

‘பூவே உனக்காக’ படத்தில் இரவு எட்டு மணி ஆனதும் வெள்ளையங்கிரி பாடத் தொடங்கி விடுவதைப் போல டிசம்பர் மாதம் வந்துவிட்டால் போதும்; நம் இலக்கியவாதிகள் பாடத் தொடங்கிவிடுவார்கள். எப்போதும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் புத்தகக்காட்சி இம்முறை டிசம்பர் இறுதியில் வேறு வருகிறது.
சொல்லவா வேண்டும்? இலக்கிய வம்புகளால் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது சமூக ஊடகம். சென்னையில் இனி மழை பெய்தாலும், வெள்ளம் வந்தாலும், புயலே அடித்தாலும் வெள்ளையங்கிரிகளின் பாட்டை மட்டும் நிறுத்த முடியாது.
இதற்குக் கட்டியங்கூறுவதுபோல் பெண் எழுத்தாளர் ஒருவரது படைப்புகளை ஆண் எழுத்தாளர் ஒருவர், ‘கசப்பின் கைப்பிடிக்குள் தளும்பும் நீரா இவ்வாழ்வு?’ என்கிற ரீதியில் ஃபேஸ்புக்கில் புகழ்ந்து தள்ள அதற்கு எதிர்வினையாக வேறொரு எழுத்தாளர், ‘மொழியை வச்சுட்டு ஜோல்டிங் காட்டக் கூடாது, பம்மாத்து பண்ணக் கூடாது’ என எழுதினார்.
வேறொரு மூத்த எழுத்தாளரோ தன் சிஷ்யரது நாவலை வானளாவப் புகழ்ந்து அந்த நூலோடு ஒப்பிட தஸ்தயேவ்ஸ்கி எல்லாம் எம்மாத்திரம் என்கிற தொனியில் எழுதப் பலரும் அந்த விமர்சனத்தைத் துவைத்து எடுத்தனர். ஃபேஸ்புக்கில் திரும்பும் பக்கமெல்லாம் சிவப்பு மையால் எழுதியபடி இருக்கிறார்கள் இலக்கியவாதிகள்.