கரிசல் பூமியின் நீர் போராட்டம்

கரிசல் பூமியின் நீர் போராட்டம்
Updated on
3 min read

நிறைந்த குளத்தில் ததும்பி அலைகிற தண்ணீர், வீசும் காற்றில் கரை மீறிச் சாரலெனத் தெறிக்கும்போது அத்தனை சுகம். ஆறு, குளம், கால்வாய், அருவி ஆகியவற்றைக் கொண்ட ஊர்களில் வசிப்பவர்களின் ஆனந்தம் அது. ஆனால், உள்ளூர்வாசிகளுக்கு எப்போதும் தெரிவதில்லை அதன்மகிமை. கவிஞர் வித்யாஷங்கர் சொன்னதைப் போல, ‘ஆற்றுக் குளியல்காரனுக்கு நகரம் தந்தது பக்கெட் வாட்டர்’ என்கிற அனுபவம் உணர்த்தும்போது, அவர்களுக்கும் புரிய வரலாம். பெ.மகேந்திரனின் ‘நிறைகுளம்’ நாவலில் வருகிற நிறையாத குளத்துவாசிகளுக்கு அப்படியல்ல. காலங்காலமாகத் தொடரும் அவர்களின் தண்ணீர் ஏக்கமும் கண்ணீரைப் போலவே வற்றாமல் இருக்கிறது.

கரிசல் பூமியில், மேற்கு மலைத் தொடரில் ஓடும் அழகர் ஆற்றை மறித்து அணை கட்ட, ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட திட்டம் இப்போதுவரை கிடப்பில் இருப்பதையும், அரசியலுக்கு மட்டுமே பயன்படும் அந்த அணைத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடர்ந்து ஓடும் அவ்வூரையும் ஊர்மக்களையும் ரத்தமும் சதையுமாகப் பேசுகிறது, இந்நாவல். நிறைகுளம் என்பது குறியீடு என்றாலும் நாவல் காட்டுகிற சம்சாரிகளிடமும் வெள்ளந்தி மனிதர்களிடமும் எந்தக் குறியீடும் இல்லை. அவரகள், வறட்சியின் தோழமையோடு வாழ்க்கையை அதன்போக்கில் வாழும் இயல்பான மனிதர்களே.

மானாவாரி பூமியில் விவசாயிகளின் பாடுகள், பூமியின் ஆழம் வரை தோண்டினாலும் தலையை மட்டும் காட்டி நின்று அதற்கு மேல் எட்டிப் பார்க்காத தண்ணீர், வண்டி கட்டிக்கொண்டு பிள்ளையாரைத் திருடி வரும் பக்தி, தனுஷ்கோடி புயலில் குடும்பத்தைப் பறிகொடுத்த ஆதிமூலத்தின் வாழ்க்கையும் தேடலும், ஊர் பேர் தெரியாமல் பசியோடு வந்து நிற்கிற வில்லாயுதத்துக்குக் குறிப்பறிந்து உதவும் சாத்தூரப்பன், அணைத் திட்ட மனுக்களைத் தூக்கிக்கொண்டு அலையும் ராமகிருஷ்ணன், பக்கத்து நகரம் செல்லும் பைப் லைன் உடைசலை அந்த ஊருக்காகக் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஈரமனம் கொண்ட இன்ஜினீயர், வானம் கர்ப்பம் தரிக்கிற காலம் சொல்லும் அப்பணசாமி என நாவல் முழுக்கக் கரிசல் மக்களின் வாசனை, கருணையோடு விரவிக்கிடக்கிறது.

இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு தனது சகோதரியை எங்கோ ஓர் ஊரில் ஆதிமுலம் சந்திக்கிற இடத்தில், நமக்கும் பொங்கி வருகிற கண்ணீரை எந்தத் துணியைக் கொண்டும் தடுத்துவிட முடியாது. அதுபோன்றதொரு உணர்ச்சியை எழுத்தில் கொண்டுவருவதும் எளிதானதல்ல. மழை பெய்வதற்கு கிருஷ்ணர் ஊதும் சங்கு, தர்மச்சோறு வாளி, பிள்ளையார் கிடங்கு, ஊர்த் தலைவர் கோபால் நாயக்கரின் வீட்டுக்குள் வளரும் திருடன், அவனுக்கான காதல், சுளுக்கு மனிதர் என நாவலுக்குள் வருகிற கிளைக் கதைகளும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகின்றன. நாவலுக்குள், ஆசிரியரே வரைந்திருக்கிற கோட்டோவியங்களும் கதைக்குள் இழுத்துச்செல்லும் உணர்வை இயல்பாகத் தருகின்றன. கரிசலின் ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த அனுபவத்தைத் தருவது இந்நாவலின் சிறப்பு. - ஏக்நாத்

நிறைகுளம்
பெ.மகேந்திரன்
மின்னங்காடி பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 72992 41264

சிந்துவெளிக்கு எளிய அறிமுகம்: சிந்துவெளி கண்டறியப்பட்டதன் நூற்றாண்டு இது. சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்துத் தொடர்ந்து வலியுறுத்திவரும் சிந்துவெளி ஆய்வாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் அளித்திருக்கும் நேர்காணல் புத்தகமாக்கப்பட்டுள்ளது. சிந்துவெளிக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு குறித்து நீண்ட காலமாகவே எழுதப்பட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் அது குறித்துப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

கீழடி அகழாய்வுக்குப் பிறகு இந்தத் தொடர்பு சார்ந்த ஆர்வம் பொதுவெளியில் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த நூலில் சிந்துவெளி குறித்து ஆய்வாளர் ஜான் மார்ஷல் அறிவித்தது தொடங்கிப் பல்வேறு அடிப்படை அம்சங்கள் எளிய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான ஊர்ப் பெயர்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை இந்த நூலிலும் பாலகிருஷ்ணன் எடுத்துரைத்துள்ளார். சிந்துவெளி குறித்த எதிர்கால ஆய்வின் தேவைகள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார். தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் க.சுபாஷிணி குழுவினர் இந்த நேர்காணலைச் சிறப்பாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். - அன்பு

சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்
ஆய்வாளர்
ஆர்.பாலகிருஷ்ணன் நேர்காணல்
தமிழ் மரபு அறக்கட்டளை
விலை: ரூ.120
தொடர்புக்கு:
mythforg@gmail.com

எளிய மனிதர்களின் எத்தனிப்புகள் | நூல் நயம்: கீழத்தஞ்சைக் கிராமங்களைத் தனது களங்களாகக் கொண்டுள்ள எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு, ‘அழகிகள் மண்டபம்’. அடிவயிற்று வலிக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்லும் குணசீலன், இன்னொரு மிகப் பெரிய நோய் குறித்து அறிந்துகொள்கிறான். நாற்பதுகளில் உள்ள சுந்தரவதனப்பெருமாளின் முன்னாள் காதலி உடனான சந்திப்பு அவனை எதிர்பாராத இடத்துக்கு இட்டுச் செல்கிறது. அதிர்ந்து பேசாத கோமதிக்கு அடுத்த வீட்டுக் கோழி தர்மசங்கடத்தைத் தந்துவிட்டுச் சாகிறது. தொழில்வாய்ப்புகளை இழந்து விட்ட ஒரு கிராமத்து பபூன் தொலைக்காட்சியில் தோன்றப் போகிறார். இத்தகைய எளிய மனிதர்களின் எத்தனிப்புகளே இக்கதைகளில் பதிவாகியுள்ளன. - ஆனந்தன் செல்லையா

அழகிகள் மண்டபம்
சிவகுமார் முத்தய்யா
யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.290
தொடர்புக்கு: 90424 61472

மூலிகைகளின் மகத்துவங்கள்! | நம் வெளியீடு: நம் வீடுகளிலும் புல்வெளிப்பகுதிகளிலும் மிகச் சாதாரணமாக வளரக்கூடிய கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கான கைகண்ட மருந்தாகும். அதேபோல நம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பல நறுமணப் பொருட்கள், சுவைக்காக மட்டும் நாம் காலம் காலமாகப் பயன்படுத்தவில்லை. அவற்றுக்கு நல்ல மருத்துவக் குணம் உண்டு. அதை அறிந்துதான் நம் சமையல் முறை உருவாக்கப்பட்டு இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவை அனைத்துமே தாவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதுபோன்ற 50 மூலிகைகளின் மருத்துவக் குணங்களையும் பயன்களையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.

மூலிகையே மருந்து
டாக்டர் வி. விக்ரம்குமார்  
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications

தாமரைபாரதியின் நூல் வெளியீடு | திண்ணை: கவிஞர் தாமரைபாரதியின் ‘இங்குலிகம்’, ‘தெறுகலம்’ ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று (23.11.24) மாலை 5.30 மணி அளவில், சென்னை தாமஸ் மவுண்ட், பிசிஎம் காலனி தெருவில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக அலுமினி கிளப்பில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் இமையம், கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், கரிகாலன், வேல்கண்ணன், தேவசீமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.

பெண்கள் குறும்பட விழா: ஸ்த்ரீ பிலிம் பெஸ்டிவல் என்கிற பெயரில் பெண்கள் குறும்பட விழா இன்று (23.11.24) மாலை 3 மணிக்கு சென்னை கே.கே.நகர், டிஸ்கவரி பேலஸில் நடைபெறவுள்ளது. ‘காவிண்ட விளி’, ‘என்ன கூந்தலுக்கு’, ‘சாய்ஸ்’, ‘ப்ளாக்’, ‘1234’ உள்ளிட்ட பல படங்கள் இதில் திரையிடப்படவுள்ளன.

அக்கினிப் பரீட்சை முன்வெளியீட்டுத் திட்டம்: ரஷ்ய எழுத்தாளர் அலெக்சேய் தல்ஸ்தோயின் புகழ்பெற்ற நாவலான ‘அக்கினிப் பரீட்சை’, முன்வெளியீட்டுத் திட்டத்தில் மின்னங்காடி பதிப்பகம் வழியாக வெளியிடப்படவுள்ளது. இது ரஷ்யப் புரட்சியைப் பின்னணியாகக் கொண்ட நாவல். முன்னேற்றப் பதிப்பகம் முதன்முதலாக 1970களில் வெளியிட்டது. முன்பதிவுக்கான தொடர்பு எண்: 72992 41264

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in