வெக்கை வாசம் வீசும் கிராமத்துக் கதைகள் |  நூல் வெளி

வெக்கை வாசம் வீசும் கிராமத்துக் கதைகள் |  நூல் வெளி
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டப் புத்தகத் திருவிழாவையொட்டி, மாவட்ட எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றினை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இப்போட்டிக்கு வந்த 81 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் ‘மரமும் மரபும்.’

பேராசிரியர்கள் செ.கிளிராஜ், க.இரவி, ர.ஸ்டீபன் பொன்னையா ஆகியோர் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் முன்னுரையில் சொல்வதுபோல், ‘இவை நம் மண்ணின் கதைகள்’ எனலாம். தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே எளிய மக்களைப் பற்றியும், அவர்களது பலதரப்பட்ட வாழ்க்கைப்பாடுகளையும் இயல்பாகவும், மக்களின் மொழியிலேயும் தன்னளவில் பதிவுசெய்துள்ளன.

சி.அன்னக்கொடி, கா.சி.தமிழ்க்குமரன், விஜிலா தேரிராஜன், ஜி.காசிராஜன், கண்மணி ராசா, மதிகண்ணன், மதுமிதா, வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன், ராஜேஸ்வரி கோதண்டம், கனகா பாலன் என்று முன்னரே எழுத்துலகில் அறியப்பட்ட சிலரைத் தவிர, பெரும்பாலான எழுத்தாளர்கள் புதியவர்களாக இருப்பது சிறுகதைப் போட்டியை நடத்தியதற்கான நல்விளைச்சல் எனலாம்.

இப்போட்டியில் முதல் பரிசினைப் பெற்ற சி.அன்னக்கொடி எழுதிய ‘நல்லம்மாளும் வெட்டியானும்’ கதை, வெட்டியான் பரமனின் குரலில் வட்டார மொழியில் நல்லம்மாவின் வாழ்க்கையை மிக வாஞ்சையோடு விவரிக்கிறது. தான் தொழில் செய்யும் சுடுகாட்டைப் புனித இடமாகக் கருதும் பரமன், சுடுகாட்டைச் சுற்றி மரங்களை வளர்க்கிறார். ‘பச்சப்புள்ளயும் பச்சைச்செடியும் ஒண்ணு’ என்று சொல்லும் ஈர மனமுடைய பரமன், நல்லம்மா எனும் ஒரு பெண்ணைப் பற்றிக் கதை சொல்கிறார்.

பிச்சை கேட்டு வருபவருக்கு குதிரைவாலிச் சோறும் குச்சிக் கருவாட்டுக் குழம்பும் கொடுத்துப் பசியாற்றும் பாசக்கார மனுஷி நல்லம்மா. அந்த நல்லம்மா இறந்த அன்று சுடுகாட்டில் பத்து தென்னங்கன்றுகளை நட்டு வைக்கிறார் பரமன். அந்தப் பத்து தென்னங்கன்றுகளும் இப்போது குலைகுலையாய்க் காய்த்துத் தொங்குகின்றன. ‘அது நல்லம்மா மரமில்லையா, காச்சுத் தொங்கத்தானே செய்யும்’ என்று பரமன் கதையை முடிக்கையில் நம் மனம் கனத்துப் போகிறது.

பட்டாசு விபத்தில் கணவனைப் பறிகொடுத்த அழகம்மா, தன் மகள் பேச்சியைத் தினக்கூலியாக வேலை செய்யும் மாரியப்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார். குடி வலையில் விழும் மாரியப்பன், போதைக்காக எதையோ கலந்து குடிக்கவே, அவனது உயிரும் போகிறது. இளவயதிலேயே துணையை இழந்த எளிய குடும்பத்துப் பெண்கள் படும் சொல்லித் தீராத துயரத்தைப் பேசுகிறது, இரண்டாம் பரிசு பெற்ற மதிகண்ணனின் ‘பேச்சி க/பெயர் மாரியப்பன் (வயது 44)’ கதை.

‘காசு இருக்கிறவன் இல்லாதவன் எல்லோரையும் ஒரே பூமியில படைச்சான் பாரு அவனச் சாத்தாணும்’ எனும் இருளப்பனின் அங்கலாய்ப்போடு தொடங்கும் ‘அசல்’ (கண்மணி ராசா) கதையும், நாடு விடுதலை அடைந்து 77 ஆண்டுகளைக் கடந்தோடிவிட்ட நிலையிலும் இன்னும் தொடரும் சாதியத்தின் பார்வையிலான பிற்போக்குத்தனத்தைச் சாடும் ‘சாதிய மூட்டை’ (விஜிலா தேரிராஜன்) கதையும், ஒண்ணுமில்லாத வெறும் பயலுக்கு வாக்கப்பட்டு வந்த பூச்சம்மாள், தரிசு மண்டிப்போய்க் காடாய் கிடந்த ரெண்டு குருக்கம் காட்டை வாங்கி விவசாயம் செய்வதும், விவசாயம் பொய்த்துப்போகவே, மீண்டும் நூறு நாள் வேலைக்கு கார்டு வாங்கிட நினைக்கும் ‘மெப்பனை’ (கா.சி.தமிழ்க்குமரன்) கதையும், சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத செவலை, லாரி மோதி ஒரு கையை இழந்த பிறகும் கூட்டிப் பெருக்கும் வேலையைச் செய்வேன் என்று நம்பிக்கை மிளிரச் சொல்லும் ‘செவலை’ (கனகா பாலன்) கதையும் கரிசல் காட்டின் அசலான மனிதர்களைப் பற்றிய கதைகளாக உள்ளன.

கரிசல் மண்ணில் வியர்வையோடும் வெயிலோடும் சேர்ந்தே அன்றாடத்தைக் கடத்தும் கிராமத்துச் சம்சாரிகளின் வெக்கை நிறைந்த வாழ்வின் வாசத்தை எல்லாக் கதைகளுமே நிறைவாகச் சொல்லிச் செல்கின்றன.

மரமும் மரபும் - சிறுகதைகள்
விருதுநகர் மாவட்ட நிர்வாக வெளியீடு
விலை: ரூ.450
தொடர்புக்கு: 94430 12170

- தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in