

மக்களுக்குத் தரப்பட்ட எல்லா அதிகாரங்களையும் அரசியல் கட்சிகள் மறைமுகமாக எடுத்துக்கொண்டு விட்டன. இதில் எங்கேயிருக்கிறது மக்களாட்சி என்னும் கேள்வியுடன் ஒரு நூல் வெளிவந்துள்ளது. இந்த உரையாடலை ‘கட்சி அரசியலிலிருந்து மக்கள் அரசியல்’ என்னும் நூலின் மூலம் வசந்தத்தின் இடிமுழக்கத்தைப் போலப் பேராசிரியர் க.பழனித்துரை தொடங்கி வைத்திருக்கிறார்.
ஆட்சியின் ஆளுகையை மேல்மட்டத்திற்குச் சென்று பார்த்தால், அது யாருக்காகக் கட்டப்பட்ட வலிமையான கோட்டை என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சுரண்டல் கோட்டையால் எதையும் செய்ய முடிகிறது. மனித உழைப்பையும் கனிம வளங்களையும் முற்றாகக் கொள்ளை நடத்தும் கார்ப்பரேட்களின் கையில் ஒப்படைக்க முடிகிறது. நாடு இந்திய மக்களுக்குச் சொந்தமில்லை என்று கூற முடிகிறது.
இந்தக் கோட்டையைப் பாதுகாக்க யாரெல்லாம் நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்பதில் முடிச்சுகள் அனைத்தும் அவிழ்ந்துவிடுகின்றன. கோடீஸ்வரர்களும் குற்றப் பின்னணியைக் கொண்டவர்களும் 2019ஆம் ஆண்டில் 42 சதவீதம் பேர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளர். இந்த உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்யவில்லை. அரசியல் கட்சிகள்தான் தேர்வுசெய்தன. இவர்களுக்கு வாக்களிக்கும் நிர்ப்பந்தம் மட்டும் மக்களுக்குத் தரப்படுகிறது.
நூலின் சிறப்பு, இந்திய ஜனநாயகத்தைப் பற்றாக்குறை ஜனநாயகம், இது மக்கள் பங்கேற்பு ஜனநாயகமாக மாற்றப்பட வேண்டும் என்பதில் மையப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் இந்தக் குறைபாடு அரசியல் கட்சிகளின் வழியாக ஒரு பெரும் தீமையாக வளர்ந்துள்ளன. சட்டப்படியிலான ஆட்சி என்பதற்குப் பதிலாக ஆளும் கட்சியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த ஆட்சியாகிவிட்டது.
அரசியல் கட்சிகளில் எல்லாமே தலைவர்கள்தான். இதில் வாரிசு அரசியலும் வந்துவிடுகிறது. அறிவு ஜீவிகளுக்கு இங்கு வேலை இல்லை. கட்சியின் உயிர்ப்பு மிக்க தொண்டர்கள் கூலிக்காரர்களாக மாற்றப்பட்டு, அவர்களுக்குத் தகுதிக்கேற்பக் கூலி கொடுக்கப்படுகிறது.
இன்றைய தேர்தல் முறையால் மக்களாட்சி என்பது கிணற்றுக்குள் விழுந்த யானையைப் போல் ஆகிவிட்டது என்கிறார் நூலாசிரியர். தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடிக்க எந்த மோசடிகளையும் உருவாக்கிக் கொள்வதைச் சட்டமாகவும் தர்மமாகவும் அரசியல் கட்சிகள் மாற்றிவிட்டனர் என்பதை வேதனையோடு நூலில் பதிவுசெய்துள்ளார்.
இன்று சமத்துவத்திற்கும் உரிமைக்கும் போராடும் சமூகத்தின் பகுதி அதிகரித்துவருகிறது. இதன் விளைவு, கட்சி அரசியலைத் தாண்டிய மக்கள் அரசியல் என்கிற கண்ணோட்டம் பொதுவெளியில் முளைக்கத் தொடங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார். அரசாங்கத்தின் மீது இன்று யாருக்கும் நம்பிக்கை இல்லை.
இந்தியாவில் 80 சதவீத மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்பை அரசிடமிருந்து இலவசமாகப் பெறுகின்றனர். இது ஏதோ இந்திய மக்கள் பிச்சை எடுப்பதைப் போலவும் ஆட்சியாளர்கள் வள்ளல் பெருமக்களைப் போலவுமான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.
இதுகுறித்த ஆழ்மனப் புரிதலையும் நூல் உருவாக்குகிறது. அரசியலுக்கு ஒரு கொள்கை வேண்டும். அது லாபம் மட்டுமே கொள்கையாக இருக்கக் கூடாது. சுயசார்ப்பு கொண்ட குடிமக்களாக மக்களை மேம்படுத்தும் கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு மக்கள் அரசியலாக வேண்டும். இதை மார்க்ஸ், காந்தி ஆகிய இரண்டு தலைவர்களின் கருதுகோள்களின் வழியாகச் சென்றடைய வேண்டும் என்று நூல் வழிகாட்டுகின்றது.
கட்சி அரசியலிலிருந்து மக்கள் அரசியல்
க.பழனித்துரை
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 94437 68004
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்; தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com