொடங்கினால் நிச்சயமாக எழுத்து வரும். நம்மைப் பாதிக்கும் நிகழ்வுகள் எழுதத் தூண்டும் என்பதை உணர்த்தும் நூல். சிறார்களுக்காக எழுதப்பட்டு இருக்கும் கதைசொல்லிகளின் கதைகள். நூலில் மொத்தமாக 16 எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

ஒவ்வொரு எழுத்தாளருமே என்ன காரணத்திற்காக எழுதத் தொடங்கி இன்று புகழ்பெற்ற எழுத்தாளர்களாக ஆனார்கள் என்பதைச் சிறார்களுக்குக் கதைசொல்லியாக இருந்து பதிவுசெய்திருக்கிறார் சிந்தன். இந்நூலில் பெண் எழுத்தாளர்கள் 11 பேரைப் பதிவுசெய்திருப்பது கூடுதல் சிறப்பு. சிறார்களுக்கு எந்த மாதிரியான கதைகளைச் சொல்ல வேண்டும், எந்தக் கதைகளைச் சொல்லக் கூடாது என்பது போன்ற குழப்பங்களுக்கு நிச்சயமாக இந்நூல் வழிகாட்டியாக இருக்கும்.

வரலாறு, கல்வியின் முக்கியத்துவம், ஆசிரியரின் பணி, மறைக்கப்பட்ட சாதனைப் பெண்களின் வரலாறு, மூன்றாம் பாலினத்தவர்களைப் பற்றிய புரிதல், போரால் ஏற்படும் துயரங்கள் இதெல்லாம் குழந்தைகளிடம் பேச முடியுமா? முடியும் என்கிறார் சிந்தன். A for Apple, b for ball. என்றுதானே அனைவரும் படித்திருப்போம். குழந்தைகளுக்கு இப்படித்தானே ஏபிசிடி அறிமுகப்படுத்தி இருப்போம். ஆனால், இங்கு ஒரு அப்பா ஏ பி சி டி வழியாகக் குழந்தைகளுக்கு அரசியலை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

வேறு என்னென்ன அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பதைச் சுவாரசியத்துடன் இதில் சொல்லியிருக்கிறார் சிந்தன். சர்வாதிகாரிகளின் கொடுமை, பாசிசம், அகதிகளின் வாழ்வாதாரப் போராட்டம், போரால் குழந்தைகளுக்கு ஏற்படும் துயரங்கள் அனைத்தையும் கதைகளாகவே அறிமுகப்படுத்தி எழுதியிருக்கும் எழுத்தாளர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற ஒரு பெண்ணினுடைய ஏக்கத்தைக் கதையாக மாற்றிய எழுத்தாளர், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய குழந்தையின் மன உணர்வுகளை எழுதியிருக்கும் எழுத்தாளர், நாசாவில் பணிபுரிந்த கறுப்பினப் பெண்களின் சாதனைகள் பற்றி எழுதிய எழுத்தாளர் எனப் பலதரப்பட்ட எழுத்தாளர்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த நூலை வாசியுங்கள். - ம.பரிமளா தேவி, முதுகலைத் தமிழாசிரியர்

கதை சொல்லிகளின் கதைகள் -
இப்படித்தான் எழுத்தாளர் ஆனாங்களா?
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.65
தொடர்புக்கு: 044 2433 2924

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in