

தங்கள் மகனைக் காணவில்லை என ஒரு தம்பதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறது. அதே நகரத்தின் இன்னொரு கோடியில், சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளைக் கொண்ட ஓர் இளைஞன் காவல் துறையினரால் விசாரிக்கப்படுகிறான். இந்த இரு நிகழ்வுகளும் இணைக்கப்பட்டு, ஒரே கோடாகப் பார்க்கப்படும் வரையில் இங்கே என்னவெல்லாம் நடக்க இயலும் என்பதை ‘துலக்கம்’ புதினம் சித்திரிக்கிறது.
காவலர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினருமே, ஆட்டிச நிலையில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வதற்கு எவ்வளவு தூரம் திறந்த மனதோடு பயணிக்க வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. ஆட்டிசம் விழிப்புணர்வுச் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான யெஸ்.பாலபாரதி இக்கதையை எழுதியுள்ளார். - அகிலாண்டாள்
துலக்கம் (ஒரு பிழையின் விசாரணை)
யெஸ்.பாலபாரதி
மயில் புக்ஸ்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 99402 03132
மிகைகளின் விடுபடல்: தாமரைபாரதியின் ‘தெறுகலம்’ கலிவிருத்தப்பாவில் எழுதப்பட்ட கார்த்திகைச் சித்தர் பாடல்களின் தொகுப்பு. நம் மொழி மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. வடிவங்கள் மாறுபாடு அடைந்தபடி இருக்கும் சூழலில், மரபின் நீட்சியாக சங்கப் பாடல்களை நினைவூட்டும் வகையில் இத்தொகுப்பு வந்திருப்பது சிறப்பு. சுட்ட உடல் எனப் பொருள்படும் தெறுகலத்தை விடுபடல் எனவும் கொள்ளலாம். தொகுப்பின் பாடல்கள் மிகைகளிலிருந்து விடுபட இயல்பான வாழ்வைக் கண்டடையலாமெனக் கூறுகின்றன.
இக்காலத்தில் எல்லோரும் தேவைக்கு அதிகமாகப் பற்றுக்கொள்ளும் அவாவில் இருக்க ‘உறுபசி நேரத்தில் உடலின்பம் நகுமோ’ எனும் கேள்வியை எழுப்புகிறார். ‘பட்டதுதான் பாடென்றறி பாழும் மனமே’, ‘இன்பத்திலிருந்து வெளியேறு வீடு பேறடா’ என்பதோடு மட்டுமன்றி, ‘நாயும் நரியும் குதறியுண்ணும் ஊனுடம்பு’ எனும் உண்மையைக் கூறி ‘ஆழ் மயக்கப் போதைப் பொருள் வேண்டாதே’ எனப் பாடல்கள் சுட்டுகின்றன. தேவைகள் உள்ளவரை சிலதைத் திரும்பத்திரும்ப நினைவூட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது.
‘அண்டத்தில் எவனும் உயர்ந்தோன் தாழ்ந்தோனில்லை/ கண்டத்தில் கபடங் கயமைகொண்டோன் வாழ்ந்தானில்லை/ பிண்டத்தின் பெருமைபேசி பிதற்றும் பித்தனே/முண்டத்தில் பொருந்தாதே முடிந்த சிரசு!’ - இப்பாடல் எக்காலத்திற்குமான பாடலாக இருக்கிறது. - ந.பெரியசாமி
தெறுகலம்
தாமரைபாரதி
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 99404 46650
சக பயணியின் புன்னகை: ‘அடுத்த முறை சாலையில் எதிர்ப்படும் சக மனிதனை நோக்கி ஒரு புன்னகையைச் சிந்துவோமெனில், அதுதான் மானுடத்தின் முதல் படி’ என்று சொல்லும் எழுத்தாளர் திருவையாறு பாலகுமாரின் நான்காவது சிறுகதை நூல் இது. இதிலுள்ள கதைகள் பயணங்களை முன்வைத்து இருப்பதால், இந்தக் கதைகளோடு சேர்ந்தே நாமும் ‘சவாரி’ செய்வது இணக்கமான பயணமாக அமைந்துவிடுகிறது.
சென்னை, பருத்திக்குடி, கூவாகம் என முப்பரிமாணத்தில் விரியும் ‘இரவாடிகள்’ கதையில் வரும் பருத்திக்குடி குஸ்தி வாத்தியாரை, கூவாகம் திருவிழாவின் பதினெட்டாம் நாளில் மீண்டும் பார்க்க முடிந்ததொன்றும் எதேச்சையாக அமைந்த செயலென்று சொல்வதற்கில்லை. அவ்வாறே சென்னைப் பெருநகரச் சாலையில் பார்க்க நேரும் ‘ராவடி’ செக்யூரிட்டி முதியவர், ‘லிப்ட்’ தந்தவரை ‘கடவுள் மாதிரி’ என்று சொல்வதும், சில வார்த்தைகளிலேயே தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்வதும் மனதில் நிற்கும் அழுத்தமான வரிகள். - மு.முருகேஷ்
சவாரி
திருவையாறு பாலகுமார்
நாற்கரம் வெளியீடு
விலை: ரூ.100
தொடர்புக்கு: 95510 65500
சிற்றிதழ் அறிமுகம் | கலைவெளியில் பாலியல் சுரண்டல்: எழுத்தாளர் கோணங்கி மீது நாடகக் கலைஞர்கள் சிலர் 2023இன் தொடக்கத்தில் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பல புதினங்களை எழுதியுள்ள கோணங்கி, ‘கல்குதிரை’ இதழின் ஆசிரியரும் ஆவார். அவரது தம்பி முருகபூபதி ‘மணல்மகுடி’ என்னும் நாடகக் குழுவை நடத்திவருகிறார். கோணங்கி நாடகக் குழுவைச் சேர்ந்த பல இளைஞர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகச் சமூக வலைதளங்களில் கார்த்திக் ராமச்சந்திரன், சார்லஸ் முதலானவர்கள் எழுதினர்.
இக்குற்றச்சாட்டை கோணங்கி மறுத்தார். இந்தப் புகாரை முன்வைத்தவர்கள், ‘எஞ்சுனர் கூட்டமைப்பு’ (Collective of Survivors) என்னும் பெயரில் செயல்பட்டு வருகின்றனர். கோணங்கியும் அவருக்குத் துணையாக இருந்ததாகக் கூறப்படும் முருகபூபதியும் பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்துவதுடன், இத்தகைய அத்துமீறல்களால் பாதிக்கப்படும் பிறருக்காகவும் குரல் எழுப்பிவருகின்றனர். அதன் வெளிப்பாடாக, ‘கல்கிடாய்’ என்னும் மலரை வெளியிட்டுள்ளனர்.
கலைச்சூழலில் பாலியல் மற்றும் பிற வன்முறைகளுக்கு உள்ளானவர்களை ஆற்றுப்படுத்துவதே இம்மலரின் நோக்கம். இந்த இதழ் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அமைந்துள்ளது. கோணங்கி மீதான புகார்ப்பதிவுகள், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுக் கட்டுரைகள், நவீன ஓவியங்கள், கிராஃபிக் கதை, பாதிக்கப்பட்டோருக்காகச் செயல்படும் கலை அமைப்புகள், உளவியல் பாதிப்பிலிருந்து விடுபட நாட வேண்டிய மனநல மையங்கள் குறித்த விவரங்கள் போன்றவற்றின் தொகுப்பே இந்த இதழ். - ஆனந்தன் செல்லையா
கல்கிடாய்
ஆசிரியர்கள்: எஞ்சுனர் கூட்டமைப்பினர்
மின்னஞ்சல்: kalkedaimagazine@gmail.com
நம் வெளியீடு | எளிமையான மொழியில் வணிகம்: தொழில்முறை நிர்வாக ஆலோசகரான டாக்டர் ஆர்.கார்த்திகேயன், வணிகம், நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிய தெளிவான அறிமுகத்தை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தொடர்ந்து தமிழில் கட்டுரைகளாகக் கவனப்படுத்தினார். அந்தக் கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகளைச் சேர்த்து வெளிவந்திருப்பதே ‘வணிக நூலகம்’ என்னும் இந்த நூல்.
வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இவருடைய எழுத்தாற்றலின் பலமே, சுருங்கச்சொல்லி விளங்கவைப்பதுதான். புகழ்பெற்ற வணிக நிறுவனங்களின் முதலாளிகள் முதல், நிறுவனங்களை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு சென்றவர்கள் வரை பலர் எழுதிய புத்தகங்களை அவற்றின் சிறப்புகளை, அவர்கள் கடந்துவந்த சோதனைகளை நம் கண்முன் இந்நூல் தரிசனப்படுத்துகிறது. துவண்டிருக்கும் மனதில் புதிய தெம்பையும் நம்பிக்கையையும் விதைக்கிறது நூலாசிரியரின் இதமான சொல்லாடல்.
வணிக நூலகம்
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
திண்ணை | ஞான ராஜசேகரனுக்கு பாரதி விருது: கோவை பாரதி பாசறை வழங்கும் பாரதி விருது இயக்குநர் ஞான ராஜசேகரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியாரின் வாழ்க்கை குறித்த ‘பாரதி’ படத்தின் இயக்குநர் ஞான ராஜசேகரன். எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலைத் திரைப்படமாக எடுத்துள்ளார். அதற்காகத் தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர்.
பாவை விருதுகள்: நாமக்கல் பாவை தமிழ் மன்றம் வழங்கும் ஆன்றோர் முற்றம் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிதைக்கான விருது மனுஷ்யபுத்திரனுக்கும் சிறுகதைக்கான விருது வண்ணநிலவன், ராம் தங்கம் ஆகிய இருவருக்கும் புதின விருது மேகலா சித்ரவேலுக்கும் அறிவியல் புதின விருது கபிலன் வைரமுத்துக்கும் தமிழ்க் கதைசொல்லி விருது திபீகா அருணுக்கும் வழங்கப்படவுள்ளது.
நீலம் 50ஆவது இதழ்: இலக்கிய, அரசியல், தலித்திய, பண்பாட்டு இதழான நீலம், தனது 50ஆவது இதழைக் கொண்டுவந்துள்ளது. இந்த இதழ் பாபாசாகேப் அம்பேத்கரின் சினிமா குறித்த உரையாடல்கள், எழுத்துகள் ஆகியவை அடங்கிய சிறப்புப் பக்கங்களோடு வெளிவந்துள்ளது. ஆய்வறிஞர் ஸ்டாலின் ராஜாங்கம், கவிஞர் யாழன் ஆதி, எழுத்தாளர் அழகியபெரியவன் உள்படப் பலரும் இந்த இதழில் பங்களித்துள்ளனர்.