Last Updated : 02 Dec, 2013 01:08 PM

 

Published : 02 Dec 2013 01:08 PM
Last Updated : 02 Dec 2013 01:08 PM

சென்னைப் புத்தகச் சந்தை-2014: என்ன செய்ய வேண்டும்?

பழையன கழிதலும் புதியன புகுதலும் எப்போதும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். சென்னைப் புத்தகச் சந்தையை பல ஆண்டுகளாக நடத்திவரும் ‘பபாசி’யில் இவ்வாண்டு புதிய குழு பொறுப்பேற்றுள்ளது. எனவே, இது செய்யப்பட வேண்டிய காரியங்களை விவாதிக்கப் பொருத்தமான தருணம்.

சென்னைப் புத்தகச் சந்தை இன்று தமிழ்ப் பதிப்புலகின் நாடித்துடிப்பு என்றால் மிகை அல்ல. அதன் முதல் பாய்ச்சல் 25ஆம் ஆண்டு நிகழ்வில் ஏற்பட்டது. இப்போது அடுத்த பாய்ச்சலுக்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். வரும் ஆண்டு 37 ஆவது சந்தை. 40 ஆவது சந்தையில் பெரும் விரிவாக்கத்தை மேற்கொள்ள இப்பொழுதே திட்டமிட்டுச் செயல்படலாம். இதில் பபாசிக்கும் அரசுக்கும் பொறுப்புகள் உள்ளன.

புதுதில்லியில் உலகப் புத்தகச் சந்தையும் பிற துறை கண்காட்சிகளும் ப்ரகதி மைதானத்தில் நடக்கின்றன. (ப்ரகதிக்கு முன்னேற்றம் அல்லது முன்னேற்றக் களம் என்று பொருள்). 149 ஏக்கர் பரப்பில் பத்துப் பதினைந்து மாபெரும் அரங்குகள் உள்ளன. 61,000 சதுரமீட்டர் உள்பரப்பும் ஒரு லட்சம் சதுர மீட்டர் வெளிப்பரப்பும் இக்கண்காட்சி மைதானத்தில் உண்டு. இத்தகைய ஒரு அமைப்பு சென்னையில் உருவாக வேண்டியது அவசியம். அதுவரை சென்னையில் புத்தகச் சந்தைக்கு ஒரு நிரந்தரமான மையமான, விஸ்தாரமான இடத்திற்கு அரசு ஒழுங்கு செய்ய வேண்டும்.

பபாசியின் ஆளும் குழு தேர்தலில் மாறக்கூடியது. இத்தகைய நிரந்தரமற்ற பின்னணியில் புத்தகச் சந்தை நிர்வாகம் இருப்பது தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்துவதை சாத்யதிமற்றதாக்குகிறது. எனவே சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் புத்தகச் சந்தைகளை நிர்வகிக்கத் தொழில்திறன் கொண்ட ஒரு அணியை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். புத்தகச் சந்தைகளை நிர்வாகிக்க பபாசியின் பொறுப்பில் இயங்கும் லாப நோக்கமற்ற ஒரு நிறுவனத்தைக் கட்டமைக்கலாம்.

சந்தையின் தேவைக்கு ஏற்ப இரண்டோ மூன்றோ அரங்குகள் ஏற்படுத்தும் பரந்த இடவசதி உடனடி அவசியம். பல புத்தகச் சந்தைகளில் அதிக பதிப்பாளர்களை வரவேற்கிறார்கள். ஒவ்வொரு பதிப்பாளரையும் அதிக இடம் வாடகைக்கு எடுக்க ஊக்குவிக்கிறார்கள். சென்னையில் துரதிருஷ்டவசமாக நேர் எதிர்நிலை. பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பதிப்பாளருக்கும் அளிக்கப்படும் அதிகபட்ச இடம் வரையறுக்கப்பட்டும் குறுக்கப்பட்டும் வருகிறது. இதற்கு இடப்பிரச்சனை முக்கியக் காரணம். அத்தோடு நிர்வாகிகளுக்கு பிறர் வளர்ச்சி கண்டு பெருமிதமடையும் உயர் மனநிலை அமைய வேண்டும்.

சென்னைப் புத்தகச் சந்தையை புத்தகம் விற்கும் மையம் என்பதற்கும் மேலாக ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாற்ற வேண்டும். எழுத்தாளர்-வாசகர் சந்திக்கும் உரையாடும் அரங்காகவும் பதிப்பாளர் தம்மிடையே உரையாடும் இடமாகவும் கடைந்து திரளும், உலகப் பதிப்புச்சூழல் பற்றிய புதிய செய்திகளை அறியும் கூடமாகவும் அது செயல்பட வேண்டும். இதற்கான ஒழுங்குகளைச் செய்வது பபாசியின் கடமை. தமது அரங்குகளை வாசகர் கண்கவரும் விதம் மேம்படுத்தி சிறப்புற வடிவமைக்கப் பதிப்பாளரை பபாசி தூண்ட வேண்டும்.

புத்தகச் சந்தை வாசகரை எதிர்பார்த்துக் காத்திருந்த காலத்தில், வெளி அரங்க நிகழ்ச்சிகள் தேவைப்பட்டன. சினிமா நட்சத்திரங்களும் அரசியல்வாதிகளும் அவசியப்பட்டனர். இன்று வாசகர் பெருந்திரளாக வருகை தந்த பிறகு இந்நிகழ்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். புத்தகச் சந்தை நிகழ்ச்சிகள் அரங்கிற்கு உள்ளே நடப்பதே சிறப்பு. நம் கண்கூடாகப் பார்ப்பது, புத்தகம் வாங்க வருபவர்கள் வெளி அரங்கில் நட்சத்திரங்களை கண்டு அங்கே அமர்ந்து அவர்கள் ஓயாமல் சந்தை முடியும் வரை பேசிய பின்னர் அங்கிருந்தே திரும்பிவிடுவது. அடுத்ததாக ஓயாத அறிவிப்புகள் மூலம் அரங்கினுள் இருக்கும் வாசகர் வெளியே இழுக்கப்படுகின்றனர். பெரும்புள்ளிகளை அழைக்கையில் நூல் விற்பனையைவிட அரங்கை நிரப்புதல் முக்கியமாகிறது. எனவே புத்தக அரங்கினுள்ளேயே சிறிய அரங்குகள் அமைத்து வாசகர் - எழுத்தாளர் சந்திக்கவும் பதிப்பாளர் விழிப்புணர்வு அடையவுமான உரையாடல்களை ஏற்படுத்துவது நல்லது.

பெருங்கூட்டம் திரளுமிடத்து சில அடிப்படை வசதிகள் தேவை. ஓய்வாக அமர, நண்பர்களுடன் விவாதிக்க இடவசதி தேவை. பானங்களும் உணவும் ஆரோக்கியமான சூழலில் நியாயமான விலையில் விளம்பப்படுவது அவசியம். கழிப்பறைகள் மனிதர் பயன்படுத்தத் தக்கவையாக இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ம் தனி வசதிகள் தேவை.

கண்ணன் - kannan31@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x