

சட்டம், சாதி, தீண்டாமை போன்ற வாதங்களே அம்பேத்கர் பற்றிய சிந்தனையின்போது மனதுக்கு வரும். ஆனால், சுற்றுச்சூழல் சார்ந்து அவரை அணுகி, அதற்கான தரவுகளை கோ. லீலா இந்நூலில் முன்வைத்திருக்கிறார். அவரை ‘தண்ணீர் நாயகன்’ என்ற அடைமொழிக்குக் கொண்டுசென்று, அதை நியாயப்படுத்தியிருக்கும் விஷயங்கள் இந்நூலை முக்கியத்துவம் கொண்டதாக ஆக்குகிறது. இளம் வயதில் தண்ணீர்த் தீண்டாமை சார்ந்து புறக்கணிக்கப்பட்டவர் அவர்.
ஆனால், இந்தியாவின் முதல் நதி பள்ளத்தாக்குத் திட்டம் அம்பேத்கரின் கைகளில் கிடைத்ததில் ஒரு நகைமுரண் கூறு உள்ளதையும் விளக்குகிறார். அதிக அளவு தண்ணீர் தீமை என்று நினைப்பது தவறு என்பதை ஒடிஷாவின் வெள்ளம், இயற்கைச் சூழல்களை வைத்து நிரூபித்திருக்கிறார்.
இன்றைய காலநிலை மாற்றத்தில் அதிக மழை, வெள்ளம் ஆகியவற்றை மனத்தில் கொண்டு இதை அணுகலாம். நதிநீர்ப் பங்கீடு பிரச்சினையை முன்னிட்டு சித்தார்த்தன், புத்தர் ஆன கதை போன்ற புதிய தகவல்களும் நிறைய உள்ளன. மூன்றாம் உலகப் போர் தண்ணீர்ப் பிரச்சினையை முன்வைத்து அலசப்படும் காலக்கட்டத்தில் தண்ணீர் என்பது சமாதானம் என்ற செய்தியை இந்தப் புத்தகம் தருகிறது. - சுப்ரபாரதிமணியன்
அம்பேத்கரும் சூழலியலும்
கோ.லீலா
படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 73388 97788
பெண்கள் கடந்த பாதை: சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்புகூட உயர் சாதி இந்துப் பெண்களுக்கு இச்சமூகம் எத்தகைய அநீதிகள், கொடுமைகளை இழைத்துள்ளது என்பதை இந்நூல் நினைவூட்டுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் பெண்கள் வாழ்க்கையில் வியப்பூட்டும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது ஒரு பக்கம் ஆறுதலை அளித்தாலும், மறுபக்கம் பல விஷயங்கள் மாறாமலிருப்பதும், பழமை மீண்டும் புகுத்தப்படுவதும், அதற்குப் பெண்களையே தலைமை ஏற்கச் செய்வதும் நடைபெற்று வருகிறது.
மொழிபெயர்ப்பாளரின் அறிமுகம், நூலுக்கு வலுச்சேர்க்கிறது. அடுக்கடுக்காக இழப்புகளையும் துயரங்களையும் கொண்ட பண்டித ரமாபாயின் இளமைப் பருவம், அவற்றை அவர் எதிர்கொண்டு பெண்களின் விடுதலைக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்தது பற்றி அறிமுகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த நூலில் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு உயர் சாதி இந்துப் பெண்ணின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் என்னென்ன நடந்தன, அவர்கள் அடையும் துன்பங்கள், வேதனை முதலியவற்றையும் அதற்கான அடிப்படைக் காரணத்தையும் பண்டித ரமாபாய் விரிவாகக் கூறியுள்ளார்.
இந்தியப் பெண்கள் பழைய காலத்தில் எப்படி இருந்தனர் என்பதை இந்நூல் கண்முன் நிறுத்துகிறது. இந்த நூல் மூலம் பண்டித ரமாபாய், நம் கண்களைத் திறந்து காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கவும், அந்த அனுபவத்துடன் நிகழ்காலத்தை மதிப்பிடவும், எதிர்காலத்தை நோக்கிச் செயல்படவும் அழைக்கிறார். - பேராசிரியர் ஜெயகரன்
உயர் ஜாதி இந்துப் பெண்
பண்டித ரமாபாய் (தமிழில்: ஜா.கிறிஸ்டி பெமிலா)
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 96003 98660
பெண் எழுத்தில் புதியவர்களுக்கான அழைப்பு! - ஐடி பணியிடச் சூழலில், பிரீத்தி என்கிற பெண் பாத்திரம் சந்திக்கும் பாலியல் சீண்டலை முன்வைத்து ‘இசைவு’ என்ற குறுநாவலை பிரியா ஜெயகாந்த் தந்துள்ளார். தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுடைய வாழ்க்கை முறை குறித்து ஆடம்பரம், கேளிக்கை மிகுந்தது, பணத்தைப் பொருட்படுத்தாமை என்றெல்லாம் பொதுப் புத்தியில் பல எண்ணங்கள் இருக்கின்றன.
ஆனால், அத்துறையின் அறியப்படாத பக்கங்களைப் பேசும் நூல்கள் தமிழில் குறைவு. இந்தக் குறுநாவலில் ஐடி பணியிடத்தில் ஒரு திருமணமான பெண் அவளின் குழுத் தலைவரால் மறைமுகப் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறார்.
அதேநேரம், குடும்பத்தில் நிலவும் குழந்தைகள் வளர்ப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் அவருக்கு அந்த வேலை மிக அவசியமாகிறது. சவாலான இந்தச் சூழலை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை நாவல் பேசுகிறது.
பெரும்பாலும் பொதுச் சமூகம் அறிந்திராத, நடுத்தரக் குடும்பத்தில் வாழும் பெண்களின் வாழ்க்கையின் அகப்பக்கங்களைச் சிக்கல் அற்ற மொழியில் நாவல் பேசுகிறது. மொழிப் புலமை, படிமங்களை அடுக்குதல் போன்ற வாசிப்புக் கிளர்ச்சியற்ற ஒரு கதைக்குக் காது கொடுப்பது போலான ஒரு மென் உணர்வு வாசிப்பின் வழி வாசகர்களுக்கு உருவாகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவரின் ஒரு நாள் வேலை நேர அட்டவணை, கூடவே பணிபுரியும் ஊழியர்களின் நட்பு, உலகமயமாக்கல் தரும் நெருக்கடிகளுக்குள் இருந்தும் கணவன், மனைவிக்குள் தேவையான புரிதல் அனைத்தையும் வாசகர்கள் அறிந்துகொள்ள முடிகிறது.
சில வழமையான வாக்கியங்களைத் தவிர்த்திருக்கலாம். ‘இசைவு’ குறுநாவல், புதிதாக எழுத வரும் ஒருவருக்கு, குறிப்பாகப் பெண்கள் எழுதுவதற்கு முன் இருக்கும் மனத் தயக்கங்களை உடைத்து எழுதுவதற்கான நம்பிக்கையைத் தரும். - ஸ்டாலின் சரவணன்
இசைவு
பிரியா ஜெயகாந்த்
முகவரி வெளியீடு
விலை: ரூ. 100
தொடர்புக்கு: 9566110745