பூக்காமல் நின்றுவிட்ட இருசி | அகத்தில் அசையும் நதி 1

பூக்காமல் நின்றுவிட்ட இருசி | அகத்தில் அசையும் நதி 1

Published on

இயல்பில் நானொரு கதை சொல்லி. இங்கும் நான் அதைத்தான் செய்யப்போகிறேன். எங்கள் வீட்டுத்தோட்டத்தில் ஒரு குண்டுமல்லிச் செடி இருந்தது. நல்ல வாசனையுடன் பெரிய பெரிய மலர்களாகப் பூக்கும். மொட்டு வெடிப்பதற்குள் பறித்துவிடுவேன். என்றாவது பறிக்க முடியாமல் போய்விட்டால், தோட்டமெங்கும் ஒரே வாசனையாக இருக்கும். தெருவில் போவோர் வருவோர் நாசி களையும் அந்த நறுமணம் நிரப்பும்.

சில பேர் என்னிடம் வந்து இந்தச் செடியிலிருந்து தமக்கொரு செடியைக் கொடுக்கும்படி கேட்பார்கள். அப்படிக் கேட்டவர்களில் ஒருத்தி செல்லபாங்கி அக்கா. விதைபோட்டு முளைப்பதில்லை இச்செடி. “எப்படிக் கொடுக்க முடியும்?” என்றேன். “ஒடித்துக் கொடு, ஊன்றி வைத்துப் பார்க்கிறேன்” என்றாள்.

மொதலுக்கே மோசம் வந்துடும் போல ருக்கே என்று எண்ணியவாறே, “அதெல்லாம் ஒத்துவராது, ஒடிச்சி வச்சால்லாம் பொழைக்காது. செடியாத்தான் வைக்கணும். நீங்க வேணும்னா பண்ணையில தேடிப்பாருங்களேன்... இதே ரகச் செடி கிடைக்கும்” என்றேன்.

‘பண்ணயில வாங்குறதுக்கு நீ என்ன செத்தயோசன சொல்லுறது?’ என்பது போல ஒருவிதமாகப் பார்த்தாள். “சரி, ஒரு வாரம் கழிச்சி வாங்க தாரேன்” என்றேன். “இல்லேன்னு சொல்லுறதும் நாளைக்கின்னு சொல்லுறதும் ஒண்ணுதான்னு எனக்கும் தெரியுங்ச்சி” என்று பழிப்பு காட்டிவிட்டுச் சென்றாள்.

இனிமேல் இவள் நம்மிடம் வந்துபூச்செடி கேட்க மாட்டாள் என்றே தோன்றியது. இருந்தாலும் இதுபோலக் கேட்பவர்களுக்கு எப்படிக் கொடுக்கலாம் என்கிற யோசனையோடு தோட்டத்திற்குச் சென்றேன். நாலாபுறமும் ஓடிய அதன் சிறு சிறு சிம்புகளைத் தரை யோடு கிடத்தி அதன்மீது மண்ணள்ளி வைத்துப் பதியம் போட்டேன். எப்படி யும் ஒரு வாரத்தில் இதிலிருந்து வேர் இறங்கிவிடும் என்று தோன்றியது. சரியாக எண்ணி ஏழாம் நாள் வாசலில் வந்து நின்றாள் செல்லபாங்கி அக்கா.
“வாங்கக்கா.”
“ம்.”
“தண்ணி குடிக்கிறியளா?”
“ஆமா மேலத் தெருவுலேருந்து தண்ணி குடிக்க ஒவ்வூட்டத்தான் தேட்டந்தேடிக்கிட்டு வாறனாக்கும்?”
“சரி தண்ணி குடிக்க வேண்டாம். வந்து இப்புடி செத்த ஒக்காருங்க.”
“நான் ஒக்கார வல்லங்கச்சி.”
“அப்பறம் வேற என்ன சங்கதியா வந்திய?”
“பூச்செடிதான் குடுக்க முடியாதுன்
னுட்ட. பூவாவுது ஒரு நாளைக்குத் தருவியான்னு கேட்டுப் போவலா முன்னு வந்தேன்.”
“பூவா?”
“அட ஆமாங்கச்சி. விடிஞ்சா வெள்ளிக் கெழமயில்ல. வீட்டுக் குள்ள இந்தப் பூவ கொண்டுபோயி வச்சா வீடே வாசிக்குமுல்ல அதான்” என்ற வள், “சரி எனக்கு நிக்க நேரமில்ல. தர முடியுமா, முடியாதா அதச் சொல்லு மொதல்ல” என்று பரபரத்தாள். “இல் லன்னு யாரு சொன்னா. ஒங்களுக்கு இன்னக்கி பூவும் தர்றேன், பூச்செடியும் தர்றேன்.”

“நெசமாவாங்கச்சி சொல்ற?”
“நான் எதுக்காவ பொய் சொல்லப் போறன்?”
களைக்கொத்தியால் நோகாமல் வெட்டி எடுத்து வேர்மண் உதிர்ந்து போகாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்டவளுக்கு வாயெல்லாம் பல்.
“லெட்சுமி தேவி மடிக் கனத்த எறக்கி வைக்க இதுமேரி நல்ல பூவாசமடிக் கிற எடம் எங்கருக்குன்னு தேடிக்கிட்டு வருவாளாம். அதுவும் வெள்ளிக் கெழமன்னா வீடு வீடா வந்து பாப்பாளாம் அதான்.”
“அது என்னக்கா மடிக்கனம்? அது எதுக்கு ஒங்களுக்கு?”
“நல்லா கேட்ட போ. மடிக்கன முன்னா மண்ணுந்தெருவுமா இருக்கு முன்னா நெனச்ச? லெட்சுமியோட மடிங்கச்சி. அது நெறைய பொன்னும் பொருளுமா இருக்குங்கச்சி. அதுக்குத்தான் இந்தப் பூ. இத யாருகிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காத. அடுத்த வெள்ளிக்கு நீயும் வச்சிப்பாரு.”
அபூர்வமான தகவலைச் சொல் வதைப்போலப் போகும்போது சொல்லிவிட்டுப் போனாள்.

இந்தக் குண்டுமல்லிச் செடியிலிருந்து பதியம்போட்டுப் புதிய செடியைக் கொடுத்தது போலவே தான் ஏற்கெனவே எழுதிய படைப்புகளிலிருந்து இங்கே புதிய தொடரைத் தர இருக்கிறேன். செல்லபாங்கி அக்காவிடம் கொடுத்த பதியனிலிருந்து இன்னும் சில நாள்களில் குண்டு மல்லி பூக்கும். அதே வேர்கள்தான், ஆனால் பூக்கள் புதியவைதானே!

இருசி: இத்தொடரில் நானும் வருவேன், என்னுடைய கதை மாந்தர்களும் வருவார்கள். நிலமும் கடலும் காடும் வரும். தன் அற்பத்தனமான ஆசைகளோடு செல்லபாங்கி அக்கா அவ்வப்போது வருவாள். சில வரிகளை வாசிக்கும்போது உங்களையேகூட நீங்கள் தரிசிக்க முடியும். இப்போது ‘இருசி’யைப் பார்ப் போம். இருசி ஒரு சிறுகதையின் தலைப்பு. இருசி என்பது முப்பது வருடங் களுக்கு முன்புவரை கிராமப்பகுதிகளில் புழக்கத்தில் இருந்த ஒரு சொல்.

பருவமடையும் வயது வந்தும் பூப்படையாமல் இருக்கும் பெண்ணைக் குறிக்கும் சொல். அப்போது ஊருக்கு ஓரிரண்டு பெண்கள் அப்படி இருந்தார்கள். ஆனால், இப்போது இச்சொல் பயனற்ற ஒரு சொல்லாகி வழக்கிலிருந்து மெல்ல மறைந்து போய்க்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்பிள்ளைகள் பத்து வயதிலேயே பூப்பெய்திவிடுகிறார்கள். இதற்கு உணவுப் பழக்கமும் வாழ்க்கைமுறை மாற்றமும்தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நம் கதையில் வரும் இருசிப் பெண்பச்சைக்கிளி. ஆறு அண்ணன்களுக்குப் பிறகு பிறந்த ஒரே தங்கை. பச்சைக்கிளியின் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும்போது களிமண்ணால் அழகான ஒரு பெண் பொம்மையைச் செய்து அதன் உச்சந்தலையில் கையை வைத்துச் சற்றே அழுத்தி விட்டால் பொம்மை எப்படி யிருக்குமோ அப்படி இருப்பாள். கட்டாந்தரையில் நட்டுவைத்த வாழைக்கன்றுபோல தரைங்கி போயிருப்பாள்.

கிராமப் புறங்களில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு தனிமனிதருடைய வாழ்க்கைக்கும் ஒத்துவருவதுபோல அல்லது வழிகாட்டுவதுபோல அல்லது நடப்புப் பிரச்சினைகளை விளங்கிக்கொள்வது போல, இன்னும் சொல்லப்போனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வது போல மரபுவழியான கதைகள் பல உலவும். அதே போன்றதொரு கதை இருசிகளுக்காகவும் இருக்கிறது.

‘ஐந்து அண்ணன்களும் அருக்காணி தங்கையும்’ என்பது கதை. இருசிகளின் பிறப்பு சொல்லி வைத்ததுபோல ஒரே மாதிரியாக ஐந்தாறு அண்ணன்களுக்குப் பிறகு அபூர்வமாக ஒரு தங்கை. தங்கைக்குப் பிறகு அம்மா, அப்பா இறந்து போய் விடுகிறார்கள். அண்ணன்கள் மற்ற இளைஞர்களைப் போல வாலிப்பான உடல்வாகு கொண்டவர்களாக இருக்கும்போது, தங்கை மட்டும் ஏன் இப்படி என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஒரு வேளை ஐந்தாறு அண்ணன்களில் ஒருவர் மட்டுமாவது பெண்ணாகப் பிறந்திருந்தால் இவர்கள் இருசியாய் இறுகிப் போகாமல் மற்ற பெண்களைப் போலப் பூத்துக் காய்த்துப் பெற்றுப் பெருகி இருப்பார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியோ, ஆனால் இந்த அருக்காணி கதையிலிருந்து நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்ன என்பதைப் பார்க்கலாம்.

அருக்காணி இருசி என்பதற்காக அனைவராலும் புறக்கணிக்கப் படுகிறாள். பெண்களுக்கு நடத்தி வைக்கப்படும் எந்த ஒரு மகிழ்வான நிகழ்வும் இவளுக்குக் கிட்டவில்லை. மனதில் எழும் இயல்பான ஆசை கள், பாலியல்ரீதியான தேவைகள் எதைப் பற்றியும் அவளது குடும்பமும் உறவுகளும் அக்கறை கொள்ளவில்லை.

மாறாக அவளது உழைப்பை அண்ணன்கள் சுரண்டுகிறார்கள். அவளாகவே ஓர் உலக்கையைத் தன் கணவனாக வரித்துக்கொள்கிறாள். ஒருகட்டத்தில் அவளது அண்ணன்கள் அந்த உலக்கையையும் அவளிடமிருந்து பிடுங்கி ஏதோவொரு கிணற்றுக்குள் வீசிவிடுகிறார்கள். அவள் தன் வாழ்வின் அந்திவரை அந்த உலக்கை யைத் தேடி கிணறுகள் இருக்கும் திசை யெங்கும் அலைந்தபடி இருக்கிறாள்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in