சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? | நூல் வெளி

சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? | நூல் வெளி
Updated on
2 min read

சிறைக் கைதிகளின் உரிமைகள் தொடர்பாகத் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வருபவர் வழக்கறிஞர் பா.புகழேந்தி. அவரது இந்த நூல் சிறைச்சாலையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்கிறது. நீதிமன்றங்கள் குற்றங்களை ஈர்க்கின்றன என்கிற பிரான்ஸ் காஃப்காவின் வரிகளைப் போல் சிறைச்சாலை நல்வழிப்படுத்துவதற்குப் பதிலாக எப்படிக் குற்றங்களைப் பெருக்குகிறது என்பதை யதார்த்தமான சம்பவங்கள் வழி இந்த நூல் விவரிக்கிறது.

1999இல் சென்னை மத்திய சிறைச்சாலைக் கலவரத்தின் பின்னணியை இந்த நூலின் ஒரு கட்டுரை இயம்புகிறது. சிறை அதிகாரி ஜெயக்குமார் கொல்லப்பட்ட வன்முறைச் சம்பவம் எனப் பொதுவாகச் சொல்லப்படும் இந்தக் கலவரத்தின் காரணங்களை புகழேந்தி, காட்சிகளாக விவரிக்கிறார். சிறைவாசிகளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், இழைக்கப்பட்ட வன்முறை எல்லாம் இதற்குப் பின்னால் ஊக்கியாகச் செயல்பட்டுள்ளன என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

சர்வதேச எல்லையில் பிடிபட்ட ஈழத் தமிழரைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டுக் கைதுசெய்து சிறையிலடைத்தது, அவர் இறக்கும் தறுவாயில் அவரை அரைப் பிணமாகச் சொந்தக்காரர் வீட்டில் வீசி விட்டுச் சென்றது எனக் காவல் துறையின் மனிதாபிமானமற்ற செயல்களை ஒரு கட்டுரை சொல்கிறது. தங்க நகைகளைத் திருடும் ஒருவரைக் கொண்டு தங்களுக்குச் சொத்துச் சேர்த்துக்கொள்ளும் காவல் துறை அதிகாரிகளைப் பற்றிய ஒரு கட்டுரை, அந்த அமைப்பின் மீது விமர்சனத்தை எழுப்புகிறது.

ஆறுமுகம் என்கிற ஆயுள் தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் ஓர் அரசியல் தலைவரின் கைது என்ன மாதிரியான பாதிப்பை நிகழ்த்துகிறது என்பதை ஒரு கட்டுரை சொல்கிறது. பரோலில் வெளிவந்து ஊருக்குச் சென்றிருந்த ஆறுமுகம், சிறைச்சாலைக்குக் குறித்த காலத்திற்குள் திரும்ப பேருந்து நிலையம் வந்தபோது, பேருந்துகளே இல்லை.

மு.கருணாநிதி கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அன்று பேருந்துகள் ஓடவில்லை. இருசக்கர வாகனத்திலும் ஓட்டமும் நடையுமாகவும் அவர் சிறைச்சாலைக்குச் சற்றுத் தாமதமாக வந்துசேர்ந்துவிட்டார். ஆனால், அந்தத் தாமதமும் ஓர் ஒழுங்கீனமாகப் பார்க்கப்பட்டு, அவரது ஆவணத்தில் பதிவுசெய்யப்பட்டுவிட்டது. நன்னடத்தையில் கைதிகள் விடுவிக்கப்பட்ட காலங்களிலெல்லாம் அவர் இந்த ‘ஒழுங்கீனத்தால்’ புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

சிறையில் கணக்கு வழக்கில்லாமல் சிறைவாசிகள் வன்முறைக்கு ஆளாவதைப் பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் இருக்கின்றன. சென்னை மத்திய சிறையில் இம்மாதிரியான வன்முறை நடந்தபோது நடராஜன் என்கிற கைதி இறந்துவிடுகிறார். சென்னை மாவட்ட ஆட்சியரின் அன்றைய நேர்முக உதவியாளர் ‘இது காவலர்கள் தாக்கியதால் ஏற்பட்ட மரணம்தான்’ என உள்துறைக்கு அறிக்கை அனுப்பி, சிறைக் கண்காணிப்பாளரைப் பதவி நீக்க முன்மொழிகிறார். ஆனால், அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.

அந்த அதிகாரியோ பதவி உயர்வும் பெற்றுள்ளார். சேலம் மத்தியச் சிறையில் அதிமுக பிரமுகர் சுகுமார் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறை அதிகாரி கருப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். ஜெ.ஜெயலலிதா சேலத்திற்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, அன்றைய ஆளும் அரசைக் கண்டித்தார். ஆனால், நடவடிக்கைக்குப் பதிலாக அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதிமுக அரசு அமைந்தபோதோ அந்த அதிகாரி, கூடுதல் சிறைத் துறைத் தலைவரானார் என்பது நகைமுரண்.

விசாரணையை முடிப்பதற்காகக் கையில் கிடைப்பவரை வைத்து வழக்கை முடிக்கும் வழக்கத்தை வெகுநாள் பழக்கமாக வைத்திருக்கிறது காவல் துறை. இதற்கு உதாரணமாக ஒரு கொலை வழக்கையும் பிரபலமான பெசன்ட் நகர் பாரத ஸ்டேட் வங்கிக் கொள்ளை வழக்கையும் புகழேந்தி இதில் சுட்டிக்காட்டியுள்ளார். பெசன்ட் நகர் கொள்ளை வழக்கில் காவல் துறை வடசென்னை வெள்ளை ரவி கும்பல்தான் குற்றவாளி என முடிவுசெய்து ஒப்புதல் வாக்குமூலங்களையும் வாங்கிச் சிறையில் அடைத்துவிட்டது.

ஆனால், பல மாதங்களுக்குப் பிறகு வேறு வழக்கில் சென்னை மத்தியக் காவல் துறையால் கைதுசெய்யப்பட்ட ஒரு கும்பல், தாங்கள்தான் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டது எனக் கூறியுள்ளது. சர்ச்சைக்குள்ளான ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’ நாவலில் ‘எல்லா விலங்குகளும் சமம். ஆனால், சில விலங்குகள் அவற்றைவிடக் கூடுதல் சமம்’ எனப் பகடிசெய்யப்பட்டிருக்கும். புகழேந்தி இந்த நூல் வழி இதைத்தான் காத்திரமாகச் சொல்கிறார்: சட்டம் எல்லோருக்கும் சமம். ஆனால், சிலருக்குக் கூடுதல் சமமாக இருக்கிறது.

கம்பிக்குப் பின்னால் வதைபடும் மானுடம்
பா.புகழேந்தி
பொதுமைப் பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9751014559

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in