மீளும் இண்டியா கூட்டணி | சிற்றிதழ் அறிமுகம்

மீளும் இண்டியா கூட்டணி | சிற்றிதழ் அறிமுகம்
Updated on
3 min read

மக்களவைத் தேர்தல் - 2024 க்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருந்தாலும் அக்கட்சி தனிப் பெரும்பான்மை பெறவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு வலுவான எதிர்க்கட்சியும் அமைந்துள்ளது, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கிய முடிவுகளைத் தந்த 2024 மக்களவைத் தேர்தலின் தனித்தன்மையையும் முக்கியத்துவத்தையும் விளக்கும் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய வலுவான இண்டியா கூட்டணியின் உருவாக்கத்தில் தான் ஆற்றிய பங்களிப்பை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விவரித்திருப்பதன் வாயிலாகத் தமிழ்நாடும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் இண்டியா கூட்டணிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்த விதத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

குறிப்பாக பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி என்னும் யோசனையை நிராகரித்ததையும் காங்கிரஸ் உடன் இணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதில் உறுதியுடன் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் கட்டுரை புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் பட்டியலிடுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராகப் பதவியேற்றவர்களான ஜவாஹர்லால் நேருவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்கியுள்ளார். ராகுல் காந்தி, மோடிக்கு மாற்றான தலைவராக எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தப்படத் தகுதியானவர் என்பதை விளக்கும் கட்டுரையைப் பேராசிரியர் ராஜன் குறை எழுதியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், எழுத்தாளர் இரா.முருகவேள், மு.இராமனாதன் போன்ற தமிழ்நாட்டு ஆளுமைகள், ஜி.என்.தேவி, ராம் புன்யானி, சுந்தர் சருக்கை, யோகேந்திர யாதவ், கோர்கோ சாட்டர்ஜி போன்ற தேசிய ஆளுமைகள், முகமது ஜுபைர் உள்ளிட்ட ஊடகப் பிரபலங்கள் எனப் பலரது கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன - கோபால்

தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி
தொகுப்பாசிரியர்: சு.அருண்பிரசாத்
ஆழி பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044 4287 6858, 9715089690

வேளாண்மைச் சிறப்பிதழ்: ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் சிலர் ‘வையை’ என்கிற பெயரில் ஒரு குழுவாக இணைந்து, பல சமூகப் பணிகளைச் செய்துவருகின்றனர். தங்கள் வட்டாரத்துக்கே உரிய மரபுப் பயிர் விதைகளை மீட்டெடுப்பதும் ஆர்வம் உள்ளோருக்கு விதைத் திருவிழாக்கள் மூலம் அந்த விதைகளை வழங்குவதும் இயற்கைவழி வேளாண்மை குறித்துப் பரப்புரை செய்வதும் வழிகாட்டுவதும் இவர்களின் முதன்மையான பணிகள். மக்களோடு பகிர்ந்துகொள்ள இவர்களுக்குப் பல செய்திகள் இருக்கக்கூடும். அதன் வெளிப்பாடாக ‘வையை ஆண்டு மலர் 2024’ அமைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டக் கண்மாய்களில் தெள்ளத்தெளிவாகத் தெரியும் பழந்தமிழரின் நீரியல் தொழில்நுட்பம், தமிழர் உணவில் அறுசுவையின் தேவை, கோயில் சார்ந்த காடுகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், கரிசல் நில வாழ்வியல் உள்படப் பல பொருள்களில் அமைந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது. மூத்த அரசியலாளர் சி.மகேந்திரன், பாமயன், மருத்துவர் கு.சிவராமன், அரச்சலூர் செல்வம் முதலான வல்லுநர்களிலிருந்து புதிய தலைமுறை விவசாயி வரைக்கும் பலர் பங்களிப்பு செய்துள்ளனர். ‘வையை’ அமைப்பை ஒருங்கிணைக்கும் ஆ.கருணாகர சேதுபதி இந்நூலைத் தொகுத்துள்ளார்.

வையை
ஆண்டு மலர் 2024
பதிப்பாசிரியர்: அ.சரவணகுமார்
பென்னிகுயிக் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 82205 50688

திண்ணை | இந்து தமிழ் திசை நூல் இந்தியில்! - சோம. வீரப்பன் எழுதி, இந்து தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘குறள் இனிது’ நூல், ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘The Art of jogging with your Boss’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. தமிழில் ஏழு பதிப்புகளும் ஆங்கிலத்தில் இரண்டு பதிப்புகளும் வந்துள்ள நிலையில், இந்நூல் பஞ்சாபி மொழியில் சண்டிகரில் உள்ள யுனிஸ்டார் பப்ளிகேஷன் நிறுவனத்தினரால் ‘எஸ் பாஸ்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டு நன்கு விற்பனையாகிவருகிறது.

இந்நூல் இப்போது இந்தியில் வந்துள்ளது. ‘எஸ் பாஸ்’ எனும் தலைப்பிலேயே இந்நூலை டெல்லியில் உள்ள பிரபாத் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது. இதற்கான முன்னுரையைத் திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் இயக்குநர் பவன் குமார் சிங் எழுதியுள்ளார். ‘உலகின் மூத்த மேலாண்மை குரு வள்ளுவரே’ எனப் பிற மொழி பேசுவோருக்கும் எடுத்துரைக்கும் முயற்சியே இது என்கிறார் இதன் ஆசிரியர் சோம. வீரப்பன். இந்நூலின் விலை ரூ.350. அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களிலும் கிடைக்கும்.

வம்சி பதிப்பக நூல் வெளியீடு: திருவண்ணாமலை பத்தாயத்தில் வம்சி பதிப்பக நூல் வெளியீட்டு விழா இன்று (30.11.24) மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ளது. லிவின் எழுதிய ‘உதிர்வு’ நாவல், முகமதி அப்பாஸின் ‘பசி, காதல், பித்து’ மொழிபெயர்ப்புக் கட்டுரை, குலசேகரின் ‘வித்துகளின் கனா’ கட்டுரை ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்படவுள்ளன. மொழிபெயர்ப்பாளர்கள் கே.வி.ஜெய,, கே.வி.ஷைலஜா, எழுத்தாளர்கள் எஸ்.கே.பி.கருணா, நரன், லதா, இயக்குநர் சீனு ராமசாமி, மா.தொல்காப்பியன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தொடர்புக்கு: 9790157981

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in