

‘ஈரம்’ கதையைப் பற்றிச் சொல்லத் தொடங்கி, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் ‘கற்பகநாதர்குளம்’ எப்படி இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். புது பச்சையைக் கண்டுவிட்ட கால் நடைகள் தண்ணீரில் அலம்பியபடி மேயும் ஓசையும், வயல்களில் உழவர்கள் ஏர் ஓட்டும் ஓசையும் நாற்றுப் பறிக்கும் ஓசையும், நாற்று நடும் பெண்களின் நடவுப்பாட்டின் ஓசையும் தங்கள் கால்நடைகளை மேயவிட்டு வாய்க்கால் கரையோரங்களில் சேற்றால் சுவர் கட்டிக் கடியம் குழப்பி மீன்பிடிக்கும் சிறுவர்களின் கடியப்பாட்டின் ஓசையும், கரைதட்டி ஓடும் தண்ணீரில் வாழைக்கட்டைகளை மிதவையாக்கி நீர் விளையாட்டில் களிக்கும் சிறுவர்களின்
‘கோட்டான் கோட்டான்….’
‘யாங்கோட்டான்….’
‘ஆத்துல கொளத்துல….’
‘ஆங்கோட்டான்….’
‘மீனுபுடிச்சி….’
‘ஆங்கோட்டான்….’
‘சுட்டுபொசுக்கி….’
‘ஆங்கோட்டான்….’
‘எல்லாருக்கும் சதையக் கொடுத்தேன்…..’
‘நடராசுக்கு மட்டும் முள்ளக் கொடுத்தேன்….’
என்கிற பாடலின் ஒலியும் தனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதிக்காக நடராசு பெருங்குரலெடுத்துத் தண்ணீரைக் கிழித்தபடி நீந்தி மற்ற சிறுவர்களை நெருங்கும் ஒலியும் என இவையனைத்தும் கலந்ததொரு இன்னிசை கோட்டகமெங்கும் மிதக்கும். வாய்க்கால் தண்ணீரோடு நீண்டதூரம் கடந்து எங்கெங்கோ இருக்கும் மதகுகளிலும் அவை எதிரொலிக்கும். இந்தக் கோட்டகத்தில் ஒரு போகம் சாகுபடிதான் என்றாலும் இதன் வண்டல்மண் விளைச்சலை அள்ளிக் குவிக்கும்.
‘ஈரம்’ கதைக்கு வருவோம். ராசாத்தி, தன் தாய் வேதாம்பாளிடம் எண்ணெய்ப் பசை சிறிதும் இல்லாமல் பன்னாடைபோலக் காய்ந்து சிக்கிட்டுக் கிடக்கும் தன் கூந்தலை விரித்துக் காட்டுகிறாள். தோப்புக் காட்டிற்குச் சென்று ஒல்லித் தேங்காய் பொறுக்கி வந்து கொடு என்கிறாள். அவற்றிலிருந்து கிடைக்கும் சமையலுக்கெல்லாம் பயன்படுத்த முடியாத தேங்காயை அம்மியில் அரைத்து வெயிலில் காயவைத்து எண்ணெய்யாக்கித் தடவிக்கொள்வதற்காக.
தனக்கு வேறொரு இடத்திற்குச் செல்ல வேண்டிய வேலை இருக்கிறது, எனவே இப்போது முடியாது என்கிறாள் வேதாம்பாள். இது குறித்து இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்படுகிறது. குடும்பத்தில் நிலவும் வறுமை. வேதாம்பாள் தன் இயலாமையால் மகளிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுகிறாள். ராசாத்தி அழுதுகொண்டு உள்ளே சென்று விடுகிறாள்.
மகளைக் கோவத்தில் திட்டி விட்டோமே என்கிற குற்றவுணர்வு மேலிட, அது குறித்தே யோசித்தபடி நடக்கிறாள். ‘பாவம் நம்ம பொண்ணு வயத்துக்குக் கொடுன்னா கேட்டுச்சி? பறக்குற தலைய ஒடுக்கி அள்ளிக்கட்ட முடியாமதான ஒல்லித் தேங்கா பொறுக்கியாந்து கொடுன்னு கேட்டுச்சி. அதக்கூட செய்து கொடுக்காம இப்புடி வாயிக்கு வந்தபடி பேசிப்புட்டமே’ என்று நினைத்தவளின் மனதில் ஒரு வைராக்கியம் ஏற்பட்டது, இன்னைக்கு எப்பாடு பட்டாவது ராசாத்திக்கு எண்ணெய் வாங்கிக் கொடுத்திடணும் என்று.
அம்மாவும் பொண்ணுமாகப் பத்து நாள்கள் கீழக்காட்டு பொன்னுசாமி வயலில் நடவு நட்டிருந்தார்கள். நட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. ஆனால், இன்னும் அதற்கான கூலியை பொன்னுசாமி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டாள். கடைசியாகப் போய்க் கேட்டபோது, பொன்னுசாமியின் மனைவி ‘ஆத்துத் தண்ணிய நம்பி மோசம்பெயிட்டோம். மொத மொத பச்சபுள்ள மூத்தரம் உட்டமேரி வத்திச்சி பாருங்க. அதான். அதுக்குப் பெறவு வல்ல. வளவனாத்துலேருந்து மோட்டாரு போட்டு எறச்சிதான் நட்ட நடவ காப்பாத்திக்கிட்டு இருக்குறோம்.
யாவ்வூட்டு மனுசன் தெனமும் ரேடியாவ திருவித் திருவித்தான் பாக்குறாவோ. பேச்சுவார்த்த நடக்குது. கூடிய சீக்கிரமே காவேரியாத்த தொறந்து உடுவோமுன்னு சொல்றாங்களாம். ஆத்துத் தண்ணி வாறவரைக்கும் பயிர பச்ச மாறாம காப்பாத்தி வைக்கணுமில்ல? அதான் ஊட்டுல இருந்த ஒவ்வொரு பண்டமா செல்லஞ்செட்டியாரு அடகுக் கடைக்குப் போயிக்கிட்டு ருக்கு. இஞ்சினுக்கு டீசல் வாங்கி ஊத்தி கட்டுபடியாவல. பொறுத்தது தான் பொறுத்துக்கிட்டிய இன்னம் பத்து நாளு பொறுத்துக்கிடுங்க. காவேரியில தண்ணி தொறந்து வுட்டுட்டா போதும். நம்பிக்கையா தலைய அடமானம் வச்சிக்கொட கடனுவல அடச்சிருவம்’ என்று சொல்லியனுப்பினாள்.
இதைச் சொல்லியும் பத்து நாள்களுக்கும் மேலாகிவிட்டது. இனியும் பொறுத்திருக்க முடியாது. இன்று நடவு நட்ட காசை வாங்காம திரும்பக் கூடாது. ஆத்துல தண்ணி வல்லன்னா எனக்கென்ன. ஒழச்ச காச உட்டெறியணுமா இல்லயா? இஞ்சினுக்கு எண்ணெ வாங்கி ஊத்தி தண்ணி எறைக்க முடியுது. நடவு நட்ட கூலிய மட்டும் குடுக்க முடியலயா? இன்னக்கி வூட்டு வாசல்லயே ஒக்காந்துற வேண்டியதுதான் என்னும் திட்டத்தோடு பொன்னுச்சாமி வீட்டை நோக்கி நடந்தாள்.
அங்கே அவரது வீடு சாத்தப்பட்டு கிடக்கிறது. வீட்டில் எல்லோரும் கோட்டகத்திற்குச் சென்றுவிட்டதாக அறிந்தாள். நடவு நட்ட வயலிலயே நின்னு கூலிய கேப்பம். அப்பயாவுது காலையிலேருந்து பொழுதுபோயி ஒக்காருற வரைக்கும் தலய தூக்காம குமிஞ்சிகெடந்து நட்ட வலி தெரியுதான்னு பாப்பம் என எண்ணமிட்டவளாகக் கோட்டகத்தை நோக்கி நடந்தாள்.
மனதில் ஏற்பட்ட கோபம் நடையில் வேகத்தைக் கூட்டியிருந்தது. தூரத்திலிருந்து பார்த்தபோதே வயல் நன்றாகத் தெரிந்தது. வயலைப் பார்த்தவளுக்கு நெஞ்சில் இடி இறங்கியது போலிருந்தது. பொன்னுசாமி அவரது மனைவி, மகன், மகள்களுடன் காய்ந்துபோய் நின்ற பயிர் தட்டைகளை அறுத்துக் கொண்டிருந்தார். இஞ்சின் போட்டு இறைத்து வளவனாற்று நீரையும் காய்ந்துபோன வாய்க்கால் வழியாக கொண்டுவந்து சேர்க்க முடியாமல் போகவே வயல் காய்ந்து பாளம்பாளமாக வெடித்துப் போய்க் கிடந்தது. பயிர் காய்ந்து சருகிட ஆரம்பித்திருந்தது.
மாட்டுக்காவது உணவாகும் என்று அதை குடும்பத்தினரே அறுத்துக் கொண்டிருந்தார்கள். ‘எம்மவளும் நானுமா பத்து நாளு பட்ட பாடெல்லாம் இப்புடி பாழாப்பெயிட்டுதே. நகக்கண்ணு தெறிக்க ஊணுன ஒவ்வொரு மொதலும் பத்தகட்டி வெளைஞ்சி மூட்ட மூட்டயா குவியணுமுன்னு நெனச்சமே. இப்புடி வெளையாமயே அறுவடையாவுதே என்று வயிற்றில் அடித்துக்கொண்டாள். நமக்கே இப்புடி இருக்கே, அவ்வொளுக்கு எப்புடி இருக்கும்? பயிரு கருகுற மேரியில்ல மனங்கருகி நிப்பாவோ. கடவுளே!’ என்றவள் வந்த சுவடு தெரியாமல் திரும்பி நடந்தாள்.
கோட்டகத்தில் துளி ஈரமில்லை. வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. வாய்வித்தை காட்டிய ஆட்சியாளர்களால் காவிரியின் பெயரைக்கூட உச்சரிக்க முடியவில்லை. ஆனால் அந்த ஏழைத்தாய் வேதாம்பாளின் மனதில் சுரந்த ஈரம் அவளை மௌனமாக்கியிருந்தது. பொன்னுசாமி குடும்பத்தை நினைத்துப் பரிதவிக்க வைத்தது. இந்த ஈரம் போதும். இதைக்கொண்டே எல்லாராலும் கைவிடப்பட்ட இந்த எளிய மக்கள் எத்தகைய பாலையையும் கடந்துவிடுவார்கள்.
(நதி அசையும்)
- thamizhselvi1971@gmail.com