

மெய்யியல் (தத்துவம்), தர்க்கம் சார்ந்த வாசிப்பில் ஈடுபாடு கொண்ட வாசகர்களுக்கும், பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்தான வாசிப்பில் இயங்கும் தற்கால வாசகர்களுக்குமான அறிமுக நூலாகப் பேராசிரியர் இரா.முரளியின் ‘மறந்த காவியம் நீலகேசி’ என்ற இந்த நூல் அமைந்துள்ளது.
தியடோர் அதோர்னோ, தேவிபிரசாத் சட்டோபாத்யாய, ஹேபர்மாஸ் போன்ற மெய்யியலாளர்களின் அறிமுகம், அவர்களின் மெய்யியல் சிந்தனைகள், தர்க்கங்கள் குறித்து முரளி மூன்று நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல்களிலிருந்து சற்று மாறுபட்ட தன்மையில் அமைந்திருக்கிறது, மறந்த காவியம் நீலகேசி.
தமிழில் மெய்யியல், சமயங்களுக்கு இடையே நிகழ்ந்த மெய்யியல் வாதங்களை இலக்கிய வடிவில் அமைந்த படைப்பாக நீலகேசியை அறிமுகப்படுத்தியது, அவரின் ஏனைய நூல்களில் இருந்து மாறுபட்டமைக்கான காரணம். இந்நூல் மூன்று விதமான தன்மைகளை வாசிப்பின் வழி நம்மை நிறைவு செய்கின்றது.
ஒன்று: சங்க இலக்கியங்கள், திருக்குறள் உள்ளிட்ட அறநூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களின் சுவை, திறன் போன்றவை கழகங்களின் முன்னெடுப்பால் விதந்து வந்த சூழலில், அதே காலத்தில் தோன்றி ‘நீலகேசி’ பெரிதும் பேசப்படாமைக்கான காரணத்தைக் கூறுவதாக அமைந்திருப்பது. இரண்டு: சமயங்களுக்கு இடையே நிகழ்ந்த மெய்யியல் வாதங்கள், வாதங்களுக்குரிய நெறிமுறைகளை அறிந்துகொள்வது; மூன்றாவது: பழம்பனுவல்களை அணுகும் விதம்.
காரணம், இந்நூல் நீலகேசியில் உள்ள மெய்யியல், சமய மெய்யியல் வாதங்களை விளக்கும் நோக்கங்களோடு மட்டுமல்லாமல், அந்தப் பனுவலின் பின்புலம், காலம், உள்ளடக்கம், உரை வரலாறு, பதிப்பு வரலாறு என அணுகியிருப்பது வாசிப்பில் நிறைவையும் அணுகுமுறையையும் கற்பிக்கிறது. மேலும், ‘நீலி’ தமிழ் இலக்கியங்களில் எங்கெங்கு இடம்பெறுகின்றாள் என்பதை நான்காவது இயலின் தொடக்கத்தில் விவரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீலகேசிக்கு இலக்கியப் பரப்பிலும், மெய்யியல் பரப்பிலும் உள்ள இன்றியமையாமையை உணர முடிகிறது.
பல முன்னோடிகளின் சிந்தனைகளைத் தொடர்புபடுத்தி இருப்பது; தகுந்த இடங்களில் நீலகேசியின் மீதான தமது பார்வையை முன்வைத்திருப்பதில் இருந்து, தத்துவியல் சார்ந்த நூலாசிரியரின் ஆழ்ந்த புலமையைத் தெளிவாக அறிகிறோம்.
வாதங்கள் பற்றிய மெய்யியல் துறையின் கலைச் சொற்களை நூலில் நேரடியாகக் கையாண்டிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறாக, மெய்யியல் களஞ்சியமாக அடையாளப்படும் பேரா.இரா.முரளியின் ‘மறைந்த காவியம் நீலகேசி’ என்ற இந்த உரைநடை நூல் காத்திரமான வாசிப்பிற்குரியது.
மறந்த காவியம் நீலகேசி
(உரைநடை)
பேரா.இரா.முரளி
நாதன் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 98840 60274
- தொடர்புக்கு: jeeva.r.v.7@gmail.com